9.6.09

இரு போராளிகளின் காதல்....


அன்றொரு நாள்,
வளர்ந்து நின்ற பனை மரத்தின் கீழ்,- நாம்
காதல் வசனம் பேசி நின்றோம்!!

இன்றைய நாள்,
அடர்ந்து கிடக்கும் வனத்திற்குள்,- நாம்
கையில் ஆயுதமேந்தி நிற்கின்றோம்!!

அன்றொரு நாள்,
இரு கரம்கூப்பி கும்பிட்டோம், - அந்த
ஊரோரம் ஆலயத்துத் தெய்வத்தை!!

இன்றைய நாள்,
இரு கைவலிக்க தூக்கி நிற்கின்றோம்,- ஏகே 47
தானியங்கி துப்பாக்கியை!!

அன்றொரு நாள்,
வானத்தை உற்று நோக்கி - சிதறிக்கிடக்கும்
நட்சத்திரம் எண்ணினோம்!!

இன்றைய நாள்,
வானத்தை உற்று நோக்குகிறோம், - விமானம்
குண்டு வீச வருதா என்று!!

அன்றொரு நாள்,
சொன்னேன் நான் உன்னிடம் - மணமுடித்தபின்
என் தாய்தான் உனக்கு எல்லாம் என்று!!

இன்றைய நாள்,
சொல்கிறேன் நான் உன்னிடம் - உயிர்விட்டாலும்
தாய் மண்ணின் விடுதலைதான் நோக்கம் என்று!!

நான் உன்னைக் காதலித்தேன்!!
நீ என்னைக் காதலித்தாய்!!
நாம் நம்மை காதலித்தோம்!!

என் காதல் தோற்று நின்றது,
உன் காதல் தோற்று நின்றது,
நம் காதல் தோற்று நின்றது,
நம் உயிர் தாய் மண்மீது கொண்ட காதல் முன்!!

உனக்காக நான் உயிர்விடவும் மாட்டேன்,
எனக்காக நீ உயிர்விடவும் வேண்டாம்!!
இருக்கும் ஒரு உயிரும், - நம்
தமிழ் தேசத்திற்கென்றே போய்விடட்டும்!!

நாம் காதலர்தாம்,
உனக்கு நானும், எனக்கு நீயும் மட்டுமல்ல!!
நாம் இந்த தேசத்தின் காதலர்கள்!!
நம் காதல் இந்த தேசத்தின் விடிவை நோக்கிய காதல்!!