28.7.08

வேண்டாம் தனேந்திரன்

உரிமைப்படைகளின் அணிவகுப்பு

இந்த்ராஃப்....

இந்நாட்டு இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக புறப்பட்ட புயல்.
உரிமைக்காக போராடும் தைரியத்தை ஒவ்வொரு மலேசிய தமிழனுக்கும் தந்த மாபெரும் இயக்கம்.
இந்நாட்டு இந்தியர்களின் தலைவிதியை மாற்ற வந்த தன்னலமற்ற 5 தலைவர்களின் பாசறை.
மலேசிய அரசியலேயே புறட்டிப்போட்ட சரித்திர இயக்கம்.

இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற வேட்கையோடு புறப்பட்ட 5 தலைவர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலும்,1 தலைவர் அந்நிய தேசத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கும் இவ்வேளையில் இந்த்ராஃபின் பெயரை பயன்படுத்தி சில நயவஞ்சக சுயநலவாதிகள் தங்களின் சுயநலங்களை நிவர்த்தி செய்துக்கொள்வதை காண்கையில் மனம் வெம்புகிறது.

தூய்மையான போராட்டம்,சிதைந்து விடுமோ என்ற தவிப்பு நவம்பர் 25 பேரணியில் கலந்துக்கொண்ட எந்த தமிழனுக்கும் வருவது இயல்புதான்.
அந்த வகையில் எனக்கும் அந்த தவிப்பு மேலோங்கியே உள்ளது.
யார் உண்மையில் இந்த்ராஃப் தலைவர்??
நவம்பர் 25 பேரணியில் யார் இந்த்ராஃப் தலைவர் என்று பார்க்காமல் கலந்துக்கொண்டனர் இந்நாட்டு இந்தியர்கள்.இந்த்ராஃப் பேரணியை ஏற்பாடு செய்தார்கள் என்ற குற்றத்திற்காக ஐந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டப் பொழுது,இந்நாட்டு இந்தியர்கள் இந்த ஐவரையே தங்கள் மானசீக தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர்.தானைத்தலைவன்,தானே தலைவன் என்று பிதற்றிக்கொண்ட மூத்த அரசியல்வாதியை சென்ற இடத்திலெல்லாம் அடிக்காத குறையாக விரட்டினர் எம்மக்கள்.தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் சிறிதுமில்லாமல்,ஒரு நாட்டின் அமைச்சர் என்றும் பாராமல் எங்கு சென்றாலும் விரட்டியடித்தனர் எம்மக்கள்.அதற்கு ஒரே காரணம்,ஐந்து உரிமைப்போராளிகளின் மீது கொண்ட பற்றுதான்.

ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் ஒரே குரலில் கொடுங்கோல் பாரிசான்(பாசிஸான்) ஆட்சியையும்,ஒத்தூதும் மஇகாவையும் மலேசியாவின் 12வது பொதுத்தேர்தலில் எதிர்த்து நின்றது.நமது சகோதர இனங்களான மலாய்,சீன சமூகங்களின் ஆதரவோடும் பாரிசானின் மூன்றில் இரண்டு பெரும்பானமையை முறித்தோம்.அப்பொழுதும் யார் இந்த்ராஃப் தலைவர்கள் என்று பார்க்கவில்லை இந்த சமூகம்.உரிமைக்காக சிறைவாசம் ஏற்றிருக்கும் ஐவரைத்தான் நினைத்தது இந்த சமூகம்.

பதவி பித்து
ஐந்து மாநிலங்களை மக்கள் கூட்டணி பிடித்த பிறகு,தங்களை இந்த்ராஃப் ஒருங்கிணைப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு பலர்,மாநில அரசாங்கம் வழங்கும் நகராட்சி மன்றங்களின் உறுப்பினர் பதவிக்கு அடிப்போட்டனர்.சிலர் வெற்றி பெற்றனர்,சிலருக்கு ஏமாற்றம் மட்டுமே.
சிலர் பதவி கிடைக்கவில்லை என்றதும் மகஜரெல்லாம் கூட கொடுத்தனர். எம்மக்களின் உரிமையைக்கொடு என்று கேட்ட இந்த்ராஃப்-தான் பதவியைக் கொடு என்று கையேந்தி நிற்குமா??நீ தரும் விடுதலை வெறும் பிச்சையைப் போன்றது என்று விடுதலைக்கு கெஞ்சாமல்,போராட்டத்தின் கொள்கையில் உறுதியோடு இருந்து, உள்துறை அமைச்சரை சந்திக்க மறுத்த உதயாவின் வழிவந்ததுதான் இந்த இந்த்ராஃபா??
வழிமாற வேண்டாம் தோழர்களே.....
கொடுங்கோன்மையை எதிர்த்து விட்டு,அந்த கொடுங்கோலை புரிந்தவர்களிடமே பல்லிழித்து தஞ்சமடைவதை என்னவென்று சொல்வது?
எங்கள் 5 உரிமைப்போராளிகளை விடுவிக்கும் வரை உன்னோடு சமரசம் இல்லை!! இப்படித்தான் கூறுவான் எந்தவொரு சமுதாயப்பற்றுள்ள தமிழனும்.

இந்தியர்களின் தலைவிதியை மாற்ற வந்த இந்த்ராஃபை ஏமாற்று வேலைக்காரர்கள் என்பான் குடிபோதைக்கு (விஸ்கி) பெயர்போன அரசியல்வாதி,அவனை எதிர்த்து பேசிய நமது சகாவைத் தட்டிக்கொடுக்காமல், அந்த மானம் கெட்ட அரசியல்வாதியிடம் மன்னிப்பு கேட்பதுதான் தேசிய ஒருணைப்பாளரின் வேலையா??என்ன கொடுமை இது...???
கொடுங்கோல் பாரிசானை நாடு முழுவதும் எதிர்ப்போம் என்பதுதான் இந்த்ராஃபின் பொதுத்தேர்தலின் முடிவு,ஆனால் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டியவர் பாகான் டாலாம் தொகுதியில் நிறுத்தப்பட்டால் மட்டும்,அந்த தொகுதியில் மஇகாவிற்கு ஆதரவாம்.இதுதான் கொள்கைப்பிடிப்பா??
தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால்,மக்கள் சக்தியின் பெயரை உபயோகித்து கூட்டம் போடுவார்களாம்,அதில் நாமெல்லாம் போய் அமர்ந்து, ஆமாம்,ஆமாம்,நீங்கள் சொல்வதுதான் சரி என்று தலையாட்டி வர வேண்டுமாம்.தன்னலம் கருதாமல்,சமுதாயத்திற்காக சிறை சென்ற ஐவரின் விடுதலை வேண்டி எற்பட்டதுதான் மக்கள் சக்தி."மக்கள் சக்தி" என்ற சொல்லைக்கூட தங்களுடைய சுயநலத்திற்காக யாரும் உபயோகிக்கக்கூடாது என்பதுதான் எம்முடைய கொள்கை.அவ்வாறு யார் உபயோகித்தாலும் எதிர்ப்போம்.அவ்வாறு நாம் எதிர்க்கையில்,"இவன் இந்த்ராஃப் இல்லை" என்று சொல்வாராம் தனேந்திரன்,அதை சொல்ல யார் இவர்??
(தனேந்திரனின் அறிக்கை --> www.malaysiakini.com/news/86506 )
"மக்கள் சக்தி வேறு முக்கியமான வேலையே இல்லையா??
யாருக்கு எந்த கோவில் தலைவர் பதவி தருகிறார்கள் என்பதுதான் முக்கியமா?
இப்பொழுது 1905 இந்து அறவாரிய சட்டத்தை எதிர்ப்பது மிக முக்கியமா?1948 உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை எதிர்ப்பது முக்கியமா??
ஐந்து தலைவர்களை பற்றி பேசுங்கள்,அவர்களை பிரிந்து தவிக்கும் அவர்களது குடும்பத்திற்கு உதவப்பாருங்கள்!!
அதைவிடுத்து பதவியில்லை என்றதும்,மக்கள் சக்தியின் பெயரையும், இந்த்ராஃப் பெயரையும் இழுக்காதீர்கள்.இந்த்ராஃப் என்பதும்,மக்கள் சக்தி என்பதும் ஒரு இயக்கம் என்பதைவிட ஓர் உணர்ச்சி!!
உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தோன்றிய உணர்ச்சி,அவ்வுணர்ச்சிதான் நவம்பர் 25ஆம் தேதி,கோலாலம்பூர் தெருக்களில் தென்பட்டது.மற்றவரை குறை கூறுவதல்ல இந்த்ராஃப்; உண்மைக்காகவும்,உரிமைக்காகவும் குரல் கொடுப்பதுதான் இந்த்ராஃப்."

இவ்வாறுதான் பினாங்கில் நடந்த ஒரு கருத்தரங்கில்,ஏற்பாட்டளர்களை பார்த்துக் கூறினேன் நான்.
கோபம் வந்துவிட்டது தனேந்திரனுக்கு.....
மலேசியகினியில் அறிக்கை விடுத்திருக்கிறார்,நான் இந்த்ராஃப் ஆதரவாளர் இல்லையாம்!!
நவம்பர் 25 பேரணியில்,கோலாலம்பூர் தெருக்களில் குவிந்த இலட்சக்கண்க்கான இந்த்ராஃப் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரையும் தனேந்திரனுக்கு தெரியுமோ??
இவர் எதற்காக பினாங்கில் உள்ள கோம்தாருக்கு ஏறி,ஏறி இறங்கினார் என்று எனக்கு தெரியும்,ஊருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும்.

இவர்தான் இந்த்ராஃபின் தலைமைத்துவம் என்பது போல் செயல்படும் தனேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் நிபோங் திபால் ஆலயம் ஒன்றில் புரிந்த ஆர்ப்பாட்டங்கள் மலேசிய தமிழ் பத்திரிக்கையில் பக்கம்,பக்கமாய் வெளிவந்ததே.

இவருடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக இந்தராஃபின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றது என்பதே உண்மை.சுயநலம் தலைத்தூக்கி, இந்தியர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தினால்தான் தோற்றது மஇகா.ஒரு மனிதனின் சுயநலப்போக்கால்,ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலான் இந்த்ராஃப் தோற்றுவிடக் கூடதென்பதுதான் எமது எதிர்பார்ப்பு

சுயநலம் தலைதூக்கி,கொள்கை மறந்துவிட்டவெரெல்லாம் தன்னை இந்தராஃபின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் தகுதியை இழந்து விட்டனர்.அதிலும் மிக முக்கியமாக,நேரத்திற்கேட்ப கூற்றை மாற்றிக்கொள்ளும் தனேந்திரனுக்கு இந்த்ராஃபை உரிமைக்கொண்டாட எந்த ஒரு தகுதியுமில்லை.

இந்த்ராஃப் ஆதரவாளர்கள் பலரின் மத்தியில் நிலவும் கருத்து இது.இப்படி கூறாதவர்கள்,இந்த்ராஃப் ஆதரவாளர்கள் என்பதி விட தனேந்திரன் ஆதரவாளர்கள் என்பதுதான் உண்மை.

நமக்கு தெரிந்த உண்மைகள்,திரு.வேதமூர்த்தி அவர்களுக்கும் விரைவில் தெரியவரும் என்று நம்புகிறோம்,அவரும் இவ்விடயத்தில் தீர்க்கமான் முடிவொன்றை எடுப்பார் என்றே நம்புவோமாக.

வேண்டாம் சுயநலம்,வேண்டாம் தனேந்திரன்....

போராட்டம் ஓயாது.......
வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக் மக்கள் குரல்....

No comments: