24.9.08

மே 13......ஒரு அறிமுகம்--2

ஒரு சமுகவியல் ஆராய்ச்சியாளர் என்ற முறையில்,இந்நூலின் ஆசிரியர் மே 13 இனக்கலவரத்தை அரசியல்,பொருளாதார ரீதியில் நோக்குகிறார். அவருடைய ஆய்வின் படி,மே 13 கலவரம், திடிரென்று ஏற்பட்ட இன கொந்தளிப்பல்ல; இக்கலவரம் திட்ட்மிட்டு அரங்கேற்றப்பட்ட கொடுரம் என்பதை சில ஆவணங்களின் மூலம் உறுதி படுத்த முடிந்துள்ளது. பல்லின சமுதாயம் ஒன்று கூடி வாழும்போது இனங்களுக்கிடையான உறவு எப்பொழுதும் பதற்றமாகவே இருக்கும் என்பது தவறான கண்ணோட்டமாகும். இனங்களுக்கிடையான பதற்றங்களை ஆய்வு செய்கையில்,குறிப்பிட்ட அரசாங்கத்தின் ஈடுபாட்டையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல நாடுகளின் சரித்திரம் இதற்கு தக்க சான்றாக அமையக்கூடும்.ஆசிரியரின் ஆய்வு படி,மே 13 இனக்கலவரமானது, ஒரு திட்டமிடப்பட்ட "அதிகார பறிப்பு"க்கான முன்னோட்டம் என்று கூறுகிறார்.இவ்வதிகார பறிப்பானது,பழமைவாதம் மிகுந்த மலாய் பிரிவினடமிருந்து, நாட்டின் வளங்களை பொருளாதார இலாபத்திற்காக பங்கிட்டுக் கொள்ளும் (CAPITALIST) பிரிவினர் நடத்தியதாகும்.பழைய கலாச்சாரம் மிகுந்த மலாய்க்காரர்களின் பிரதிநிதியான துங்குவிடமிருந்து அதிகாரத்தை புதிதாக தலையெடுத்த பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர் திட்ட்மிட்டு பறித்தனர்.இவ்வதிகார பறிப்பின் தாக்கம்தான்,மலேசியாவின் அரசியலிலும் பொருளாதாரத்துறையிலும் இன்று வரை நீடிக்கிறது.இவ்வதிகார பறிப்பின் விளைவுதான்,புதிய பொருளாதார கொள்கை (NEP);இவ்வதிகார பறிப்பின் மூலம்,பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர்,தங்களின் பொருளதாரத்தை வளப்படுத்திக் கொண்டதோடு,அரசியலிலும் தங்களின் பிடியை இறுக்கினர்.



இவ்வதிகாரப் பறிப்பை பற்றி துங்குவும் கூறியுள்ளார் :-

“ஹரோனும் அவர்களில் ஒருவர் – ஹரோன்,மகாதீர்,கசாலி ஷஃபி – இவர்களெல்லாம் இராசாக்கோடு சேர்ந்து என்னை வெளியேற்ற வேலை செய்தனர் – என் பதவியை அபகரிக்க.”

சுப்கி லத்தீப்,இக்காலகட்டத்தில் நிருபராக இருந்தவர்;அவர் 1977இல் அவர் கீழ்வருமாறு கூறியுள்ளார் :

-மே 13 இனக்கலவரம் திடிரென்று ஏற்பட்ட இனக்கொந்தளிப்பல்ல! இச்சம்பவமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.இத்திட்டத்தை தீட்டியவர்கள் யாரென்பதை தெளிவாக கூற முடியவில்லை.ஆனாலும்,ஒட்டு மொத்த கண்ணோட்டத்தையும் வைத்து பார்த்தால்,மே 13 கலவரமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று.மே 13 கலவரத்திற்குப் பின்,துங்குவின் அதிகாரமானது அதற்கு பின் மழுங்கி விட்டதெனவே கூற வேண்டும்.அதற்கு பிறகும் துங்கு,பிரதமராகவும்,அம்னோ தலைவராகவும் இருந்த பொழுதும், அவர் அதிகார சின்னமாக மட்டுமே இருந்தார், அதிகாரம் அவரிடத்தில் இல்லை!” சுப்கி லத்தீபின் கருத்தானது 1977இல் வெளியிடப்பட்டது.அவரது கருத்துக்கு ஆதரமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ள ஆவணங்களே இருந்துள்ளன.

இந்நூலின் முதல் பகுதி,மலேசியாவில் இன அரசியலுக்கு வித்திட்ட “கப்பல் கூட்டணி”யின் உதயத்தைப்பற்றி ஆராய்கிறது.கப்பல் கூட்டணியானது,சுதந்திரத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டது.காலனித்துவ ஆட்சியாளர்களான பிரிட்டிசாரின் ஆசியைப் பெற்றது.சுதந்திரத்திற்குப் பின்பு,இக்கூட்டணியின் கொள்கைகளின் விளைவே இன ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டது.இந்த இன ரீதியான கண்ணோட்டம்தான் அறுபதுகளின் அரசியல்,சமூகவியல்,பொருளாதார வித்தியாசங்களுக்கு அடிப்படை என்பது திண்ணமாகும்.




முதல் பாகத்தில் பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினரின் திடீர் தோற்றமும்,1969இல் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றிய விதத்தைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.மே 13 கலவரமானது,மலேசியாவின் அரைச்யல்,ஒரு மிகையான அரசியல் நிலையிலிருந்து,மலாய்க்காரர்களை முன்னிலைப்படுத்திய அரசியலுக்கு மாற வித்திட்டது.இதன் வழி பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர்,தங்களுடைய நோக்கத்தை சாதித்துக்கொள்ள தொடங்கினர்.அரசாங்க நிறுவனங்கள்,மலாய் உழவர்களுக்கு கடன்,ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை ,அவர்களின் நோக்கத்தை சாதித்துக் கொள்வதற்கான சாதனமாக அமைந்தன.புறநகர் மேம்பாட்டை முன்னிலைப்படுத்தும் நிறுவனங்களும்,வங்கிகளின் மூலமும் இவர்கள் பெரும் இலாபம் அடைந்தனர்.துங்கு அதிகாரத்தில் இருக்கும் வரை அவர்களுடைய பொருளாதார நோக்கம் ஈடேறாது என்பதால்தான்,திட்டமிட்டு துங்குவிடமிருந்து அதிகார பறிப்பு நிகழ்த்தப்பட்டது.

1960ஆம் ஆண்டுகளில்,காலனித்துவ ஆட்சிக்குப் பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட சில அரசாங்க கொள்கைகள்,நடவடிக்கைகள் மக்கள் மத்தியில்,குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினர்,விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி கல்வி,உபகார சம்பளம்,தொழில் உரிமங்கள் (லைசென்ஸ்/பெர்மிட்) போன்ற விடயங்களிலும் அரசாங்கத்தின் ஒரு தலைபட்சமான நிலைப்பாடுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் அதிருப்தியடைந்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நிலவிய அரசாங்கத்திற்கெதிரான அதிருப்தியானது,1969 பொதுத்தேர்தலில் ந்திரொளித்தது.அதுவரை ஆட்சியை இறுகப்பிடித்திருந்த அம்னோவின் அதிகாரத்திற்கும் 1969 பொதுத்தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர், இவ்வேளையில் “மலாய் அதிகாரத்துவம்” என்ர கொள்கையை அறிமுகப்படுத்தி அம்னோவின் ஆளுமையை நிலைநிறுத்தியதோடு, அம்னோவிற்குள்ளும் துங்குவின் அதிகாரத்தை கைப்பற்றினர்.

இரண்டாம் பகுதியில் 1969 பொதுத்தேர்தலை ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். 1969 பொதுத்தேர்தலில்,எதிர்கட்சிகள் ஒரு ஒப்பந்த நிலையிலான கூட்டணியை அமைத்து “கப்பல் கூட்டணியை” எதிர்த்தன.பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே,கப்பல் கூட்டணி சுதந்திரத்திற்கு பின்பு முதன்முறையாக பலத்த சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.அதோடு மட்டுமல்லாமல்,ஒரு சில மாநிலங்களையும் எதிர்கட்சிகல் கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போல் நடந்த வேளையில்,எதிர்கட்சிகளின் வெற்றி பேரணிகளே ஒரு பயங்கரமான இனக்கலவரத்திற்கு அடிப்படை காரணம் என் கூறப்படுவதை,அர்சியல் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

-தொடரும்-


அடுத்த பாகத்தில் :-

இரகசியமாக்கப்பட்ட ஆவணங்கள்

- 1969 இனக்கலவரத்தைப் பற்றி இதுவரை நமக்கு கிடைத்த தகவல்கள்களில் பெரும்பாலனவை, அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கும், தணிக்கைகளுக்கும் மத்தியில் பல உண்மைகள் மறைக்கப்பட்ட தகவல்கள் என்பது தெரிய வருகிறது.

- 1969 இன் இனக்கலவரத்தின் போது மலேசிய அரசாங்கத்தின் “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்ற கண்துடைப்பு நாடகத்துக்கு பிரிட்டிஷ் போன்ற மேற்கு நாடுகளும் துணை போயுள்ளன.

3 comments:

ஆதவன் said...

மே 13இல் மறைந்துள்ள கமுக்கங்களை (இரகசியங்கள்) வெளிப்படுத்தியுள்ளீர்கள். இந்த ஒரு நாளை வைத்துக்கொண்டு 39 ஆண்டுகளாக நாம் பயமுறுத்தப்பட்டு வருகிறோம்.

தாய்மொழி said...

திரு.சதீசு அவர்களே தங்களின் வலைப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்களின் நட்சிறப்பு மென் மேலும் வலம் பெற எங்களின் ஆதரவு என்றும் நிலைக்கும். நன்றி.

Sathis Kumar said...

அன்பரே,

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.

அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.

http://www.pageflakes.com/Valaipoongaa/