24.2.08

பாரிசான்

எதற்கு பாரிசான்??

இன்று நாம் எதிர்நோக்கும் லிஃப்ட் பிரச்சனை ஒன்று மட்டும் தீர்த்தால் போதுமா??
உடனே இவர்களுக்கு ஓட்டு போட்டு விடலாமா??
நாம் இந்த வீடுகளுக்கு வந்து 8 வருடங்கள் ஆகிறது,அப்போதெல்லாம் தீர்க்காத இந்த பிரச்சனையை இந்த ஓரிரு மாதங்களில் தீர்த்து விடுவார்களா??

தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் இயங்கும்,தேர்தல் முடிந்து 1 மாதத்திற்கு இயங்கும் அவ்வளவுதான்.பிறகு,நீங்கள் மறுபடியும் படிதான் ஏறி இறங்க வேண்டும்.இந்த 1 மாதத்திற்காக,5 வருடங்களை வீணடிக்காதீர்கள்!!

இவர்கள் சொன்னது(பாரிசான்/மஇகா) எதையுமே இதுவரை செய்ததில்லை,இனிமேல் செய்யப்போவதுமில்லை!!

நம்பி,நம்பி ஏமாந்தது போதும்!!
மீண்டும் ஒருமுறை இவர்களை நம்பி ஓட்டு போட்டு விட்டு,புலம்பி கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இவர்கள் நமக்கு செய்த துரோகங்களுக்கு இந்த முறை பாடம் கற்பிப்போம்!!
வேண்டாம் பாரிசான்!!!

23.2.08

L.கிருஷ்ணன்

வேண்டாம் பாரிசான்......

யார் இந்த L.கிருஷ்ணன்.....
எங்கிருந்து வந்தார்.......

மீடாஸ்(MIDAS) என்ற தனியார் கல்லூரி ஒன்று பட்டவொர்த் பகுதியில் இயங்கி வந்ததை நீங்கள் அறிவீர்கள்.அந்த மீடாஸ் கல்லூரியின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவர்தான் இந்த கிருஷ்ணன்.
மீடாஸ் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் பெரும்பாலானோர் நமது இந்திய மாணவர்கள் ஆவர்.நடுத்தர,ஏழை இந்திய மாணவர்களே இங்கு பயின்றவர்களில் அதிகம்.
அந்த மீடாஸ் கல்லூரியின் நிலை இன்று என்ன ஆனது??
அங்கு பயின்ற இந்திய மாணவர்களுக்கு தகுதிகேற்ற சான்றிதழ் கிடைத்ததா??
பல லட்சம் வெள்ளிகளை நமது மாணவர்களிடமிருந்து வாங்கி சேர்த்த மீடாஸ் நிர்வாகம் என்ன ஆனது??
இந்த கிருஷ்ணன் ஏன் அந்த மீடாஸ் கல்லூரியை தொடர்ந்து நடத்தவில்லை??

அதன் பிறகு இதே L.கிருஷ்ணன் செபராங் ஜெயாவில் ரீஃபா(RIFA) என்ற கல்லூரியை தொடங்கினார்.அந்த கல்லூரியிலும் நம் இந்திய மாணவர்கள்தான் அதிகம்.அந்த கல்லூரியில் பயிலவும் நம் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தனரே,அவர்களுக்கு அதற்கேற்ற சான்றிதழ் கிடைத்ததா??அந்த கல்லூரி என்ன ஆனது??அதில் பயின்ற மாணவர்கள் என்ன ஆயினர்??அங்கு சேர்த்த லட்சக்கணக்கான பணம் என்ன ஆனது??


கடந்த 3-4 வருடங்களாக செபராங் பிறை நகராண்மை கழகத்தில்(MPSP) கவுன்சிலராக இருப்பவர் இதே L.கிருஷ்ணன்தானே?இவர் கவுன்சிலராக இருந்த காலத்தில் எத்தனை இந்தியர்கள் நகராண்மை கழகத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர்??இதே கிருஷ்ணனுக்கு தெரிந்துதானே செபராங் பிறை நகராண்மை கழகத்தினர்(MPSP) பத்து கவானில் உள்ள இந்து ஆலயத்தை உடைக்க சென்றனர்.(பிறகு மக்கள் சக்தி தலையீட்டால் அந்த ஆலயம் தப்பித்தது)மக்களுக்கு L.கிருஷ்ணன் சொல்ல வேண்டிய பதில்கள் இன்னும் சரியாக கிடைக்காத நிலையில் L.கிருஷ்ணன் எதை நம்பி பொதுத்தேர்தலில் நிற்கிறார்?

சமுதாய இளைஞர்களின் பணம் என்ன ஆனது என்று கிருஷ்ணன் முதலில் பதில் சொல்வாரா??
கிருஷ்ணன் நகராண்ணை கழக உறுப்பினராக இருந்த காலத்தில் சமுதாயத்திற்கு என்னதான் செய்தார்??
பதில் சொல்வாரா கிருஷ்ணன்??

எதையுமே ஒழுங்காய் செய்யாத கிருஷ்ணனை நம்பியா நீங்கள் போக போகிறீர்கள்?
போங்கள்,போங்கள்,
இராஜபதி 13 வருடம் மாபெரும் சேவை செய்தார்,L.கிருஷ்ணன் ஒரு 10 வருடமாவது சேவை செய்யட்டுமே என்கிறீர்களா??

ஆமாம் 29 வருடமாக இந்த சமுதாயத்திற்கு சோதனைகள் பலவற்றை தந்த சாதனை தலைவரின் கட்சிக்காரர் ஆயிற்றே,செய்யட்டும்,செய்யட்டும்!!!
தலைவரின் வழியில் இவரும் சேவை செய்யட்டும்!!!

வேண்டாம் பாரிசான்!!!

வேண்டாம் தேசிய முன்னணி!!

ஏன் வேண்டாம்?

கடந்த 13 வருடங்களாக பிறை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ இராஜபதி ஒரு வருடத்தில் எத்தனை முறை நம் தொகுதிக்கு வந்திருப்பார்?ஒரு மாதத்திற்கு ஒரு முறையேனும் வந்திருப்பாரா??ஏதாவது ருக்குன் தெத்தாங்கா நிகழ்வு என்றால் தலை காட்டுவார்..அவ்வளவுதான்!!
ஒரு மக்கள் பிரதிநிதியின் வேலை அவ்வளவுதானா??நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்!!


1995 பொது தேர்தலின் போது கம்போங் தெலுக்-விற்கு வருகை தந்த டத்தோஸ்ரீ சாமிவேலு கூறினார்.
"உங்கள் அனைவருக்கும் வீட்டுக்கு வீடு,தரை வீடு வாங்கி தருவதற்கு நான் பொறுப்பு!"
ஆனால் அந்த வருட கடைசியிலேயே நாமெல்லாம் கம்போங் தெலுக்,பிறை தோட்டத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு கொண்டேனா வீடுகளில் அடைக்கப்பட்டோம்.அதன் பிறகுதான் நாம் இன்று இருக்கும் இந்த வீடுகள் கட்டப்பட்டன.சாமிவேலுவின் மொழியில் இதுதான் தரை வீடுகளோ?! இன்று வாக்குகள் கேட்டு வரும் கிருஷ்ணனோ,அல்லது இங்கு இயங்கும் மஇகாகாரர்களோ இதற்கு பதில் சொல்வார்களா??

1999இல் பொதுத்தேர்தல் வந்த பொழுது இராஜபதி மீண்டும் வந்தார்,"உங்களை சீக்கிரம் உங்கள் வீட்டில் குடிபுக வைக்கிறேன்,எனக்கு ஓட்டு போடுங்கள்!"என்று வந்தார்.நீங்களும் போட்டீர்கள்,மறு வருடமே வசதிகள் குறைந்த இந்த அடுக்கமாடி குடிசைக்கு நாம் மாற்றப்பட்டோம்.முதல் வருடம் தொடங்கி பல தொல்லைகள் நம்மை தொடர்கின்றன.குப்பைகளை கொட்ட ஒரு வழியில்லை,எங்கு பார்த்தாலும் குப்பை,கூளங்கள்.முதலில் இயங்கிய 3 மின்தூக்கிகளில்(lift) 2 சில மாதங்களில் நிறுத்தப்பட்டு,ஒன்றுதான் இயங்கியது.இது 2004 வரை....

2004 தேர்தல் வந்தது,மீண்டும் இராஜபதி வந்தார்,இரண்டு மின் தூக்கிகளை இயங்க வைத்தார்(ஓரிரு மாதங்களில் அதுவும் போனது,வேறு கதை),உடனே ஒட்டு போட்டு அவரை வெல்ல வைத்தீர்கள்.மீண்டும் நல்ல (தூங்கும்)சேவை செய்தார்,இப்பொழுது,"நான் நிறைய (தூங்கும்)சேவை செய்து விட்டேன்,விலகிக்கொள்கிறேன்,"என்று சென்று விட்டார்.

இப்பொழுது அவர் வழியில் இன்னொரு மஇகாகாரர் வந்து,"எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் நானும் நல்ல சேவை செய்வேன்."என்கிறார்.
"இப்பொழுது அரவே ஒடாத மின் தூக்கியை நான் ஓட வைக்கிறேன்,எனக்கு ஓட்டு போடுங்கள்"என்று வீர வசனம் பேசுகிறார்.(சாமிவேலு கட்சியை சேர்ந்தவராயிற்றே,நன்றாய் வசனம்தான் பேசுவார்)எத்தனை நாட்களுக்கு ஓடும்,இரண்டு மாதம்,மூன்று மாதம்??அவ்வளவுதான்,இன்று போனவன் 5 வருடம் கழித்துதான் வருவான்!!மீண்டும் ஒரு லிஃப்ட் நாடகம் நடக்கும்,மறுபடியும் வெற்றி பாரிசானுக்கே!!!

ஐயா,நாமெல்லாம் மனிதர்கள்தானே?
இவர்கள் நம்மை ஆட்டு மந்தைகளைப் போல்தான் இது வரையிலும் நடத்தி வந்தனர்,இனிமேலும் நாம் இவர்களை நம்பலாமா??

வெறும் லிஃப்டுக்கும்,50வெள்ளி பணத்துக்கும்,ஒரிரு கைலிகளுக்கும் உங்கள் வாக்குகளை அங்கு போட்டு விட்டு அடுத்த 5 வருடங்களுக்கு கஷ்டபட வேண்டும் என் நம் தலையில் எழுதி உள்ளதா???
அல்லது நமது நெற்றியில்தான் "இளிச்சவாயர்கள்" என்று எழுதியுள்ளதா?
யோசியுங்கள்;பாரிசானை(மஇகா) நம்பி ஏமந்தது போதும்!!
மாற்று முண்ணனிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்!!!

இந்த பிரச்சனையை சட்ட நடவடிக்கை வழி தீர்த்திருக்க முடியும்,எந்த மஇகா தலைவரும், இந்த தொகுதியின் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினருக்கோ, மாநிலத்தின் முதல்வராக இருந்து இன்று நம் தொகுதியிலேயே நமது வாக்குகள் வேண்டி காத்திருக்கும் கோ சூ கூனுக்கோ அக்கறையில்லை.தேர்தல் வந்தவுடன் திடிர் பாசம் நம் மீது பொத்துக்கொண்டு வருகிறது!!

நம்பாதீர்கள்........
பொய்யர்களை நம்பாதிர்கள்!!!
பாரிசானை நம்பாதிர்கள்!!
உங்கள் வாக்கு யாருக்கு வேண்டுமானலும் விழலாம்,பாரிசான் வேட்பாளருக்கு மட்டும் விழ்க்கூடாது!!!

பிறையில் தேர்தல் களம்....

பிறையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.திடீர்,திடீர் மாற்றங்கள் பல நிகழ்ந்தது பிறை தொகுதியில்தான்.
சாமிவேலுவிற்கு சில பாடங்கள் கற்றுக்கொடுத்தது நம் தொகுதி;எதிரணியின்(மாற்று முண்ணனி) நேர்மையை சோதிக்க வைத்ததும் நம் தொகுதிதான்.

சரி இப்பொழுது தொகுதியின் முக்கிய விடயத்திற்கு வருவோம்;
யாருக்கு நமது வாக்குகள்??


ஏன் L.கிருஷ்ணனுக்கு வாக்களிக்க கூடாது......

இவர் தேசிய முன்னணி(மஇகா) வேட்பாளர்.

தேசிய முண்ணனியை பொறுத்த வரை அவர்கள் இந்தியர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.கடந்த 25 நவம்பர் 2007 அன்று தலைநகரில் உரிமைகளை கேட்டு ஒன்று கூடிய நமது மக்களை கண்ணீர் புகை கொண்டும்,இரசாயன நீர் கொண்டும் தாக்கியவர்கள் இதே பரிசான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் மலேசிய போலிசார்தான்.அதோடு மட்டுமல்லாமல் பத்துமலை திருத்தலத்தின் வாசற் கதவுகளை அடைத்து விட்டு அங்கிருந்த ஆயிரகணக்கான நம் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் இந்த பாரிசான் ஆட்சிதான்.அதோடு நின்று விடாமல் 31 தமிழர்கள் மீது கொலைக முயற்சி குற்றஞ்சாட்டியதும் இந்த பாரிசான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சட்டத்துறைதான்

19.2.08

மழலைகளை மதிக்கத்தெரியாத ஜென்மங்களுக்கு மலர் கொடுக்க போனது நம் குற்றம்தான்!!

எனக்கு பெரிய காதுகள் உள்ளன;கண்டிப்பாக உங்கள் குறைகளை நான் கேட்பேன்!!-இப்படி சொன்னவர்தான் கடந்த 16ஆம் தேதி அன்று கோரிக்கை வைக்க மலர் தாங்கி வந்த மழலைகளைக் கூட இரசாயன கலவை நீர் கொண்டும்,கண்ணீர் புகைக்கொண்டும் தாக்கிய மலேசிய காவல் துறைக்கு பொறுப்பான உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருமான மாண்புமிகு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா படாவி(இந்த பெயரை எழுதும் பொழுது கூட எனக்கு இரத்தம் தலைக்கேறுகிறது).பிப்ரவரி 16ஆம் தேதி காலை மணி 8 இருக்கும்,வீட்டிலிருந்து கிளம்பி மலர் வழங்கும் நிகழ்வு நடைபெறப்போகும் மலேசிய நாடாளுமன்றத்திற்கு விரைந்து சென்றேன்.ஜாலான் பார்லிமெனில் என்றும் இல்லா நெரிசல் தெரிந்தாலும்,தொடர்ந்து சென்றேன்.நாடாளுமன்ற வாயிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டிருந்தது.நாடாளுமன்றத்திற்குள் நுழைய பல்வேறு வழிகளிலும் முயன்றுக்கொண்டிருக்கையில்,ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து,நிகழ்வு கோலாலம்பூர் சுதந்திர வளாகத்தில் நடைபெறுவதை அறிந்து அங்கு விரைந்தேன்.நான் கோலாலம்பூரின் மையப்பகுதியை அடைந்த பொழுது,ரசாயன நெடி அடிக்க தொடங்கி விட்டது.அங்கும் இங்கும் அலைந்து ஒரு வழியாய் மோட்டார் வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கையிலே,அங்கு கூடியிருந்த தமிழர்கள் அங்குமிங்குமாய் கலைந்து கொண்டிரூந்ததை காண முடிந்தது,மேலும் நடந்த பொழுதுதான் அங்கே போலிசாரின் கடுமையான நடவடிக்கைகளை கண்ணாறக் கண்டேன்.அந்த இடத்தில் அவர்களிடம் அகப்பட விரும்பாமல் மெர்டேக்கா சதுக்கத்திற்கு சென்றேன்.அங்கு வரிசையாய் நின்றிருந்த FRU வாகனங்களை கடந்து சென்ற போது அங்கு நின்றிருந்த யாரும் கவனிக்கவில்லை.மெர்டேக்கா சதுக்கம் எங்கும் ஒரே போலிசாரின் நடமாட்டம்தான் தென்பட்டது,ரசாயன கலவை எங்கும் ஊற்ற பட்டிருப்பதை காண முடிந்தது.இப்பொதெல்லாம் மக்கள் கூட்டம் ப்போலீசாரின் வன்முறையால் கலைக்கப்பட்டிருந்தது.அங்குமிங்கும் சில செய்தியாளர்களை காண முடிந்தது.அப்பொழுதுதான் என்னை அனுகிய ஒரு செய்தியாளரிடம் நநன் பேசிக்கொண்டிருந்தேன்.அங்கும் வந்துவிட்ட போலிசார் அனனவரையும் விரட்டியடித்தனர்.ஆகவே நடையைத் தொடர்ந்தேன்.பேரணி கலைக்கப்பட்டதை அடுத்து வீட்டுக்கு திரும்பும் எண்ணத்தோடு நடந்தேன்,தேசிய பள்ளிவாசலை அடைந்த பொழுது,ஓர் நபர் பின்னாளிருந்து என் பிடரியை அழுத்தி,

"நான் போலிஸ்,மல்லுக்கட்டாமல் என்னோடு வா" என்றான்.

"எதற்கு?"நான் கேட்டேன்.

"உன்னை கைது செய்கிறேன்."

"எதற்கு?"

"சட்டவிரோதமாக ஒன்று கூடியதால்."

"இங்கு இருப்பது நான் ஒரே தமிழன்,யாரோடு ஒன்று கூடினேன்??"

15.2.08

நாளை பிஞ்சு ரோஜாக்களின் அணிவகுப்பு;பிஞ்சுகளை பிரதமர் அரவணைப்பாரா?போலிஸ் அராஜகம் மீண்டும் தலைத்துக்குமா??

நாளை 16ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2008 அன்று,பிஞ்சு குழந்தைகள் ரோஜாக்களை ஏந்தி பிரதமரை காண நாடாளுமன்றத்துக்கு வருகின்றனர்.பல நூறு குழந்தைகளை முன்னின்று அழைத்து வரப்போகிறாள் சிறுமி வைஷ்ணவி.வைஷ்ணவியோடு சேர்ந்து ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களை குறைகளை கூறுங்கள்,நான் கண்டிப்பாக கேட்கிறேன்;எனக்கு இரண்டு பெரிய காதுகள் இருக்கின்றன என்று பிரதமர் கூறியிருந்தது ஞாபகம் இருக்கலாம்.இந்த குழந்தையின் மழலை மொழி பிரதமரின் காதுகளில் விழுகின்றதா பார்க்கலாம்.இந்த மழலலகளின் பேரணிக்கு இன்னும் சில மணி நேரமே இருக்கும் வேளையிலும் கூட பிரதமரிடமிருந்து சாதகமான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் தெரிய வருகிறது.

"நான் ஏன் வரவேண்டும்?"
இந்நிலையில்,பிரதமர் அவகளிடம் இப்பேரணி குறித்து செய்தியாளர்கள் வினவியபோது,"நான் ஏன் வரவேண்டும்?" என்று பிரதமர் வினவியுள்ளார்.
அப்படி அவர் வினவியது உண்மையானால்,அதை நினைத்து நாம் பெரிதும் கவலையடைகிறோம்.மலேசிய மக்கள் அனைவருக்கும் அவர்தானே பிரதமர்,அவர் வராமல்,பக்கத்து நாடான தாய்லாந்து பிரதமரா வரவேண்டும்?
50 ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது;நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள்தாம்,எங்களுக்கும் நீங்கள்தான் பிரதமர்;நீங்கள்தான் வரவேண்டும்.வந்து எங்கள் கோரிக்கைகளை கேட்கவேண்டும்!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட,நீங்கள்தான் இடைக்கால அரசின் தலைவர்,உங்களிடம்தான் கோரிக்கை விட முடியும்.இது உங்களுக்கு நாங்கள் தரும் தனிப்பட்ட மரியாதை அல்ல;உங்கள் வசம் இருக்கும் அந்த பதவிக்கு தரப்படும் மரியாதை!!இது உங்களிடம் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையல்ல,அரசியலமைப்பு சட்டத்தின்படி மாமன்னரின் மேல் வைத்துள்ள நம்பிக்கை!!பதவிக்கும்,அரசியலமைப்பு சட்டத்துக்கும், மாமன்னருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டியது உங்களின் கடமை என்பதை மறந்து விட வேண்டாம்!!

நாளை உங்களை தேடி வரும் குழந்தைகள் பாசத்தோடு வருகிறார்கள், அவர்களை ஏமாற்றி விடாதீர்கள்.

பாசத்தொடு வரும் குழந்தைகளை,பாக் லா அரவணைப்பாரா;
அல்லது புகைக்குண்டும்,இரசாயனமும் கலந்து விரட்டியடிப்பாரா என்று பார்ப்போம்.

மக்களின் குரல் எல்லாம் விளங்கும் பாக் லாவிற்கு,மழலைகள் குரல் விளங்குமா??
அல்லது,அதுவும் மலாய் மழலையாக இருந்தால்தான் விளங்குமா??

விடை இன்னும் சில மணி நேரத்தில் நமக்கு கிடைத்துவிடும்.

மக்கள் சக்தி வெல்லும்!!

13.2.08

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.....

நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து,தேர்தல் ஆணையம் இன்று பொதுத்தேர்தலுக்கான நாளை அறிவித்தது.தேர்தல் ஆணையத்தின் நடப்பு தலைவரான, அப்துல் ரஷிட் அவர்கள் இந்த தகவலை இன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி விட வேண்டும் என்பதை மலேசிய அரசியலமைப்பில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே நட்டின் 12வது பொதுத்தேர்தல் எப்ரல் 13 தேதிக்கு முன்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.(ஏப்ரல் 15க்கு பிறகு முன்னாள் துணைப்பிரதமர் அன்வார்,தேர்தலில் போட்டியிட முடியுமென்பது குறிப்பிடத்தக்கது)

இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையத்தின் தலைவர் அவர்கள்,பிப்ரவரி 24ஆம் தேதியை வேட்புமனு தாக்கல் செய்யும் நாளாக அறிவித்தார்.அதைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள முடியும்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக 12 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொதுதேர்தலானது,மார்ச் 8ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 24க்கு பிறகுதான் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியுமென்றாலும்,
கடந்த சில மாதங்களாகவே,மறைமுக பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மக்களிடம் விளக்க,இன்று தொடங்கி 22 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில்தான்,வருகிற 16ஆம் தேதி,இந்தியர்கள் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு முன் ஒன்று கூட விருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 இந்து உரிமை பணிப்படை தலைவர்களை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ள இந்த பேரணி நடத்த்ப்படுகிறது.இந்த பேரணிக்கு முறையாக விண்ணப்பித்தும்,காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய வாக்காளர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்ற விவாதம் ஒரு புறம் தொடர்ந்து நடக்கையிலே,இந்த பேரணியினால்,இந்திய வாக்களர்களின் சிந்தனையில் ஏதாவது மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் கூறமுடியும்.மலேசிய காவல்துறை இம்முறை இந்தியர் பேரணியை எப்படி கையாளுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிப்ரவரி 16ஆம் நாள் நடக்கப்போவதுதான்,மார்ச் 8ஆம் தேதிக்கு அடித்தளம் என்று கூறலாம்.மீண்டும்,மீண்டும் நாம் ஒற்றுமையைக் காட்டுவோம்.நமது குரல் தொடர்ந்து ஓங்கட்டும்,நாம் நிச்சயம் வெல்வோம்!!

மக்கள் சக்தி வெல்லும்.

12.2.08

நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது....

ஆகக்கடைசியாக எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி,சில நிமிடங்களுக்கு முன்பு,மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!


சற்று நேரத்திற்கு முன்பு,மாண்புமிகு பிரதமர் அவர்கள் தனது விருப்ப எண்ணான 13 என்ற எண்ணைக் கொண்ட மெர்சடிஸ் பேன்ஸில் மாமன்னரின் அரண்மனைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பொதுதேர்தலின் போதும் பிரதமர் இதே காரில்தான் அரண்மனைக்கு வந்தார் என்பதும்,பிறகு நாடளுமன்றத்தை கலைத்தார் என்பதும்


நேற்று வரையில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று கூறிவந்த பிரதமர் இன்று நாடாளுமன்றத்தை கலைத்தார்.இந்த சாதரண இந்த விவகாரத்தில் கூட தனது வாக்குறுதியை காப்பற்ற முடியாத இவரின் தேர்தல் வாக்குறுதிகளையா நம்புவது??

பிரதமர் தனது ஆளும் தேசிய முன்னணி கூட்டணி,வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பன்மையை பெறும் என்று நம்பிக்கக தெரிவித்தார்.

சீனர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்திருப்பது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.சீனர்களின் நாள்காட்டியில் இன்று ஏழாவது நாளகும்,நாளை மறுநாள் ஒன்பதாவது நாளில் சீனர்களின் மிக முக்கிய கொண்டாட்டம் வரும் வேளையில்,பிரதமரின் இந்த செயலானது மற்ற இனத்தினரின் உரிமைகளையும்,கலாச்சரத்தையும் மதிக்காத செயலாகும்.ஏற்கனவே,தீபாவளியின் போது அம்னோ மாநாட்டை நடத்திவிட்டு,இந்திய பத்திரிக்கை விநியோகஸ்தர்களை சாடிய,இனவாத அம்னோ அரசிடமிருந்து வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்.

மக்கள் விழித்துக்கொண்டால் சரி,

இனவாதத்தை வெறுப்போம்,சம உரிமையை மீட்போம்!!

மக்கள் குரல் ஒங்குக,மக்கள் சக்தி வெல்லும்!!

11.2.08

முக்கிய அறிவிப்பு....

நண்பர்களே,

மலேசியாவின் 13வது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால்,நாட்டின் அரசியல் சூழ்நிலை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இம்முறை நடைப்பெறும் தேர்தலானது மக்கள் சக்தி எழுச்சிக்குப் பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால்,தமிழர்களின் முக்கிய தேர்தலாகவும் அமைந்துள்ளது.

இத்தேர்தலில் பத்து கவான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் பேராசிரியர் இராமாசாமி அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பினாங்கு மாநில ஜசெகவிலிருந்து தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு வந்திருப்பதால்,எந்நேரத்திலும் நான் பினாங்கு செல்ல நேரிடலாம்.அரசியல் பணி காரணமாக எனது இலக்கிய பணிகளில் சற்று தேக்கம் எற்படலாம்.

அதிலும் முக்கியமாக,எனது கவிதையும்(http://www.kavithaiyum.blogspot.com/) வலைப்பதிவில்தான் எழுத்துகள் சற்றுக் குறையும்.

இன்று இரவு (12-02-2008) தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிய வருவதால்,எனது தேர்தல் பணிகள் இன்றிலிருந்து தொடங்கலாம். ஆகவே,எனது கிறுக்கல்களிலிருந்து உங்களூக்கு சிறு விடுதலை.தினமும் கிறுக்க முடியவில்லையெனினும்,2-3 நாட்களுக்கு ஒரு தடவையாவது கிறுக்கி உங்களை இம்சிப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து தேர்தல் பற்றிய உடனடி செய்திகள்,அறிவிப்புகள் ஆகியவையே இந்த ஒரு மாதத்திற்கு முக்கியத்துவம் பெரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆகவே,அரசியல் வாடை பிடிக்காதவர்கள் சற்று பொறுத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

வாழ்க மக்கள் சக்தி;
ஒங்குக மக்கள் குரல்!!

முன்னாள் அமைச்சர் ஆதி.நாகப்பன் மகன் மஇகாவிற்கு எதிராய்!!

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் திரு.ஈஸ்வர் ஆதி.நாகப்பன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை,பின்வருமாறு :


என்னுடைய தந்தை தான்ஸ்ரீ ஆதி.நாகப்பன் அவர்கள் 32 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனடி சேர்ந்தார்.அவர் இறைவனடி சேர்வதற்கு ஏறக்குறைய 1 மாதத்திற்கு முன்பு,பினாங்கு மஇகாவினர் அவருக்கு பாராட்டு விருந்து அளித்த போது,அவர் ஆற்றிய உரையின் சாரம்சம்,பின்வருகிறது :


அரசாங்கம் தற்பொழுது நாட்டு மக்களிடையே நிழவும் ஏழ்மையை துடைத்தொழிக்க நடவடிக்கைத் திட்டங்களை வரும் முன்றாவது மலேசியத் திட்டத்தில் முன்னெடுக்க உள்ளது.இதில் இனவாரியாக ஏழ்மை ஒழிப்பை மேற்கொள்ளாமல்,அனைத்து இனத்தினரும் பயனடைவர்!
ஏழ்மை அனைத்து இனங்களிலும் உள்ளது.ஏழ்மை ஒழிப்பு என்று வந்துவிட்ட பிறகு,மலாய் ஏழைகள்,சீன ஏழைகள்,இந்திய எழைகள் என்று பார்க்கக்கூடாது.எழ்மை என்று வந்துவிட்டால் அது அனைவருக்கும் சமமே.நாட்டின் பொதுவான ஏழ்மை என்று கருதி அதனை துடைத்தொழிக்க முற்பட வேண்டும்.வாய்ப்புகளையும்,வசதிகளையும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்வதன் மூலமே,இந்த இலக்கை நாம் அடைய முடியும்.பிரதமர்(துன் ஹூசேன் ஓன்) அவர்கள் எழ்மை ஒழிப்பில் மிக மும்முரமாக இருக்கிறார் என்பதை நானறிவேன்.மஇகா அரசாங்கத்தின் இம்முயற்சிக்கு முழு ஆதரவை தெரிவிப்பதோடு, அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கும்.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் அப்துல்லா படாவியும் இதைப்போன்ற கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
"இந்தியர்கள் மட்டும் ஏழைகளாக இல்லை,ஏழை சீனர்கள் உள்ளனர்,எழை மலாய்க்காரர்கள் உள்ளனர்,மற்ற பூமிபுத்ராக்களும் எழைகளாக உள்ளனர்.ஏழ்மை ஒழிப்பு என்பது,"அனைத்து இனங்களையும்" உட்படுத்தியதாக இருக்கும்.மீண்டும் சொல்கிறேன்,அனைத்து இனங்களையும் உட்படுத்தியதாக இருக்கும்,இதுதான் நமது ஏழ்மை ஒழிப்பு கொள்கையாக இருந்து வந்துள்ளது,இனிமேலும் இருக்கும்."இவ்வாறு அம்னோ தலைவரான அப்துல்லா படாவி கூறியுள்ளார்.
நண்பர்களே,பிரதமர் இப்பொழுது கூறியுள்ள கருத்துகளை ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு முன்பே என் தந்தை கூறிவிட்டார்.ஆனால் அதன் செயல்பாடுகள்தான் இன்னும் வந்த பாடில்லை.என் தந்தை அன்று சொன்னதத,புதிதாக கூறுவது போல் கூறுவதிலிருந்தே,தேசிய முன்னணியின் நெடுங்கால தோல்விகளை நம்மால் அறிய முடிகிறது.தொடர்ந்து கடந்த 32 வருடங்களாக மக்களை,பொய் வாக்குறுதிகளை கூறி ஏமற்றி வருகிறது இந்த தே.மு அரசாங்கம்!!
கடந்த சில மாதங்களாக நிகழும் தொடர் நிகழ்வுகளிலிருந்தே,தற்போதைய மஇகா தலைமைத்துவத்தின் கீழ் இந்தியர்கள் பெரிதும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் உணர முடியும்.சரிசமமான சொத்துடமை,வாய்ப்புகள், வசதிகளை பகிர்ந்துக் கொள்வதிலிருந்து இந்திய சமூகம் பெரிதும் விடுப்பட்டுள்ளது.எனது தந்தை 1976இல் கூறியது போல் வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதிலிருந்து இந்திய சமுதாயம் விடுப்பட்டதற்கு காரணமே,மஇகா தலைமைத்துவத்தின் அலட்சியம்தான்.பெருபான்மை இந்திய சமூகத்தின் அவல நிலையை முன்னிறுத்த தவறியது மஇகாவின் இயலாமையையே காட்டுகிறது.
வேலை வாய்ப்புகளோ,கல்வியோ,வீட்டுடமையோ,பொருளாதார வளர்ச்சியோ அல்லது அடிப்படை உரிமைகளோ,இவை அனைத்திலும் இந்தியர்கள் இந்நாட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.கடந்த 28 வருடங்களாக இந்தியர்கள்,பின்னோக்கியே சென்று கொண்டுள்ளனர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர்.இதற்கு உதாரணமாக சில கூற்றுகள் :
 1. மலேசியாவில் உள்ள பொது பல்கலைக்கழகங்களில் 3-4% மாணவர்களே இந்தியர்கள்.
 2. மலேசியாவில் உள்ள பல அரசாங்க தாதியர் கல்லுரிகளிலும் மொத்தமே 1% இந்தியர்களுக்குதான் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.
 3. கடந்த 15 வருடங்களில்,ஒரு வருடத்தில் 2.5%க்கும் குறைவான இந்திய மாணவர்களுக்கு மட்டும்தான் நாடளாவிய ஆசிரியர் பயிற்சிக் கல்லுரிகளில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
 4. அரசாங்க,அரசாங்க சார்புடைய அமைப்புகளின் கல்வி நிதியுதவி(Scholarships) 1%க்கும் குறைந்த அளவிலேயே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 5. அரசாங்க ராணுவ கல்லுரிகளில்,ராணுவ பயிற்சி மேற்கொள்பவர்களில் 1% குறைவானவர்களே இந்தியர்கள்.
 6. கடந்த 15 வருடங்களில் காவல்துறையில் பயிற்சி பெற தேர்வு பெருபவர்களில் வருடத்திற்கு 2%க்கும் குறைவானவர்களே இந்தியர்கள்.
 7. அரசாங்க துறைகளில் நிலைமை படுமோசமாக உள்ளது;எதாவது அரசு அலுவலகங்களுக்கு போனால்,இந்திய,சீன அதிகாரிகளை தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.உதாரணத்திற்கு கோலாலம்பூரிலுள்ள விவசாய,மீன்வளத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 400 பேரில்,2 பேர் இந்தியர்கள்,3 பேர் மட்டுமே சீனர்கள்.
 8. KTM என்பது ஒரு காலத்தில் பெரும்பாலான இந்தியர்கள் பணிப்புரியும் துறையாக இருந்தது.ஆனால் இன்று 3% குறைவான இந்தியர்களையே வேலைக்கு சேர்த்துக்கொள்கிறது KTM.
 9. 6 பிப்ரவரி 2008,வரைக்கும் கோலாலம்பூரின் மொத்த பங்கு சந்தையின் மொத்த மதிப்பீடு 764 பில்லியன் வெள்ளிகள்.எனது கண்க்குபடி,இதில் இந்தியர்களின் பங்குடமை 1%க்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடுகிறேன்.

ஏன் இத்தனை வஞ்சனைகள்?

ஏன் இத்தனை பாரபட்சம்??

இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்த அமைக்கப்பட்ட வங்கிகளின் நிலைமை என்னவானதென்பதை கொஞ்சம் பார்ப்போம்.

-தொடரும்-

(பின்குறிப்பு : வாசகர்கள் கவனத்திற்கு,இந்த அறிக்கையை முழுமையாக மொழிபெயர்ப்பதற்கு முன்,எனது தனிப்பட்ட ஆய்வை நான் மேற்கொள்ள விரும்புகிறேன்.ஆகவே,இதன் தொடர்ச்சி வரும் நாட்களில் பிரசுரமாகும். வாசகர்களிடம் ஏதேனும் தகவல் இருப்பின் தயைக்கூர்ந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.மின்னஞ்சல் முகவரி satees_m@yahoo.com )

5.2.08

புலிகளோடு தொடர்பாமே,ஆராயலாமே!!

ஹிண்ட்ராஃபிற்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பாம்!!
சந்தேகிக்கிறார்களாம்!!

நேரடி தொடர்புகள் ஏதும் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்,
ஆனாலும் சில ஒற்றுமைகள் உள்ளன,அவை என்ன எனப்தை ஆராய்வோமே!!

போராட்டம்....
விடுதலை புலிகள் - ஆயுதப்போராட்டம்
ஹிண்ட்ராஃப் - அகிம்சை போராட்டம்
முதல் விடய்த்தில் எந்த ஒரு தொடர்பும் இல்லை!!

போராட்டத்திற்கான காரணம்....
விடுதலை புலிகள் - இனவாதம்,இன அழிப்பை எதிர்த்து
ஹிண்ட்ராஃப் - இனவாதம்,மறைமுக இன அழிப்பப எதிர்த்து
இந்த விடயத்தில் ஒற்றுமை இருக்கிறது.ஸ்ரீ லங்க அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை நேரடியாக மேற்கொள்கிறது.ம்லேசிய அரசாங்கம்,இன அழிப்பை மறைமுகமாக செயல்படுத்துகிறது.இனவாதம் இரண்டு தேசங்களிலும் தலைவிரித்து ஆடுகிறது.சிறுபான்மை தமிழர்கள்,இரண்டு நாடுகளிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்.ம்லேசியாவில் இனவாதமும்,இன் அழிப்பும் மிதமான நிலையில் உள்ளது என்பதால்தான்,போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறுகிறது!!

போராடும் இனங்கள்.......
விடுதலை புலிகள் - ஈழத்தமிழர்கள்
ஹிண்ட்ராஃப் - மலேசியத்தமிழர்கள்
இங்கும் ஒற்றுமை உள்ளது.இரண்டு நாடுகளிலும் போராடுவது ஒரே இனம் என்பதால்,இரண்டு அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதென்றால்,அல்-கய்டா பயங்கரவாதிகளும்,மலேசிய பெரும்பான்மை இனத்தவர்களான மலாய்க்காரர்களும் ஒரே மதம் என்பதால்,ம்லேசிய அரசாங்கத்திற்கும்,அல்-கய்டாவிற்கும் தொடர்பு உள்ளதா?!இது போன்ற கருத்துகள் எற்றுக்கொள்ள முடியாதவையாகும்!!

போரட்டத்தின் தலைமை.....
விடுதலை புலிகள் - மேதகு தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்.
ஹிண்ட்ராஃப் - அண்ணன் உதயக்குமார் அவர்கள்
இரு தலைவர்களுமே தைரியத்தின் முழு உருவங்கள்.போரட்டத்தின் வழிமுறைகள் வேறாக இருந்த போதிலும்,இவர்களை நினைத்தாலே எதிரிகளின் வயிற்றில் புளி கரையும்.தலைவர் பிரபாகரனின் போர் உத்திகளுக்கு எப்படி சிங்களம் பயந்து அலறுகிறதோ,அதேபோல் அண்ணன் உதயக்குமார் அவர்க்ளின் போரட்ட உத்திகளை கண்டு அம்னோ அரசும்,அதன் கூட்டணி கட்சிகளும் அலறுகின்றன,அதனால்தான் அவரை சிறையில் அடைத்தனர்!!

கருதுகோள்.....
ஆயுதம் ஏந்தி சுதந்திர தேசம் கேட்டு போராடும் புலிகளையும்,அகிம்சை வழியில் அடிப்படை உரிமைகளை கேட்டு போராடும் ஹிண்ட்ராஃபையும் தொடர்பு படுத்துவது அபத்தமானது என்று தெரிந்தும் மலேசிய இனவாத அரசு,அதனை செய்துள்ளது.இதன் மூலம் அந்த ஐவரையும் சிறையில் அடைக்கலாம்.ஆனால்,அவர்கள் ஏற்படுத்திய சிந்தனை புரட்சியை ஒன்றும் செய்துவிட முடியாது!!

தங்களுடைய போராட்டத்தை திசைதிருப்பி தங்களை வன்முறை விரும்பிகள் என சித்தரிக்கப் பார்க்கும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக ஹிண்ட்ராஃபின் ஆதரவளர்கள் வன்முறைக்கு திரும்பினால்,நாடு என்ன ஆகும்?!!தங்கள் தலைவர்களின் வேண்டுகோளை மதித்துதான் அவர்கள் அமைதி காக்கிறார்கள்.அதனால்தான் நாடு தழுவிய நிலையில் பிரார்த்தனை கூட்டங்கள் நடுத்துகிறார்கள்.அதையும் பொறுக்காமல்,குறையும்,கிண்டலும் கூறி வருகிறார்கள் சிலர்.ஆனாலும் அமைதி ஒன்றே நம் வழியென்று நாங்கள் நம்புகின்றோம்.போற்றுவார் போற்றட்டும்,தூற்றூவார் தூற்றட்டும்,எல்லாம் இறைவனுக்கே,என்று சென்று கொண்டிருப்போம்.

அவர்களால் முடிந்ததெல்லாம் குறைகூறல்களும்,கீழறுப்பகளும்தான்.
ஏனென்றால் அர்சாங்கம்தான் அவர்கள் பக்கம்,
ஆண்டவன் நம்ம பக்கம்!!

மக்கள் சக்தி வெல்லும்!!

4.2.08

காந்தியும்தான் போராடினார்....


காந்தி போராடினார்,
அகிம்சைவாதி என்றனர்!!
சுதந்திரம் தன்னை தந்தனர்!!

உதயா அண்ணனும் போராடினார்,
தீவிரவாதி என்றனர்!!
சிறைவாசம்தனைத் தந்தனர்!!

ஏனிந்த பாகுபாடு??
குழப்பத்தில் சூடேறுகிறது என் மண்டையோடு!!
புரிந்து விட்டது,காரணம் தெரிந்து விட்டது,
தமிழ்பட வசனம் ஒன்றுதான் நெஞ்சில் பட்டது!!
காந்தி போராடியது வெள்ளைக்காரனிடத்தில்,
உதயா அண்ணன் போராடுவது கொள்ளைக்காரனிடத்தில்!!

-சதீஸ்-

ஒழிக இனவாத தேமு அரசு,
வாழ்க ம்க்கள் சக்தி,
ஓங்குக மக்கள் குரல்!!

மக்கள் சக்தி வெல்லும்!!

பின்குறிப்பு :
இது என் முதல் பிரசுர கவிதை,இதனை தனது வலைபதிவில் பிரசுரித்த நண்பர் சதீஷ்குமாரின் பெருந்தன்மைக்கும்,என்னை எழுத சொல்லி ஊக்கமளித்ததற்கும் நன்றி.தொடரட்டும் அவரின் தமிழ் பணி.
நண்பர் சதிஷ்குமாரின் வலைப்பதிவு முகவரி :
http://www.olaichuvadi.blogspot.com/

3.2.08

இந்தியர்களின் 7 முக்கிய அதிருப்திகள்-கூறுகிறார் சாமிவேலு.....


இந்தியர்களின் அதிருப்திகளை கலைவத்ற்கு 7 முக்கிய அம்சங்களை கோடிட்டுள்ளார் மஇகாவின் தலைவரும்,பொதுப்பணித்துறை அமைச்சருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ சாமிவேலு.அந்த 7 முக்கிய அம்சங்களானவை :


 • சரிசமமான சொத்துடமை(பங்குச்சந்தை உடமை) ;
 • அரசாங்க பல்கலைகழகங்களில் அதிகமான இந்திய மாணவர்களின் சேர்க்கை;
 • மேம்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள்,குறிப்பாக அரசாங்கத் துறைகளில்;
 • இந்திய மாணவர்களுக்கு அதிகமான அரசாங்க கல்வி நிதியுதவிகள்;
 • மேம்படுத்தப்பட்ட வர்த்தக வாய்ப்புகளும்,சிறு வர்த்தக கடனுதவிகளும்;
 • முறையான புறநகர் ஏழ்மை ஒழிப்புத் திட்டங்கள்;
 • பொதுசேவைத் துறைகளின் நடவடிக்கைகள் சரிசமமாகவும்,நேர்மையாகவும் நடப்பதை கண்காணிக்கவும்,மேம்படுத்தவும் முறையான செயல்திட்ட வடிவமைப்பு.


இந்த 7 முக்கிய அம்சங்களை தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று,துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களிடம் சாமிவேலு இன்று கோரிக்கை விடுத்தார்.இந்த 7 அமசங்கள்தான் இந்தியர்களை மேம்படுத்தும் மஇகாவின் முயற்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அவர் கூறினார்.

"மற்ற இனங்களை போலவே தங்களின் வாழ்வாந்தரமும்,சமுதாய,பொருளாதர வளர்ச்சிகளும் இருக்க வேண்டுமென்று இந்தியர்கள் விரும்புகிறார்கள்.மஇகாவின் ஆய்வுப்படி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளும்,கோரிக்கைகளும் மிக அதிகமாக உள்ளன,இதற்காக அவர்கள் தொடர்ந்து எங்களை நாடியும் வருகின்றனர்." என்று சாமிவேலு கூறினார்.

சமிபகாலமாக,மலேசிய இந்தியர்களின் தோல்விகளுக்கு காரணமாக தொடர்ந்து குறைக்கூறப்படும் சாமிவேலு,இந்தியர்களின் எதிர்பார்ப்பு சரிசமமான,நியாயமான அரசாங்க கொள்கைகளே என்று கூறினார்.
மேற்குறிப்பிட்ட 7 புள்ளிகளைப் பற்றி தொடர்ந்து பேசிய சாமிவேலு,பங்குச்சந்தையில் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக அரசாங்கம் PNB-இன் மூலம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.இதன் மூலம் 2020க்குள் இந்தியர்கள் 3% சொத்துடமையை அடைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதுவரை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு நன்றியும்,பாரட்டையும் தெரிவிக்கும் அதேவேளை,இவ்வாறான முயற்சிகள் மேலும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும்,அப்போதுதான் இந்தியர்களின் சமூக,பொருளாதார சிக்கல்களை கலைய முடியுமென சுட்டிக்காட்டினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்ட இந்த 7 புள்ளி அம்சங்களுக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காணும் எனவும் சாமிவேலு நம்பிக்கை தெரிவித்தார்."நான் கடந்த சில மாதங்களாக அமைச்சரவையில் இதுகுறித்து பேசி வருகிறேன்,விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,"என்று அவர் கூறினார்.

தற்போது இந்தியர்களின் மத்தியில் நிலவும் அதிருப்தி,மஇகாவை தேர்தலின் போது பாதிக்காது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்."மக்களின் விசுவாசமும்,நம்பிக்கையும் தேசிய முன்னணியின்பால் இருந்ததால்தான் 2004 பொதுத்தேர்தலில் நாங்கள் 100% வெற்றியடைந்தோம்.மக்களின் தேவைகளையும்,அனைத்து இனங்களுக்கும் சமூக,பொருளாதர மேம்பாட்டையும் தேசிய முன்னணியால் மட்டுமே வழங்க முடியும் என்பதை இந்தியர்கள் எப்போதும் உணர்ந்துள்ளார்கள்" என்று அவர் கூறினார்.

(நன்றி: மலேசியா கினி இணையத்தளம்)

மலேசிய அமைச்சரவையில் இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக இருக்கும் சாமிவேலு,இறுதியில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.அரசாங்கத்தின் கொள்கைகளால் மலேசிய இந்தியர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதையும்,அரசாங்கம் இத்ற்கு உடனடி தீர்வு காணவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள சாமிவேலு,மலேசிய இந்தியர்கள் இன்னும் அம்னோ தலைமையிலான அரசாங்த்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளதை நினைத்து அழுவதா,சிரிப்பதா,என்று தெரியவில்லை!!பிறகு மற்றொன்றும் கூறியுள்ளார், "இதுவரை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டும்,நன்றியும் தெரிவிக்கும் அதேவேளை,"சாமிவேலு இதன்மூலம் தனது அம்னோ முதலாளிகலிடம் தனக்கிருக்கும் விசுவாசத்தை மறு உறுதி செய்துள்ளார்.

இதுவரை இந்தியர்களின் நிலையை மேம்படுத்த அரசாங்கம் என்ன செய்தது??

இதற்கு சாமிவேலுவோ,மற்ற மஇகா தலைவர்களோ நேர்மையான பதிலை சொல்வார்களா??

அரசாங்கம் எதுவுமே செய்யவில்லையென்று நான் கூறவில்லை,செய்தது;நாம் 100 கேட்டால்,அதில் 4- 5 செய்தது.அந்த 4-5க்கும் மஇகாவும் அதன் தலைவர்களும் வாழ்த்துரைகளும் நன்றியுரைகளும் கூறி ஆர்ப்பட்டங்கள் புரிவர்;ஏதோ உலக மகா காரியத்தை சாதித்ததைப் போல் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்!!சமுதாயத்தின் தலைவர்கள் என்று தங்களை பாரைச்சற்றிக்கொள்ளும் இவர்கள் முதலில் என்ன செய்திருக்க வேண்டும்,இது எங்களுக்கு போதாது,முழுமையாக கொடுங்கள்,இல்லாவிட்டால் இன்னும் அதிகமாக கொடுங்கள்;பிச்சைப்போடுவதைப் போல் கொடுக்காதீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும்!!அதைத்தான் மக்கள் தங்கள் தலைவனிடம் எதிர்ப்பார்ப்பார்கள்!அவர்கள் போடும் பிச்சையை எடுத்துக் கொண்டு காத்திருப்போம் என்ற வாசகங்களையல்ல!!எதுவரை காத்திருப்பது??காத்திருந்து,காத்திருந்து விரக்தியின் உச்சிக்கு சென்றதன் வெளிப்பாடுதான் கடந்த 25 நவம்பர் தேதி எற்பட்ட பேரெழுச்சி!!

அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளும்,அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி என்ற் முறையில் சாமிவேலுவைத் தாண்டித்தான் வருகிறது,பிறகெப்படி இத்தனை நாளும் நம் சமுதாயம் இவ்வளவு வஞ்சிக்கப்ப்ட்டது???

இவ்வள்வு நாளும் மலேசிய இந்தியர்களுக்கு எந்த்வொரு அதிருப்தியும் இல்லை,அதெல்லாம் சும்மா என்று கூவி வந்த சாமிவேலுவுக்கு,ஏன் சமுதாயத்தின் மீது திடிர் கரிசணை??

நெருங்கிவரும் பொதுதேர்தலினாலா??

இன்று எமது அதிருப்திகளை பற்றி பேசிவிட்டதால்,மக்கள் தம்மை தொடர்ந்து ஆதரிப்பர் என்று தப்பு கணக்கு போடுகிறார் சாமிவேலு!!ஹிண்ட்ராஃபின் உதயத்திற்கு பிறகு,மலேசியத் தமிழ் மக்கள் விழித்துக் கொண்டனர் என்று சாமிவேலு இன்னும் உணரவில்லை போலும்!!ஹிண்ட்ராஃபையும் மக்கள் சக்தியையும் எதிர்க்கும் எவரையும் மக்கள் நம்பப் போவதில்லை!!சாமிவேலு பல சந்த்ர்ப்பங்களில் ததம் ஹிண்ட்ரஃபை வெறுப்பதை உறுதி செய்துள்ளார்,அகவே,மக்களின் ஆதரவை அவர் எதிர்பார்ப்பது வீண்!!!


ஹிண்ட்ராஃபின் எழுச்சியை மறுப்பதற்கு இவர் சொன்ன காரணங்களை வைத்தே நமது உரிமைகளை மறுக்கப் போகிறார்கள்,அதற்கு முதல் அச்சாணிதான் நேற்றைய மாநாட்டில் நஜீப்பின் உரை!!!(இதைப்பற்றி பிறகு விவாதிப்போம்)

மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு பலரும் பலவாறு முயன்றாலும் முடியாது!!

ஏனென்றால்,

அரசாங்கம்தான் அவங்க பக்கம்,ஆண்டவன் நம்ம பக்கம்!!

மக்கள் சக்தி வெல்லும்!!

2.2.08

லண்டன் வாழ் மலேசியத் தமிழர்களின் அடையாள போராட்டம் இனிதே நடைப்பெற்று முடிவுற்றது....நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி,திட்டமிட்டபடி லண்டன் வாழ் மலேசியத் தமிழர்கள் லண்டன்,10,டவ்னிங் சாலையில் அமைந்துள்ள பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்களின் இல்லத்திற்கு முன்பு கூடி,அமைதிப் போராட்டம் நடத்தினர்.

இந்து உரிமைப் பணிப்படையின் தோற்றுனரும்,தலைவரும் ஆன திரு.வேதமூர்த்தி அவர்களின் தலைமையில் இவ்வடையாள போராட்டம் நடைப்பெற்றது.சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்று சற்று நேரத்திற்கு முன்பு நாம் தொடர்பு கொண்ட லண்டனில் உள்ள மலேசியத் தமிழரின் மூலமாக அறிய வருகின்றது.

இவ்வடையாள போரட்டத்தின் முடிவில்,நாம் பெரிதும் எதிர்ப்பார்த்ததைப் போல் பிரிட்டன் பிரதமர் அவர்கள் நேரில் வந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொள்ளாத போதிலும்,அவரின் பிரதிநிதி மனுவைப் பெற்றுக் கொண்டாரென அறிய வருகிறது.இவ்வடையாள போரட்டத்திற்கு பிரிட்டன் காவல் துறை அனுமதி அளித்தது மட்டுமல்லாமல்,போராட்டத்தின் இறுதி வரையிலும் பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.(மலேசிய காவல் துறை இவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்)

பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து மாலை 3 மணி அளவில் மலேசியத் தமிழர்கள்,திரு.வேதமூர்த்தி அவர்களின் தலைமையில் பிரிட்டனுக்கான இந்திய தூதரகத்தில் ஒன்று கூடி,பிரிட்டனுக்கான இந்திய தூதர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.பிரிட்டனுக்கான இந்திய தூதர் அவர்கள்,மலேசியத் தமிழர்களை இன்முகத்தோடு வரவேற்று,அவர்களின் கோரிக்கைகளை மிக கரிசணையாக கேட்டுக் கொணடார் எனவும் தெரிய வருகிறது.

மலேசியாவின் அம்னோ தலைமையிலான இனவாத அரசினால் நடத்தப்படும் உரிமை மீறல்களையும்,மலேசியத் தமிழர்களுக்கு எதிராக கையாளப்படும் மறைமுக இன அழிப்பையும் தடுத்த நிறுத்த பிரிட்டன் மற்றும் இந்திய அரசாங்கங்களின் தலையீட்டை கோரி இம்மனு அளிக்கப் பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல்,காட்டுச்சட்டமான இசா(ISA)வின் கீழ் விசாரனை இன்றி சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்து உரிமை பணிப்படையின் தலைவர்களை விடுதலை செய்வதற்கு பிரிட்டன் மற்றும் இந்திய அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2007 ,நவம்பர் 25ஆம் தேதி, நடைப்பெற்ற மாபெரும் போரட்டத்திற்கு பின்பு,உலக நாடுகள் மலேசிய தமிழர்களின் போரட்ட நியாயத்தை ஓரளவேனும் புரிந்து கொண்டுள்ளன என தெரியவருகிறது.பிரிட்டன் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுப்பட்ட பின்பு,இன மோதல்கள் முற்றி,இன்று உள்நாட்டு போரில் சிக்கியிருக்கும் இலங்கையைப் போல் மலேசியாவும் ஆகாமல் இருக்க,பிரிட்டன்,இந்திய அரசாங்கங்களின் தலையீடு மிக அவசியமாகிறது.

இலங்கையில் எப்படி உரிமைகள் மறுக்கப்பட்டு,ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் ஆயுதத்தை தூக்கினார்களோ,அதே நிலை மலேசியாவிலும் எற்படலாம்.அகிம்சை போரட்டத்தை உதாசினப்படுத்தி திலிபனைக் கொன்றது கொலைவெறி இலங்கை அரசு;அதன் பின்புதான் சுதந்திர வேட்கை அதிகமாகி விடுதலைப் போர் உக்கிரமானது.அதேப்போல் இன்று நடக்கும் அகிம்சை வழியிலான் எமது உரிமைப் போரை ஒடுக்க நினைத்து மலேசிய அரசு பின் விளைவுகளை மோசமாக்கிக் கொள்ளாது என நம்புவோம்.

உரிமைப்போர் தொடங்கி விட்டது,
அடைவதற்கு உலகளவு உரிமை உள்ளது,
விடுவதற்கு உயிரைத்தவிர வேறொன்றும் இல்லை!!

மக்கள் சக்தி வெல்லும்!!!