24.1.10
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...?!
காற்றைக்குடிக்கும் தவரமாகி, காலம் கழிப்பதுவோ.....?!
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை, மன்னன் ஆளுவதோ...?!
தாய்தின்ற மண்ணே..!!
தமிழர் காணும் துயரம் கண்டு, தலையை சுற்றும் கோளே, அழாதே...!!
என்றோ ஒரு நாள் விடியும் என்றே, இரவை சுமக்கும் நாளே, அழாதே..!!
நுற்றாண்டுகளின் துருவை தாங்கி உறையில் துங்கும் வாளே, அழாதே..!!
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ, என்னோடு அழும் யாழே, அழாதே...!!
நெல்லாடிய நிலம் எங்கே..??
சொல்லாடிய அவை எங்கே..??
வில்லாடிய களம் எங்கே...??
கல்லாடிய சிலை எங்கே...??
தாய்த்தின்ற மண்ணே.... இது பிள்ளையின் கதறல்.... ஒரு பேரரசன் புலம்பல்....!!!
- வைரமுத்து; ஆயிரத்தில் ஒருவன் -
27.12.09
ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)
இந்த கோட்பாட்டின் அறிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா??
பாகம் 2
1969க்கு பிறகு - மே 13 இனக்கலவரத்தை காரணம் காட்டி தேர்தல் வெற்றிகள் - துங்கு இராசிலியின் வீழ்ச்சி; அன்வரின் எழுச்சி!!
10.9.09
ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல்!!
இந்த கோட்பாட்டின் அறிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா??
மலேசிய பிரதமர் நஜீப் துன் இரசாக் அறிமுகப்படுத்தியிருக்கும், ஒரு புதிய கோட்பாடு ஒரே மலேசியா கோட்பாடு. இந்த ஒரே மலேசியா கோட்பாட்டைப் பற்றிய சந்தேகங்களை பல தரப்பினரும், பல நேரங்களிலும் எழுப்பி வருகையில், உண்மையில் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள் என்னவென்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே உள்ளது. மலேசியா, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா,சரவா பூர்வக்குடியினர், ஒராங் அஸ்லியினர், என்று பல இனங்களை தன்னகத்தேக் கொண்ட ஒரு நாடு. ஆனால், இங்கு இனவாதத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நடக்கின்றன என்றால், அது மிகையாகாது. இந்த ஒரே மலேசியா கோட்பாடு உண்மையில், எதனைக் குறிக்கின்றது? இனவரையறைகளற்ற ஒரு மலேசிய தேசத்தை குறிப்பதாகவே இந்த கோட்பாடு காட்டப்படுகின்றது; உண்மையில் இன வரையறைகளைக் கடந்த ஒரு மலேசிய சமூகத்தை நாம் அடைந்து விட்டோமா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லையென்பதுதான் பதிலாக இருக்கும்.
இன வேறுபாடுகளற்ற ஒரு மலேசியா, இந்த நொடி வரை ஒரு கானல் நீரைப் போன்றதாகவே உள்ளது. இந்த ஒரு மலேசியா கோட்பாடானது, புதிய பிரதமரான நஜீப்பீன் ஒரு விளம்பர சுலோகம் என்பதுதான் உண்மை. ஒரே மலேசியா கோட்பாடு, நமது நாட்டிலுள்ள இனங்களை ஒன்றினைக்கும் கோட்பாடு என்பது அரசாங்கத்தின் வாதமாக இருக்கின்றது. சுதந்திரம் பெற்று ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துங்கள் என்று மக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தத்தான் வேண்டுமா? ஒற்றுமை என்பது அவ்வாறு வலியுறுத்தினால்தான் ஏற்படுமா? பல்வேறு வளர்ச்சிகளை, மாற்றங்களை கண்ட மலேசியர்கள் ஒற்றுமை என்ற ஒரு அம்சத்தில் மட்டும் இறுக்கமாக இருந்ததற்கு காரணம் என்ன? இவ்வாறான பல கேள்விகளுக்கு பதிலை அளித்துவிட்டு, ஒரே மலேசியா கோட்பாட்டை முன்னிறுத்த அரசாங்கம் முயல வேண்டும்.
காலங்காலமாக, மலாய்க்காரர் அல்லாத சமூகத்தை மிரட்டுவதற்கு “மே 13” இனக்கலவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மலாய்க்காரர்கள் அல்லாதோர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட கேட்கக்கூடாது என்பது வாக்கில், இந்த “மே 13” இனக்கலவரத்தை முன்னிறுத்தி மிரட்டப்பட்டு வந்தனர். “எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; மே 13 மீண்டும் நிகழும்” என்பது ஒரு குறிப்பிட்ட மலாய் பிரிவினரின் மிரட்டல் வாசகமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக மலேசியாவை ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான அம்னோவினரே இவ்வாறான வாசகங்களை அதிகம் உபயோகித்துள்ளனர் என்பதை கடந்த கால சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அம்னோவினர் அவ்வாறு மிரட்டும் பொழுதெல்லாம், அம்னோவின் “கங்காணிகளான” மசீசாவும், மஇகாவும், அம்னோக்காரர்களின் மிரட்டல்கள் உண்மையாகிவிடும் என்பது போலவே தத்தம் சமுதாயங்களை ஏமாற்றியுள்ளனர்.
இதற்கு தக்க உதாரணமாக, 1989இல் “ஒப்பராசி லாலாங்”கின் போது நிகழ்ந்த சம்பவங்களைக் கூறலாம். 1989இல், சீன பள்ளிகளில் அதிகமான மலாய் ஆசிரியர்களை நியமிப்பதைக் கட்டுப்படுத்தக்கோரி சீன சமுதாயம் குரல் எழுப்பியது. மலேசிய சீன சமூகத்தினரிடம் மிகவும் செல்வாக்குப்பெற்ற சீனர் கல்வி இயக்கங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தன. (சீனர்களின் இந்த கல்வி இயக்கங்களானவை, நாட்டில் சீனர்களின் அரசியலையும் முடிவு செய்யும் மிக முக்கிய இயக்கங்கள்; இந்த சீன கல்வி இயக்கங்களின் ஆதரவுப்பெற்ற வேட்பாளர்கள், சீனர் பெரும்பான்மை தொகுதிகளில் நிச்சயம் வென்றுவிடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் கூட செய்யலாம். மலேசியாவில் உள்ள சீன பள்ளிகளும், அதன் அடைவுநிலைகளும் இதற்கு சான்று. சுறுக்கமாக சொன்னால், மலேசிய சீனர்களின் அரசியலைக் கூட நிர்ணயிப்பது கல்விக்குழுக்களாகவே உள்ளன; நமது சமுதாயத்திலோ, கல்வியையும், கோயிலையும் முடிவு செய்வது அரசியலாக உள்ளது). அப்பொழுது பிரதமராக இருந்த மகாதீர் முகமட், அவர்தம் அம்னோ சகாக்களுமாக சேர்ந்து, இதனை மாபெரும் இனப்பிரச்சனையாக உருவாக்கி, அரசியல் இலாபம் தேடினர். சீனர் பள்ளிகளில், சீனர் ஆசிரியர்களை அதிகம் நியமிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை; உடனே, மலாய்க்காரர்களை நியமிப்பதை சீனர்கள் தட்டிக்கேட்டு விட்டார்களெனவும், அதனால் மலாய்க்காரர்களின் சிறப்புரிமையை கேள்விக்கேட்டு விட்டனர் எனவும் அம்னோ கூப்பாடுப்போட்டது. அக்காலத்தில், அம்னோ பல்வேறு பொதுக்கூட்டங்களைக் கூட்டியது; பல்வேறான இன துவேச வாசகங்கள் அள்ளி வீசப்பட்டன; “மலாய்க்காரர்களின் குத்துக்கத்தி (கெரிஸ்), சீனர்களின் இரத்தத்தில் நனையப்போகிறது” என்பது மிக பிரபலமான வாசகமாகும். (இந்த வாசகத்தை தனது திருவாயால் உதிர்த்தவர், இந்நாள் பிரதமர் என்று கூறப்படுகிறது, இருப்பினும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கர்ப்பால் சிங் இது தொடர்பாக எழுப்பிய வினாவிற்கு, நஜீப் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது) இனங்களுக்கிடையான பதற்றத்தை ஏற்படுத்தியது, அம்னோவினரின் இந்த கூட்டங்கள்தான்; ஆனால், ஒப்பராசி லாலாங் நடவடிக்கையில், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதெல்லாம பெரும்பாலும் எதிர்கட்சி தலைவர்கள். (கர்ப்பால் சிங், லிம் கிட் சியாங், லிம் குவான் எங், மக்கள் தொண்டன் வி.டேவிட், மக்கள் சேவகன் பி.பட்டு, பாஸ் கட்சியின் மாட் சாபு ஆகியோர் ஒப்பராசி லாலாங்கில் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர்). அதோடு மட்டுமல்லாமல், பல பத்திரிக்கைகளின் உரிமங்கள் உடனுக்குடன் பறிக்கப்பட்டு, அந்த பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன (ஸ்டார் ஆங்கில நாளேடு உட்பட). ஒரு சாதரண பள்ளி சம்பந்தப்பட்ட விசயத்தை கேள்வியெழுப்பப்பட்டதற்காக, ஒரு இன பதற்றம் உருவாக்கப்பட்டது; அந்த பதற்றைச் சுட்டிக்காட்டி, 1990இல், துங்கு இராசாலியின் செமாங்காட் 46 தலைமையிலான பலம்பொருந்திய எதிர்கட்சிக் கூட்டணியை தோற்கடித்தது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி.
-தொடரும்-
26.8.09
அழிக்கப்படும் சரித்திர சுவடுகள் - ஆய்வுக்கட்டுரை!
மலாயாவின் சுதந்திரத்தில் நம் தமிழ் பிரதிநிதிகளின் பங்கு; மலேசியாவின் உருவாக்க சரித்திரத்தில் நம்மவர்களின் (இது மஇகா "நம்மவர்" களை குறிக்கவில்லைங்க!) பங்கு, மலாயாவை செல்வம் கொழிக்க செய்த நம்மினத்தானின் உழைப்பு போன்ற பல விடயங்கள், சரித்திர பாடத்திலிருந்தும், பாடப்புத்தகங்களிலிருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்படுவதும், பின்னொரு நாளில், இந்த நாட்டின் சுதந்திரத்திலும், வளர்ச்சியிலும் நம் இனத்திற்கு அறவே பங்கில்லை எண்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க ஆளும் தரப்பு முனைப்பாக செயல்படுகின்றது. ஆளும் கூட்டணியில் அதிகாரப்பதுமைகளாக அமர்ந்துக்கொண்டுள்ள நமது "இனத்தின் பிரதிநிதிகளோ", தங்களின் நாற்காலி சுகத்தை பேணிக்காப்பதில் குறியாக இருப்பதால், இதையெல்லாம் அவர்கள் கண்டுக் கொள்ளப்போவதில்லை. இந்த சரித்திர "அழிப்பு/பதுக்கல்", சுதந்திர மலேசிய உருவாகத்தைத்தாண்டி, வெள்ளையர் ஆளுமைக்குட்பட்ட மலாயா சரித்திரத்தைத்தாண்டி, மலாக்கா மலாய் இராச்சியத்தின் சரித்திரத்தையும் மிஞ்சிய சரித்திரத்தை அளிக்க, மறைக்க, மறுக்க இந்த ஆளும் வர்க்கம் முனைந்து விட்டது என்பது, இந்த ஆய்வுக் கட்டுரையின் முன்னோட்டமாக இருக்கட்டும்.
8.7.09
புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் பத்திரிகை செய்தி.
கம்போங் புவா பாலா பிரச்சனையை இந்தியர் பிரச்சனையென்று எடுத்துக்கொள்ள முடியாது. இப்பிரச்சனையானது, நீதி, பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரச்சனையாகும்.
ஆகவே, இப்பிரச்சனையில் திடீரென்று குரல் எழுப்பும் இந்த்ராப் தலைவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த இந்த்ராப் தலைவர்கள் உண்மையிலேயே எதற்காக இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர் என்று கேள்வியும் எழுகிறது.
பினாங்கு மாநிலத்தை கடுமையாக விமர்சித்து வரும் சில இந்த்ராப் தலைவர்கள் உண்மையான நோக்கம்தான் என்ன? இந்த கம்போங் புவா பாலா இருக்கும் இடத்திலேயே இந்தியர்களின் பாரம்பரிய கிராமமாக இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கையா? அல்லது முந்தைய தேசிய முன்னணி அரசு செய்த தவறால் விலைபேசபட்டுள்ள இந்த கிராம மக்களுக்கு சரியான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமா?
இந்த்ராப் இந்த கம்போங் புவ பாலா கிராமம் இந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்று குரல் எழுப்புமானால், இந்த நில மேம்பட்டு நிறுவனம் எதுவுமே செய்யாமல் கோடிக்கணக்கில் இலாபம் அடைய வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்களா என்பதுதான் இங்கெ எழும் கேள்வியாக உள்ளது.
இந்த்ராப் சட்ட ஆலோசகர் உதயக்குமார் சொல்வதைப் போல் 'ஒரு கையெழுத்தில்' இந்த கம்போங் புவா பாலா நிலத்தை கையகப்படுத்தினால் பினாங்கு மாநில அரசானது ஏறக்குறைய சுமார் 150 மில்லியன் ரிங்கிட்டை நட்ட ஈடாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இந்த 150 மில்லியன் ரிங்கிட்டானது 1.5 மில்லியன் பினாங்கு மாநில மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சில இந்த்ராப் தலைவர்கள் உணர வேண்டும். கம்போங் புவா பாலா நிலத்தில் எந்தவொரு மேம்பாட்டையும் செய்யாமலே பெரும் இலாபத்தை நில மேம்பாட்டாளர் அடையக்கூடும். இந்த்ராப் தலைவர்கள் தொடர்ந்து ' ஒரு கையெழுத்தில் தீர்வு ' என்பதில் உறுதியாக இருந்தால், குறிப்பிட்ட நில மேம்பாட்டளரும் அதையே சாதகமாக பயன்படுத்தி பெரும் இலாபத்தை அள்ளி செல்ல தயாராகவே இருப்பார்.
ஆனால், கம்போங் புவா பாலா நில மேம்பாட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் சில இந்த்ராப் தலைவர்களின் கோரிக்கையாக இருக்குமெனில், ஒரு வெளிப்படையான கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள மக்களுக்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும். அதன் வழி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு தீர்வை நாம் எட்ட முடியும். கிராம மக்களும், மாநில அரசாங்கமும் தெளிவான முறையில், முன்றாம் தரப்பின் தலையீடு இன்றி, கலந்துரையாடுவதற்கு இந்த்ராப் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை.
நியாயமான இழப்பீடு தரப்படவில்லை என்று கூறும் அதேவேளையில், ' ஒரு கையெழுத்தில்' நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றும் சில இந்த்ராபினர் கோரிக்கை விடுக்கின்றனர். உண்மையில் எந்த தீர்வைத்தான் இவர்கள் எதிர்ப்பர்கின்றனர் என்பது அவர்களுக்கே புரியவில்லை போலும்.
' ஒரு கையெழுத்தில் தீர்வு ' எனும் கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தால், அது அந்த நில மேம்பாட்டு நிறுவனத்தை இலாபம் பெற வைப்பதற்கும், அந்த மக்கள் எந்தவொரு இழப்பீடும் பெறாமல் போவதற்கும் வழி அமைத்து விடும்.
உண்மையான இந்த்ராப் தோழர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க நேரம் வந்துள்ளது. இந்த்ராப் இயக்கம் நடத்திய நவம்பர் 25 பேரணியில், உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு போராடிய ஒவ்வொரு தோழருக்கும் அந்த இயக்கத்தின் வளர்ச்சியில் பங்குள்ளது. தேசிய முன்னணி அரசாங்கம் செய்த தவறுக்கு மக்கள் கூட்டணி அரசாங்கத்தை குறை கூறும் சில தரப்பினரின் கூற்றுகள் எந்த அளவுக்கு சரியானது என்பது உங்களுக்கும் தெரியும்.ஆகவே, உண்மைக்காக குரல் கொடுக்க உண்மையான இந்த்ராப் தோழர்கள் முன்வர வேண்டும். நில மேம்பட்டலரை இலாபபடுத்தும் வண்ணம் கருத்துகளை வெளியிடும் சில தரப்பினரின் கருத்துகள் எந்த அளவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
லியு சின் டொங், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர், பினாங்கு.