27.11.08

தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்......


உலக தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் மிகவும் கவலையாக உற்று நோக்கப்படும் விடயம் எதுவெனில், ஸ்ரீ லங்கா படைகள் கிளிநோச்சியை வசப்படுத்தி விடுமா என்பதுதான்.தமிழன் என்றாலே அடிதான் வாங்குவான் என்று உலகமே நினைத்து நம்மை ஏளனப்படுத்திய போது, தமிழனுக்கு அடிக்கவும் தெரியும் என்று காட்டியது ஈழத்தமிழன்தான்.தங்கள் மீது திணிக்கப்பட்ட இனவெறி போக்கை, கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்காரவாதத்தை அகிம்சை முறையில் எதிர்த்து துவண்டு போன தமிழன்தான் ஈழத்தமிழன்.

துவண்டு போனவன் விழுந்து போய் விடவில்லை; எழுந்து நின்றான்!!

மாவீரர்கள்........

சிங்கள பேரினவாதத்தை ஆயுதமேந்தி எதிர்க்க துணிந்து, தமது இன்னுயிர்களை சுதந்திர வேட்கைக்காக துறந்த எமது மாவிரர்களை இவ்வேளையில் நினைத்து பார்க்கிறேன். காதல் தோல்வியில் உயிரை வெறுத்து, உயிர்விடும் ஜென்மங்களுக்கு மத்தியில், தாயக மண்ணின் சுதந்திரத்திற்காக,தனது நாளைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்று வேட்கையோடு உயிரை தியாகம் செய்யும் இவர்கள் மாவீரர்கள் மட்டுமல்ல,மாமனிதர்களும் கூட. ஈழத்தின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை நீத்த ஒவ்வொரு தமிழ் மறவனும் அந்த புண்ணிய பூமியில் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்!! அந்த விதையிலிருந்த தோன்றப்போகும் விருட்சங்கள்,சிங்கள் பேரினவாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!

பெண் புலிகள்......

எமது பண்டைய மறத்தமிழச்சிகள் சீறி வரும் புலியைக் கூட முறத்தால் விரட்டியடித்தனர் என்று தமிழர்கள் எப்பொழுதும் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. பண்டைய தமிழச்சிகளை நாம் பார்த்தது கிடையாது, ஆனால் கண்டிப்பாக அவ்வாறுதான் எமது பண்டைய தமிழ் பெண்கள் இருந்திருப்பார்கள் என்பதை இன்றைய தமிழ் மறவத்திகளைப் பார்க்கும் போது திண்ணமாகிறது. இன்றைய தமிழ் பெண்கள் புலியை முறத்தால் விரட்டவில்லை; தாங்களே புலியாகி,எதிரியை கொன்றொழிக்கின்றனர்.

எமது ஈழத்தமிழ் பெண்ணினம்,சிங்கள அரசின் பேரினவாத பிடியில் சிக்கி, தங்கள் உயிரை விட மேன்மையானதாக போற்றிக் காக்கும் கற்பைக் காப்பாற்ற கையில் எடுத்தது முறத்தையல்ல,நெருப்பைக் கக்கும் AK 47-ஐ.

நமது பண்பாட்டை ஆட்டம் 100 வகை, 200 வகை என்று சீரழிக்கும் பெண்களுக்கு மத்தியில்,சனிக்கிழமை வந்தால்,போதையிலும் கும்மாளத்திலும் கூடிக்கழிக்கும் பெண்களுக்கு மத்தியில், பண்பாட்டை காக்கும் தமிழச்சிகளையும், தாய்மண்ணின் சுதந்திரம் காக்க கையில் ஆயுதம் எந்திய புலிப்பெண்களையும் பார்க்கையில் எமது தமிழினத்தின் பண்பாடும்,மரபும் அவ்வளவு சீக்கிரத்தில் மறைந்து விடாது என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

தமிழினத்தலைவன்........

உலகத்தில் உள்ள தமிழருக்கெல்லாம், யார்தான் தலைவர் ??இராசேந்திர சோழனுக்குப் பிறகு அந்த தனித்தன்மை மிகுந்த தமிழன் ஒருவன் இருக்கிறானென்றால், அது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
ஒரு சாரார்,கலைஞரை உலகத் தமிழரின் தலைவர் என்று கூறினாலும், அதில் எமக்கு உடன்பாடில்லை. பக்கம் இருக்கும் தேசத்தில் தமிழரை இன அழிப்பிலிருந்து காப்பற்ற முடியாமல்,அரசியல் காரணங்களுக்காக சூழ்நிலை கைதியாகிக் கிடக்கும் கலைஞரை நினைத்து உலகத்தின் எந்த மூலையில் உள்ள தமிழனும் பொறுமுவானே தவிர, பெருமைக் கொள்ள மாட்டான்.

தமிழர் என்றால் அடிமைகள் என்றும் ஏமாளிகள் என்றும் வெள்ளையன் குறித்து விட்டு சென்றுள்ள கூற்றை,உலகில் வாழும் தமிழர்களெல்லாம் நிருபித்து,சாசனம் எழுதிக்கொடுக்காமல் பல விஷயங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் அடிமை விலங்கை உடைத்து, தன்மானத்தை காக்க, வந்த தமிழர் தலைவன் பிரபாகரன் மட்டுமே. தமிழன் எங்கு போனாலும் அடிதான் வாங்கினான், திரும்பக்கொடுத்தது தமிழீழத்தில் மட்டும்தான்.

இராசேந்திரன் காலத்தில்,முப்படைகளை திரட்டி கம்போஜம் வரை வெற்றிக் கொண்டான் என பெருமை மட்டும்தான் நமக்கு மிஞ்சும் என்றிருந்த வேளையில், தரைப்படை,கடற்படை,வான்பாடை என்று நவீன வளர்ச்சியின் தேவைக்கேற்ப முப்படைகள் கண்டு தமிழரின் பெருமையை நிலைநிறுத்தியது பிரபாகரன்தான். அந்த இராசேந்திரன் கொண்டு சென்றது புலிக்கொடிதான் ; இன்றைய தமிழீழ இராச்சியத்தின் சின்னமும் புலிக்கொடிதான்.

வேட்கை விடுவதில்லை.........

பூநகரியை பிடித்து விட்டோம், கிளிநோச்சியை நெருங்கி விட்டோம், புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் சிங்கள் படைகளின் ஆணவத்திற்கு என்றுமே தாம் அடிபணிய போவதில்லை என்பதை 2008 மாவீரர் உரையில் தலைவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். வலிந்து திணிக்கப்பட்ட போரை, துணிந்து எதிர்த்து, வெல்வதற்கு தயாராக உள்ளனர் தமிழ் புலிகள். மிகச்சிறந்த போர் வல்லுனரான பிரபாகரனின் ராணுவ நகர்வுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சிங்கள் இராணுவம் தவிக்கப்போகும் காலம்,மிக அண்மையில் என்று நமது உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளதை நானும் பிரதிபலிக்கிறேன்.

சுதந்திர ஈழம் மலரும்..........

தமிழீழ சுதந்திரத்தை முன்னிறுத்தி நடைபெறும் உரிமைப்போரில்,தமிழர் கரம் வலுப்பெறப்போகும் நாள் வெகு தூரமில்லை.

அந்நாளை எதிர்கொள்ள உலகத் தமிழர் அனைவரும் கட்சி,மத,சாதி வேறுபாடுகளை மறந்து, சுதந்திர தமிழீழத்தை உலக நாடுகள் அங்கிகரிக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் எழுப்பிடல் வேண்டும்.

கண்டனக்கூட்டத்திற்கு கூப்பிட்டால் மறுத்தளித்து விட்டு,ஈழத்தமிழர் ஆதரவு பேரணி என்ற பெயரில் கட்சி கோசங்கள் போன்ற கேவலமான அரசியலெல்லாம் இந்த மிக முக்கியமான காலக்கட்டத்தில் வேண்டாமென்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.

தந்தை செல்வாவின் ஜனநாயக போரட்டத்தில் தொடங்கி, தியாகி திலிபனின் மறைவில் கொழுந்து விட்டெறிந்து, மாவிரர்களின் ஈகத்தால் தொடர்ந்தும் அணையாமல் எறிந்து கொண்டிருக்கும் சுதந்திர தீ, சிங்கள பேரினவாதத்தை எரித்து விடும் நாள் தூரம் இல்லை.

உலக தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்.........