26.8.09

அழிக்கப்படும் சரித்திர சுவடுகள் - ஆய்வுக்கட்டுரை!

சரித்திரத்தை மறைக்கத் (மறக்க) துடிக்கும் கூட்டம். அண்மைய காலமாக மலேசியாவில், வெகு அதிகமாக விவாதிக்கப்படும் விடயம் ஒன்று உண்டு என்றால் அது கம்போங் புவா பாலா விவகாரமாகத்தான் இருக்கும். கம்போங் புவா பாலா, எதோ ஒரு சரித்திர சுவடு என்பது போன்ற வாதங்களை முன்னிறுத்தி தங்களது காரியத்தை சாதித்துக் கொள்ள துடிக்கின்றனர் சிலர். அந்த சிலருக்கு தங்களது ஆதரவை வழங்குவது போல நடித்து தங்களது அரசியல் காய்களை நகர்த்துகின்றனர் சிலர். கம்போங் புவா பாலா உண்மையில் ஒரு சரித்திர சுவடா? பாரம்பரிய குடியிருப்பா?என்பதுதான் இப்போது பெரும்பான்மையோரின் கேள்வியாக இருக்கின்றது. கம்போங் புவா பாலாவிற்கு உண்மையில் சென்று வந்தவர்களுக்கே அது தெரியும். பாரம்பரியம், சரித்தியாம் எனப்படும் இடத்தில், பாரம்பரியத்தின் அடிப்படையான வழிப்பாட்டுத்தளம் (ஆலயம்) ஒன்று கூட இல்லையே? (இப்பொழுது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த சிறு கோவில்தான், பாரம்பரிய சுவடு என்று சொல்லாதிர்கள்!) எண்பது வருடம் மரம் இருக்கிறதாம்; அதுதான் பாரம்பரியமாம், சரித்திரமாம்! கம்போங் புவா பாலா குடியிருப்பில் சரித்திரம், பாரம்பரியம் என்ற பேச்சுகள் எல்லாம், தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்ள குறிப்பிட்ட தரப்பினர் எடுத்துக்கொண்ட ஆயுதம் என்பதுதான் உண்மை. கம்போங் புவா பாலா பிரச்சனையில் முன்னிறுத்தப்படுவது "புனையப்பட்ட சரித்திரம்". இதுபோன்ற புனையப்பட்ட சரித்திரத்தை தற்காக்க நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தையை, உண்மை சரித்திர சுவடுகள் அழிக்கப்படும்போதும், மறைக்கப்படும்போதும், மறக்கப்படும்போதும் நாம் வெளிப்படுத்தினால் உண்மை சரித்திரமாவது தர்க்காக்கப்படும் என்பது உண்மை.

மலாயாவின் சுதந்திரத்தில் நம் தமிழ் பிரதிநிதிகளின் பங்கு; மலேசியாவின் உருவாக்க சரித்திரத்தில் நம்மவர்களின் (இது மஇகா "நம்மவர்" களை குறிக்கவில்லைங்க!) பங்கு, மலாயாவை செல்வம் கொழிக்க செய்த நம்மினத்தானின் உழைப்பு போன்ற பல விடயங்கள், சரித்திர பாடத்திலிருந்தும், பாடப்புத்தகங்களிலிருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்படுவதும், பின்னொரு நாளில், இந்த நாட்டின் சுதந்திரத்திலும், வளர்ச்சியிலும் நம் இனத்திற்கு அறவே பங்கில்லை எண்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க ஆளும் தரப்பு முனைப்பாக செயல்படுகின்றது. ஆளும் கூட்டணியில் அதிகாரப்பதுமைகளாக அமர்ந்துக்கொண்டுள்ள நமது "இனத்தின் பிரதிநிதிகளோ", தங்களின் நாற்காலி சுகத்தை பேணிக்காப்பதில் குறியாக இருப்பதால், இதையெல்லாம் அவர்கள் கண்டுக் கொள்ளப்போவதில்லை. இந்த சரித்திர "அழிப்பு/பதுக்கல்", சுதந்திர மலேசிய உருவாகத்தைத்தாண்டி, வெள்ளையர் ஆளுமைக்குட்பட்ட மலாயா சரித்திரத்தைத்தாண்டி, மலாக்கா மலாய் இராச்சியத்தின் சரித்திரத்தையும் மிஞ்சிய சரித்திரத்தை அளிக்க, மறைக்க, மறுக்க இந்த ஆளும் வர்க்கம் முனைந்து விட்டது என்பது, இந்த ஆய்வுக் கட்டுரையின் முன்னோட்டமாக இருக்கட்டும்.

இந்த சரித்திர பதுக்கல்/அழிப்பு இன எல்லை வரையறைகளைத் தாண்டி செல்கின்றதுதான் இன்னும் கொடுமையான விவரம். ஆளும் வர்க்கமானது ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைக்காமல், இலாபத்தை மட்டுமே முன்னிறுத்தி, இந்த மலையக மண்ணில் நிறைந்துக்கிடைக்கும் சரித்திரசுவடுகளை அளிப்பதிலும், பதுக்குவதிலும் குறியாக இருக்கின்றது என்பதுதான் வேதனையான விடயம். இதன் முதல் எடுத்துக்காட்டாக, பினாங்கு தீவிற்கு அருகில் இருக்கும் மற்றொரு குட்டித்தீவான ஜெரஜாக் தீவின் (Pulau Jerejak) சரித்திரத்தைப்பார்ப்போம்.
- தொடரும்-