13.3.08

பினங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி அவர்களிடம் அளிக்கப்படும் கோரிக்கை.

செயல்திட்ட வடிவமைப்பு

இந்திய இளைஞர்களை ஒன்றிணைத்தல்.-இந்திய இளைஞர்களை தொடர்ந்து குண்டர்கள் என்றும் செயல்திறன் அற்றவர்கள் என்று கூறி வந்த நிலை இன்றைய அளவில் பெரிதும் மாறியுள்ளது.இதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதில் நமது முழு கவனம் செலுத்தப்பட வேண்டும்.மக்கள் சக்தியின் தாக்கம் நமது இளைஞர்களின் மத்தியில் பெரிய மாற்றத்தை தருவித்துள்ளது.ஒற்றுமை நமது பலம் என்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.இதனை தக்க வைக்க நாம் எடுக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்.

  • தொகுதி வாரியாக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.
  • வன்முறையை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டியடித்தல்.
  • அரசாங்க துறைகளில்,நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகளை உறுதி செய்தல்.
  • இளைஞர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புகள் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.
  • இளைஞர்கள் வணிகத்துறையில் ஈடுபட ஊக்குவித்தல்.
  • வணிகக்கடன்கள்,ஆலோசனைகள் வழங்குதல்.
  • இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவித்தல்.
  • இளைஞர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்துதல்.
  • மாநில அளவில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்தல்.
  • மாநில அளவில் இளைஞர் மாநாடு நடத்துதல்.
  • இளைஞர்களிடம் தொடர்ந்து ஒற்றுமையை மேம்படுத்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்.


தொகுதி வாரியாக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.

பிறை தொகுதியில் தொடங்கி அங்குள்ள இளைஞர்களை ஒன்றிணைக்கும் வண்ணம் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.இளைஞர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு இதுவரை நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை கலைதல்.தொகுதி வாரியாக இளைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சியானது இடைவிடாமல் தொடர்தல் வேண்டும்.

வன்முறையை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டியடித்தல்.

இளைஞர்களிடம் ஒற்றுமையை மேம்படுத்துதல் மூலம் வன்முறை கலாச்சரத்தை துடைத்தொழிக்க முடியும்.குண்டர் கும்பல் கலாச்சாரத்தின் பின் விளைவுகளை விரிவாக விவாதிப்பதன் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.காவல்துறையின் உதவியுடன் குண்டர் கும்பல் நடவடிக்கைகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துதல்.

அரசாங்க துறைகளில்,நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகளை உறுதி செய்தல்.

வேலையின்மைதான் நமது சமுதாய இளைஞர்களிடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை அறிய முடிகிறது.ஆகவே சரியான வேலை வாய்ப்புகள அமையும் பட்சத்தில் குண்டர்கும்பல்,கொள்ளை,போதைப்பொருள் போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதை குறைக்கலாம் என்று நம்புகின்றோம்.அரசாங்க துறைகளில்(MPSP,MPPP),அரசு சார்ந்த நிறுவனங்களில்(PBA,PPC,PBSB,PERDA)நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெறும் பட்சத்தில் சமூக சீரழிவுகளில் இருந்து அவர்கள் விலகி நிற்பார்கள் என்பது பொதுவான கருத்தாகும்.

இளைஞர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புகள் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.

நமது இளைஞர்களுக்கான கல்வி,வேலை வாய்ப்புகள் கடந்த பல ஆண்டுகளில் தொடர்ந்து பாரபட்சத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.அந்நிலை தொடர்ந்து நீடிக்கக்கூடாதென்பது நமது எதிர்பார்ப்பாகும்.நம் இளைஞர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப கல்வி,வேலை வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்;இதில் எந்த ஒரு ஓரவஞ்சனை நிகழாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.நமது இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதை ஊக்குவித்தல்.


இளைஞர்கள் வணிகத்துறையில் ஈடுபட ஊக்குவித்தல்.

வணிகத்துறையில் நம் இளைஞர்களை ஈடுபடுத்துதல் மூலம் நமது சமுதாயத்தின் பொருளாதரத்தை மேம்படுத்த முடியும்.ஒரு குறிப்பிட்ட தொழில்துறையில் மட்டும் அவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்காமல் அனைத்து வகையான தொழில்துறைகளிலும் அவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கவேண்டும்.


வணிகக்கடன்கள்,ஆலோசனைகள் வழங்குதல்.

நமது இளைஞர்களும் வணிகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வண்ணம்,ஆலோசனைகள் வழங்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.இந்த குழுவில் தொழில்துறை,வணிகத்துறையில் வெற்றி பெற்ற இந்தியர்களை இக்குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும்.தற்பொழுது வங்கிகளில் வழங்கப்படும் சிறுதொழில்களுக்கான கடனுதவி பெரும்பாலான இந்திய வணிகர்களுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.இந்த விடயத்தில் மாநில அரசு தலையிடுவது கடினம் என்பதால்,மாநில அரசே இது போன்ற கடனுதவி திட்டங்களை அறிமுகப்படுத்தி நமது இளைஞர்களை ஊக்குவிக்கலாம் என்பது நமது வேண்டுகோள்.

இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவித்தல்.

விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களின் ஆர்வம் அனைவரும் ஒன்று.ஆனால்,விளையாட்டு துறையிலும் இனவாதம் தலைத்தூக்கியதால்தான் நமது திறமையான இளைஞர்கள் பலர் விளையாட்டுத் துறையில் சிறப்பாக வர முடியாமல் போனது என்பது உண்மை.இந்த நிலை இனிமேலும் தொடர கூடாது என்பதுதான் நமது விருப்பமாகும்.மாநில அரசு இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம் .இனவாதம் இல்லாமல் விளையாட்டளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.திறமையுள்ள இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதோடு,அவர்களை மேல் பயிற்சிக்கு அனுப்பிடவும் வேண்டும்.

இளைஞர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்துதல்.

மாநில அளவில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்தல்.

மாநில அளவில் இளைஞர் மாநாடு நடத்துதல்.

இளைஞர்களிடம் தொடர்ந்து ஒற்றுமையை மேம்படுத்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்.

9.3.08

அழிந்தது ஆணவம்....வென்றது மக்கள் சக்தி!!

மலேசிய வரலாற்றில் 08-03-08,மறக்க முடியாத நாளாகும்!!
50 வருடங்களாக மலேசிய திருநாட்டை இனவாதம்,ஊழல்,அக்கிரமம் ஆகியவற்றால் கட்டிப்போட்டிருந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மக்கள் பாடம் புகட்டிய நாள்!!

மலேசிய சரித்திரத்தில் முதல் முறையாக 2/3 பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைய போகிறது.அம்னோ அராஜகத்தால் கொதித்து போயிருக்கும் மக்கள்,அம்னோவிற்கும் அதன் அடிமை கூட்டணி கட்சியினருக்கும் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.ஆட்சி தங்கள் வசம் இருப்பதால் எது வேண்டுமானலும் செய்யலாம் என்ற ஆணவத்தில் போது தேர்தலில் கூட பல ஊழல் அராஜங்களை புரிந்த போதிலும் மாபெரும் மக்கள் ஆதரவினால் எதிர்கட்சிகளின் கூட்டணியான 'மக்கள் கூட்டணி' 75 நாடாளுமன்ற இடங்களையும்,5 மாநில சட்டமன்றங்களையும் கைப்பற்றியுள்ளது.

தமிழர்களின் பேரெழுச்சி....

கடந்த 50 வருடங்களாக தேசிய முன்னணியின் அபார ஆதரவளர்களாக இருந்து வந்த மலேசியவாழ் இந்திய சமுதாயத்தினரின் எதிர்ப்பு பல நாடாளுமன்ற,சட்டமன்ற முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.இந்தியர்கள் அதிகமாக வாழும் 3 மாநிலங்கள் எதிர்கட்சியின் வசம் வந்திருப்பதே இதற்கு நல்ல சான்று.இந்தியர்கள் அதிகமாக வாழும் பேரா,பினாங்கு,சிலாங்கூர், ஆகிய 3 மாநிலங்கள் உட்பட 5 மாநிலங்களை வென்றுள்ள மக்கள் கூட்டணி கெடா மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்தியர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி வாக்கு வேட்டையில் இறங்கிய மக்கள் முன்னணி தனது முயற்சியில் வெற்றியும் அடைந்துள்ளது.இந்தியர்களின் மனதை பெரும் வகையில் புண்படுத்திய தேசிய முன்னணியின் தலைவர்கள் பலர் இப்பொழுது அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.ஹிண்ட்ராஃப் அமைப்பின் மூலம் வெடித்த 'மக்கள் சக்தி' புரட்சி,இந்த தேர்தலில் 62 தொகுதிகளில் தனது பலத்தை நிருபித்துள்ளது.

BYE BYE மஇகா......
மலேசிய இந்தியர்களின் குரல் என்று பிதற்றிக்கொண்டிருந்த மஇகாகாரர்கள் எல்லாம் ஆளையே காணோம்.....
தானே இந்தியர்களின் தலைவன் என்று பிதற்றிய மாபெரும் அறிவாளி,தங்களை கைவிட்டால் இந்தியர்கள் மண்ணைத்தான் உண்ண வேண்டும் என்று பாடல் பாடிய மாண்புமிகு(நேற்றுவரை) ச.சாமிவேலு தனது சொந்த சுங்கை சிப்புட் தொகுதி மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
ம இகா போட்டியிட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளில் 3இல்தான் வெற்றி பெற்றுள்ளது.19 சட்டமன்ற தொகுதிகளில் 4-5தான்(தற்பொழுதைய நிலவரப்படி)
வென்றுள்ளது.சாமிவேலுவுக்கும்,மஇகாவுக்கும் மக்கள் சக்தி தந்த பரிசு,மலேசிய இந்தியர்களின் வாழ்வில் பொன்னான சரித்திர நாளாகும்.

-தொடரும்-

5.3.08

வேண்டாம் பாரிசான்

வேண்டாம் பாரிசான்

டான்ஸ்ரீ கோ சூ கூன்,ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கின் முதல்வராக இருப்பவர்,இப்பொழுது மத்திய அரசாங்கத்திற்கு தாவ போகிறார்.மத்திய அரசாங்கத்திற்கு தாவ இவர் தேர்வு செய்திருக்கும் தொகுதி பத்து கவான் தொகுதி.பத்து கவான் தொகுதியில் வாழும் மானமுள்ள தமிழர்களே,இந்த கோ சூ கூனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சிலவற்றை உங்களுக்காக தொகுக்கிறோம்.

- இந்தியர்களுக்கு திறமையில்லையாம்.
இம்முறை தேர்தலில் கெராக்கான் கட்சியின் சார்பில் மொத்தம் 43 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.இதற்கு என்ன காரணம் என்று கேட்ட பொழுது,"இந்தியர்கள் திறமை இல்லாதவர்கள்" என்ற பதில் வந்தது கோ சூ கூனிடமிருந்து.இந்தியர்கள் பதவி வகிக்க திறமையில்லாதவர்கள்,ஆனால் இந்தியர்களின் வாக்குகள் மட்டும் திறமையானதோ?!சொந்த கட்சியில் உள்ள இந்தியர்களை புறக்கணிக்கும் இந்த கோ சூ கூனா நமது தொகுதி இந்தியர்களுக்காக நாடளுமன்றத்தில் குரல் கொடுப்பார்?!சிந்தியுங்கள்....

- சகோதரர் பரஞ்சோதியின் மீது நடவடிக்கை.
கெராக்கான் கட்சியை சேர்ந்த சகோதரர் பரஞ்சோதி அவர்கள் அம்னோ அரசாங்கம் இந்தியர்களை கருவறையிலிருந்து,கல்லறை வரை மூன்றாம் தர குடிமக்கள் போல் நடத்துகிறது என்ற உண்மையை கூறியதற்காக அவரின் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுத்தவர்தான் இந்த கோ சூ கூன்.தனது அம்னோ முதலாளிகளிடம் தன்க்குள்ள விசுவாசத்தை காட்டவே இந்நடவடிக்கை.உண்மையை கூறியதற்காக தண்டிக்கப்பட்டவர் சகோதரர் பரஞ்சோதி அவர்கள்.அந்த மறத்தமிழனை வஞ்சித்த இந்த கோ சூ கூனுக்குதான் உங்கள் வாக்கா??

- அம்னோவின் தீவிர ஆதரவாளர்கோ
சூ கூன்,இனவாத அம்னோவின் தீவிர ஆதரவாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.அம்னோ இளைஞரணி தலைவர் ஹிஷாமுடினின் மிரட்டலுக்கு பணிந்துதான் சகோதரர் பரஞ்சோதி மீது இவர் நடவடிக்கை எடுத்தார் என்பது நினைவுக்கூறத் தக்கதாகும்.அம்னோ தலைவர்களுக்கு இவர் பரம விசுவாசி;மாநில மக்களை விட,தனது கட்சிக்காரர்களை விட,தனது அம்னோ முதலாளிகள்தான் இவருக்கு முக்கியம்.இப்படிப்பட்டவர் நமது தொகுதிக்கு தேவையா??

- பினாங்கு தீவில் நிராகரிக்கப்பட்டவர்.
இவ்வளவு நாளும் பினாங்கு தீவில் உள்ள தொகுதியில் தேர்தலில் நின்ற கோ,இப்பொழுது ஏன் செபராங் பிறை பக்கம் திரும்பியுள்ளார்?!கோ சூ கூன் மீது பினாங்கு தீவில் உள்ள மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,அதனால்தான் இப்பொழுது நமது பக்கம் காற்று வீசுகிறது.அம்னோவின் மிரட்டல்,உருட்டல்களுக்கு இவர் அடிபணிவதுதான் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.அப்துல்லா படாவியின் மருமகன்,கைரி ஜாமலுடினின் நேரடி மிரட்டலைக் கூட எதிர்க்காத இவரின் அம்னோ விசுவாசம்தான் நமது தொகுதிக்கு தேவையா?!கைரியின் பொம்மைதான் உங்களுக்கு வேண்டுமா?!

- இந்தியர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தராதவர்.
சில தினங்களுக்கு முன்பு,வால்டோர் தோட்ட மக்கள் தமிழ்பள்ளியில் போராட்டம் ஒன்றை நடத்தியபோது அவ்வழியே சென்ற கோ,மருந்துக்குக்கூட தனது காரை நிறுத்தவில்லை.உண்மையில் இந்தியர்களிடம் கரிசணை உள்ளது என்றால்,காரை நிறுத்தி அவர்கள் பிரச்சனையை கேட்டிருக்கலாம்தானே?!இப்பொழுது நம் மீது பொழியும் பாசம் எல்லாம் வெறும் தேர்தல் நாடகம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

- பக்கம் இருக்கும் யானை தெரியவில்லை,எங்கோ இருக்கும் ஈ தெரியுமாம்.
ஏறக்குறைய 15 ஆண்டுகளாக பினாங்கின் முதல்வராக இருக்கும் கோ சூ கூனிற்கு,இவ்வளவு நாளும் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் நம் தொகுதி மக்களின் பிரச்சனை தெரியாமல் போனது ஏனோ?!20-30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பினாங்கு தீவில் இருக்கும் போதே நமது பிரச்சனைகளை தீர்க்காத இவர்தான் 300 கிலோமிட்டர் தூரம் இருக்கும் கோலாலம்பூரில் போய் நமது பிரச்சனயை தீர்க்கப்போகிறாரா??சிந்தியுங்கள்....

- இந்தியர்கள் வாக்குகளை நம்பாதவர்.
கோ சூ கூன்,அவர்கள் இந்தியர் வாக்குகளை நம்பி தேர்தலில் தாம் நிற்கவில்லை என்று பிறையில் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.அவர் வாயாலே கூறிவிட்டார்,இன்னும் ஏன் அவருக்கு நாம் வாக்களிக்க வேண்டும்?!இவ்வளவு விளக்கிய பிறகும்,இல்லை நாங்கள் கோ சூ கூனிற்குதான் வாக்களிப்போம் என்று நீங்கள் அடம்பிடித்தால்,அது உங்கள் விருப்பம்.இதற்கு மேல் உங்களை திருத்த முடியாது.

சோற்றில் உப்பிட்டு சாப்பிடும் எந்த தமிழனும்,தமிழர்களை மதிக்காத,தமிழனுக்கு(பரஞ்சோதி) அநீதி இழைத்த இந்த கோ சூ கூனுக்கு வாக்களிக்க மாட்டான் என்பதுதான் உண்மை.தேர்தல் முடிவு வந்தால் தெரியும் நம்மில் எத்தனை பேர் சோற்றில் உப்பிட்டு உண்கிறோம் என்று!!