18.4.08

அலரும் அமீட் அல்பார்.....

அனைத்துலக பொதுமன்னிப்பு சபை தனது வருடாந்திர அறிக்கையில்,தடுப்புக்காவலில் வைக்கப்படுவோரின் மர்ம மரணங்களில் மலேசிய காவல்துறையினருக்கு சம்பந்தம் உள்ளது என்று கூறியுள்ளது.விசாரணைக்காக காவலில் வைக்கப்படுவோர் மர்மமாக கொல்லப்படும் நடவடிக்கையில்(silent killing) ஈடுபடும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கூற்றை தொடர்ந்து மலேசிய அரசாங்கம் அனைத்துலக பொது மன்னிப்பு சபையின் மீது சீறிப்பாய்கிறது.மலேசிய காவல்துறையின் துணைத்தலைமை ஆணையர்,இந்த கூற்று உண்மையற்ற ஒன்று என்று கூறியிருந்தார்.இதனைத் தொடர்ந்து மலேசிய உள்துறை பாதுகாப்பு அமைச்சரான,சைய்ட் ஹமிட் அல்பார்,அனைத்துலக பொது மன்னிப்பு சபையின் அறிக்கை,பொய்யான அறிக்கை என்றும்,ஆதரமற்ற கூற்று என்றும் சீறிப்பாய்கிறார். “அனைத்துலக பொது மன்னிப்பு சபைக்கு யார் இந்த தகவல்களை தந்தனர்??அவர்கள் நமது நாட்டில் வந்து ஆய்வு செய்தனரா??அனுமானத்தின் பேரிலெல்லாம் அறிக்கை வெளியிடக்கூடாது” என்றெல்லாம் அலறுகிறார் மாண்புமிகு அமைச்சர்.

அனைத்துலக பொதுமன்னிப்பு சபையின் அறிக்கையானது 16-04-2008 அன்று வெளியிடப்பட்டது.அன்றைய தினம் காலை,திருமதி சாரா லிலி அவர்கள் பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தின் முன்பு,நான்கு வருடங்களுக்கு முன்பு போலிஸ் காவலில் இருந்தபொழுது இறந்த தனது மகன் பிரான்சிஸ் உடையப்பனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.பிரான்சிஸ் காவல் நிலையத்திலிருந்து தப்பிச்சென்று ஆற்றில் குதித்து இறந்து விட்டதாக போலிஸ் தரப்பு கூறியது.சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கிள்ளான் ஆற்றில்,அவரின் உடல் சிதைந்த நிலையில் கிடைத்தது.மரண விசாரணை நீதிமன்றத்தை நாடிய சாராலிலிக்கு கிடைத்த பதில் “பிரான்சிஸ் மரணத்தில் எந்தவொரு சூதும் நிகழவில்லை” என்ற பதில்தான்.இந்த தீர்ப்பை எதிர்த்து சாராலிலி தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கில் சாராலிலி அவர்களின் சார்பாக வாதாடியவர் வழக்கறிஞர் உதயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சிஸ் உடையப்பன் சம்பவம் மட்டுமல்ல,இதைப்போன்ற இன்னும் பல சம்பவங்கள் நடந்தன.போலிஸ் தடுப்புக்காவலில் மர்மமாக இறந்தோரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.இந்த மரண சம்பவங்களுக்கு எல்லாம் காவல்துறையினர்தான் முழுக்க,முழுக்க காரணம் என்று யாரும் கூறவில்லை.ஆனால் போலிசும் ஒரு காரணம் என்றுதான் அனைத்துலக மன்னிப்பு சபையின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.காவல்துறையின் மர்ம கொலை நடவடிக்கைகள் இருக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.இதற்கே மலேசிய போலிசுக்கும்,அரசாங்கத்திற்கும் வியர்த்து விட்டது.எங்கே,அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மலேசியாவிற்குள் வந்து இரகசிய விசாரணைகள் நடத்தி விடப்போகின்றனர் என்ற பயம்தான் இந்த வியர்த்தலுக்கு காரணம்.


மலேசியாவில் அனைத்துலக பொதுமன்னிப்பு சபை கூறுவதுபோல் மர்ம கொலைகளில் காவல்துறை ஈடுபடவில்லையென்றால்,நேரடியாக, அனைத்துலக பொதுமன்னிப்பு சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ள கூற்றுகளை முடிந்தால் ஆதரத்தோடு முன்வைக்குமாறு சவால் வைக்கலாம் அல்லவா??

ஏன் அவ்வாறு செய்ய மலேசிய அரசாங்கத்திற்கு தோன்றவில்லை??

மலேசிய அரசாங்கத்தின் மீதும்,மலேசிய காவல்துறையின் மீதும் படிந்துள்ள கரையை நீக்க அது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமல்லவா??

இதை தவிர்த்து மற்ற சில கேள்விகளும் நம்முள் தோன்றலாம்,அவற்றில் மிக முக்கியமானது,

அனைத்துலக பொது மன்னிப்பு சபை கடந்த சில வருடங்களாக மலேசியாவில் தனது அலுவலகத்தை நிர்மாணிக்க அனுமதி கோரிய போதிலும்,தொடர்ந்து அதற்கான அனுமதி மறுக்கப்படுவது ஏன்??

அதைவிட மிக முக்கியமானது என்னவென்றால்……

அனைத்துலக பொதுமன்னிப்பு சபையின் அறிக்கைக்கு பதில் அளிப்பதை விடுத்து,அனைத்துலக பொது மன்னிப்பு சபையின் மீது ஏன் சீறிப்பாய வேண்டும்??

இதற்கெல்லாம் சைய்ட் ஹமிட் அல்பார் பதில் சொல்ல மாட்டார்,காரணம் உண்மைகளுக்கு பதில் சொல்ல தெரியாத அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்தான் இந்த உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்.

No comments: