3.4.08

தொடர்ந்தும் புறக்கணிக்கபடுவோமா??(பாகம் 1)


ஏறத்தாழ 50 வருடங்களாக தொடர்ந்து ஏமாற்றப்பட்ட மலேசிய இந்தியர்கள், 2008 பொதுத்தேர்தலில் தங்களது விரக்திகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்றே கூறவேண்டும்.ஏறத்தாழ 50 வருடங்களாக தங்களை வஞ்சித்த பாரிசான் நேஷனல் அரசாங்கத்தை இவர்கள் கைவிட்டதாக சரித்திரம் இல்லை, எவ்வளவுதான் தங்களை வஞ்சித்த பொழுதிலும் பாரிசானுக்குதான் இந்தியர்களின் ஓட்டு என்ற ஒரு நிலை இருந்து வந்தது.இதற்கெல்லாம் சரியான முடிவு கிடைத்தது 2008 பொதுத்தேர்தலின் போதுதான்.ஆளும் பாரிசான் கூட்டணி அரசாங்கம் தனது 3இல் 2 பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழந்ததோடு மட்டுமல்லாமல் 5 மாநிலங்களையும் (Pakatan Rakyat) மக்கள் கூட்டணியிடம் இழந்தது;இவற்றில் 4 மாநிலங்கள் பாரிசான் வசம் இருந்த மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியர்கள் இந்நாட்டில் சிறுபான்மையினரே என்ற பொழுதிலும்,இந்தியர்களின் எழுச்சியும் பாரிசான் அரசாங்கத்தின் சரிவுக்கு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.தங்களை தொடர்ந்து வஞ்சித்த கொடுங்கோல் அம்னோவின் தலைமையிலான பாரிசான் அரசிற்கு இந்தியர்கள் தந்த பரிசானது,மலேசியாவின் அரசியல் அரங்கில் மகத்தான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.


இவ்வேளையில் மலேசிய இந்தியர்களின் தானைத்தலைவன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட ஒரு மாமேதையின் பேச்சு நினைவுக்கு வருகிறது."மஇகாவை கைவிட்டால்,இந்தியர்கள் மண்ணைத்தான் சாப்பிட வேண்டும்",என்று எகத்தாளம் பேசிய இந்த மாமேதை மார்ச் 8ஆம் தேதி மண்ணைக் கவ்வினார் என்பது குறிப்பிடத்தக்கது.மஇகா என்ற மாபெரும் கட்சி சரிந்த மணல்கோட்டையானது இந்த தேர்தலில்.மஇகா எனும் தொப்புள் கொடி உறவையும் அறுத்தெரிந்தனர் மலேசிய இந்தியர்கள்.மஇகாவின் பலவீனத்தை அடிப்படையாக தங்களது பிராச்சரத்தை மேற்கொண்ட மக்கள் கூட்டணியை நம்பி இந்தியர்கள் தங்களது வாக்குகளை மாற்றினர்.ஆனால் தற்பொழுது நடக்கும் ஒரு சில நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது,தொடர்ந்தும் நாம் ஏமற்றப்படுவோமோ என்ற மாதிரியான ஓர் உணர்வு என்னுள் எழுகிறது.இதே போன்ற உணர்வு இன்னும் எத்தனைப் பேருக்கு எழுந்துள்ளது என்பது தெரியவில்லை.


மக்கள் கூட்டணி 5 மாநிலங்களில் ஆட்சியமைத்து இன்னும் முழுதாய் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்,இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் முடிவுகளானது இந்தியர்கள் மத்தியில் எமாற்றம் கலந்த சந்தேகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.அதுதான் இந்த ஆய்வு கட்டுரையின் தலைப்பாகும்."தொடர்ந்தும் நாம் புறக்கணிக்கப்படுவோமா??"என்பதுதான் அந்த சந்தேகம்.தொடர்ந்து புதிர்கள் போடாமல் அந்த கட்சி எதுவென்ற விஷயத்திற்கு வருகிறேன்.

ஜனநாயக செயல் கட்சிதான்(DAP) நான் மேற்குறிப்பிட்ட சந்தேகத்தை ஏற்படுத்தும் கட்சி.இக்கட்சியின் அண்மைய சில முடிவுகள் நம்மை ஏமாற்றத்தை அளிக்கிறது என்றால் அது மிகையாகது.பினாங்கு மாநிலத்தில் 3இல் 2 பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்துள்ள மக்கள் கூட்டணி அரசை அதிகமாக குறை கூற முடியாது.ஏனென்றால், இம்மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் தேர்தலுக்கு முன்பே தங்களின் போரட்டத்தை தொடங்கி விட்டனர் என்பதுதான் உண்மை.தேர்தலுக்கு முன்பு,இந்தியர்களுக்கு ஜசெக ஒதுக்கிய இடங்கள் இரண்டு மட்டுமே,

1.பாகான் டாலாம் தொகுதியில் தனசேகரன்;
2.டத்தோ கெராமாட் தொகுதியில் ஜக்டீப் சிங்

இவ்விருவர் மட்டுமே முதல் கட்ட வேட்பாளர்கள் ஆவர்.ஜசெகவின் இந்த முடிவானது,இந்தியர்களின் பாரம்பரிய தொகுதியான பிறையை இந்தியர்களிடமிருந்து பறிப்பதற்கு ஒப்பாகும்.முதன்முதலில் இந்த தொகுதியில் நிறுத்தப்பட இருந்தவர் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி சோங் எங் ஆவார்.இந்நிலையில்தான் பிரபல வழக்கறிஞரான திரு.S.N.ராயர் அவர்கள் ஜசெகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.பிறை தொகுதியில் தான் சுயேட்சையாக நிற்கப்போவதாக அறிவித்தார்.அன்று மாலையே ஜசெகவிடமிருந்து வந்தது அறிவிப்பு,பிறை தொகுதியில் பேராசிரியர் இராமசாமி அவர்கள் போட்டியிடுவார்.அதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீ டெலிமா தொகுதியும் திரு.S.N.ராயர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.S.N.ராயர் அவர்கள் தனது முந்தைய அறிவிப்பிற்கு மன்னிப்பும் தெரிவித்தார்.ஆக மொத்தத்தில் பினாங்கில் ஜசெகவின் இந்திய வேட்பாளர்கள் 4 பேர் ஆயினர்.(இந்த 4 பேரும் தற்பொழுது பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.)இந்த 4 பேர் மட்டுமல்லாமல் பத்து உபான் தொகுதியில் போட்டியிட்ட (Parti KeADILan Rakyat)மக்கள் நீதி கட்சியின் மாண்புமிகு ரவிந்திரன் அவர்களோடு சேர்த்து பினாங்கில் 5 இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

மாநில ஆட்சிக்குழுவிலும் 2 இந்திய பிரதிநிதிகள் அமையும் வாய்ப்பு அமைந்தது,ஆனால் பேராசிரியர் அவர்களை தவிர்த்து மற்ற எவரும் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இல்லாததால்தான் பினாங்கில் ஒரே ஒரு இந்தியர் ஆட்சிக்குழுவில் உள்ளார்.(மற்ற நால்வரும் தங்களது தொழிலை இதற்கு காரணமாய் காட்டியுள்ளனர்)மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியர் ஒருவர் துணை முதல்வர் ஆனதும் பினாங்கில்தான்.இதே போன்றதொரு நிலைதான் மற்ற மக்கள் கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் இடம்பெரும் என்ற நம்பிக்கை சற்று தளர்ந்துள்ளது என்றே கூற வேண்டும்.சிலாங்கூர் மாநிலத்தில் ஒரே ஒரு இந்தியர்தான் ஆட்சிக்குழுவில் அமர்ந்துள்ளார்,அவரும் மக்கள் நீதி கட்சியை சேர்ந்தவரவார்.ஜசெக சார்பாக ஆட்சிக்குழுவில் அமர்ந்துள்ள அனைவரும் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அம்னோவின் இனவாதத்தை எப்பொழுதும் குறை கூறும் ஜசெக,சிலாங்கூர் மாநிலத்தில் தானும் இனவாதத்தை நிலைநிறுத்தியுள்ளதை எப்படி நியாயப்படுத்தப்போகிறது??
சிலாங்கூரின் துணை மந்திரி பெசார் பதவியை ஏற்படுத்த அம்மாநில சுல்தான் தற்பொழுது தடையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .ஒரு வேளை அவர் சம்மதித்தாலும் நிச்சயம் ஜசெக தனது சீன பிரதிநிதியைத்தான் முன்மொழியும் என்பது தின்னம்.இதே போன்றதொரு நிலைதான் பேராக் மாநிலத்திலும்.முதலில் 2 இந்தியர்களுக்கு ஆட்சிக்குழுவில் வாய்ப்பு என்று அறிவித்த ஜசெக,மாண்புமிகு சிவநேசன் ஒருவரை மட்டுமே ஆட்சிக்குழுவில் நியமித்தது.ஜசெகவின் இம்முடிவை எதிர்த்து புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவசுப்பிரமணியம்,தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.உடனே வருகிறது அறிவிப்பு,மாநிலத்தின் சட்டமன்ற சபாநாயகராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்; ஈப்போ மாநகர் மன்றத்தின் மேயராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்.மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பது இதுவரை எந்த இந்தியரும் வகித்திடாத ஒரு பதவி,அதுவும் அதிர்ச்சி வைத்தியத்திற்கு பிறகே சாத்தியமாகியுள்ளது.இதே போல் சிலாங்கூரில் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க யாரும் இல்லையே என்பதுதான் நமது தற்போதைய கவலை.ஒரு வேளை மாண்புமிகு மனோகரன் அவர்கள் தடுப்புக்காவலில் இல்லாமலிருந்தால் அவரே அந்த அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருப்பாரோ??


"தொடர்ந்தும் நாம் புறக்கணிக்கப்படுவோமா??"
என்ற கேள்விக்கு,"புறக்கணிக்கப்படலாம்" என்பதே பதிலாக இருக்கும்,ஆனால் அப்படி நாம் புறக்கணிக்கப்படும்பொழுது நமக்காக குரல் கொடுப்பதற்கு நமது மக்கள் கூட்டணியில் உள்ள இந்திய "மாண்புமிகுக்கள்" நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம்.இவர்கள் அனைவரும் மஇகாவின் "தாக் பா லா"(Tak Pe La) என்ற கலாச்சரத்தை பின்பற்றாமல் மக்கள் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.அப்படி இருப்பார்கள் என்றும் நாம் நம்பலாம்.அண்மையில் பேராசிரியர் இராமசாமி அவர்களை நான் சந்தித்தப்பொழுது கூறினேன், "ப்ரோஃப்(Prof),மஇகா நம்மை ஏமாற்றியதால்தான் அவர்களுக்கு பாடம் கற்பித்தோம்,அதே போல் இந்த மாநில அரசும் நம்மை ஏமாற்றாது என் எதிர்பார்க்கிறோம்,அப்படி ஏமாற்றினால்,நீங்க கோபித்துக்கொள்ளாதீர்கள்,இந்த அரசாங்கத்தை எதிர்த்தும் போராட நாங்கள் தயங்க மாட்டோம்!"அதற்கு பேராசிரியர் கூறினார்,

"நான்தான் அந்த போரட்டத்தில் முதல் ஆளாக இருப்பேன்!!"தொடந்தார்,"பதவி என்னப்பா பதவி;இதெல்லாம் இன்னிக்கு வரும்,நாளை போயிடும்;நமக்கு நம்ம சமுதாயம்தான் முக்கியம்;ஆடு,மாடு கூட YB ஆகலாம்பா,இதெல்லாம் சும்மா,நம்ம தமிழ் மொழியை,நம்ம இனத்தை,நம்ம பள்ளிகளை எப்படி முன்னேற்றனும்னு பார்ப்போம்,அதற்கு இந்த பதவி தடையா இருந்தா இதையும் துக்கிப்போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பேன்!!"

இவரை போன்றதொரு தலைவர் நமது சமுதாயத்திற்கு முன்பே கிடைத்திருந்தால் நமது சமுதாயம் எங்கோ போயிருக்கும் என்று எனக்கு தோன்றியது.என்னுடன் வந்திருந்த நண்பர் இந்த உரையாடலை கேட்டுவிட்டு மிகவும் அகமகிழ்ந்தார்.இந்தியர்களுக்கு வெகு நாட்களுக்கு பிறகு சரியான தலைமைத்துவம் அமைந்துள்ளது,அதை சரியாக நமது சமூகம் உபயோகித்துக்கொள்ளும் என்று நம்புவோமாக.

பேராசிரியர் மட்டுமல்ல,மக்கள் கூட்டணியில் உள்ள மற்ற இந்திய தலைவர்களும் இதே போன்றதொரு போராட்ட குணத்தைக் கொண்டவர்கள் என்பதை அவர்களோடு பழக எனக்கு கிடைத்த ஒரு சிறிய காலத்தில் உணர்ந்துள்ளேன்.ஆகவே,இந்தியர்களுக்கு எதிராக புறக்கணிப்புகள் தொடர்ந்தாலும் அவற்றை நாம் நிச்சயம் எதிர்த்து வெல்லுவோம் என நம்பலாம்.

எனது நம்பிக்கைக்கு காரணம் என்ன?!
அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.

-தொடரும்-

No comments: