இக்கட்டுரையானது,பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி அவர்களால் சில வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தமிழாக்கம் மட்டுமே எமது.
நன்றி : தமிழ்கனேடியன்.காம்
thanks : http://www.tamilcanadian.com/ தமிழீழம் தமிழ் தேசியம்;இதுதான் நீண்டதொரு போராட்டத்தை மேற்கொண்டு வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழீழ போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது.புலிகளின் தலைவர் பிரபாகரன் பலமுறை கூறியுள்ளார்,"ஈழம் உருவாகும் நாளதான்,உலக தமிழினத்தின் வெற்றி நாள்" என்று.புலிகளின் இந்த கருத்தானது உலக அரங்கில் தமிழீழ போராட்டத்துக்கு பலமானதொரு அடித்தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.இந்த கருத்தின் மூலம்தான் உலகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் மத்தியில் தமிழீழத்திற்கான ஆதரவு பெருகியுள்ளது.சிங்கள இனவாதத்தை எதிர்த்து போராடும் புலிகளுக்கு,வெறும் மானசீக ஆதரவு என்பதைவிட, பொருளாதார, அறிவுசார் ஆதரவும் இந்த கூற்றின் மூலமே பெருகியுள்ளது என்பது உண்மையாகும். மலேசிய தமிழர்கள் என்று பார்த்தோமானால், தமிழீழம் உருவாவதை இவர்கள் பெரிதும் ஆதரிக்கிறார்கள்.
மலேசிய தமிழர்கள்,பிரிட்டிசாரால் சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டவர்கள்.மலேசிய மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதம் தமிழர்கள்,அதாவது 17 இலட்சம் பேர்.இவர்களில் மிக சிறுபானமையாக உள்ளோர்,இலங்கையிலிருந்து (சீலோன்) பிரிட்டிசாரால் அலுவலக வேலைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள், இவர்களை சீலோனிஸ் என்றும் யாழ்ப்பாண தமிழர்கள் என்றும் அழைக்கிறார்கள்.இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும்-இலங்கை வம்சாவளியினருக்கும் பொதுவில் ஒரு வேறுபாடு நிலவி வந்தது.பொருளாதார, சமூக பின்னணியில் இந்த வேறுபாடு அமைந்திருந்தது.பெரும்பாலான இலங்கையர்கள், தோட்டப்பாட்டாளிகளான தமிழர்களிடம் பழகுவதில் இருந்து விலகியிருந்தனர்.பாட்டாளி தமிழர்களோ, இலங்கைத்தமிழர்கள் காலனித்துவ பிரிட்டிஷ் முதலாளிகளிடம் வைத்திருந்த விசுவாசத்தை சுட்டிக்காட்டி அவர்களிடம் நெருங்கவதில் இருந்து தவிர்த்து வந்தனர்.
ஈழப்போரால்,தற்பொழுது பெரும்பாலான இலங்கையர்கள்(சீலோனிஸ்) தங்களை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். நெடுங்காலமாக மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும், இலங்கை வம்சாவளி தமிழர்களுக்கும் இடையில் நிலவிவந்த வேறுபாட்டை ஈழப்போர் கலைந்துள்ளது என்றே கூற வேண்டும்.இந்த வேறுபாடானது தற்பொழுதும் நிலவுகின்ற போதிலும்,இன அடையாளத்தின் பேரில் இந்த இரு வேறு வம்சாவளி பின்னணியைக் கொண்ட தமிழர்கள் ஒன்றாகியுள்ளனர்.
ஆரம்பக்காலங்களில்,இலங்கை வம்சாவளி தமிழர்கள் ஈழப்போராட்டத்துக்கு தனியாளாகவோ,குழுக்களாகவோ பொருளாதார ஆதரவை வழங்கி வந்தனர். இந்திய வம்சாவளி தமிழர்களின் ஈழ போரட்டத்துக்கான ஆதரவு, மலேசியாவில் தமிழீழ போராட்டத்துக்கான ஆதரவில் புதியதோர் பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ போரட்டத்துக்கான ஆதரவு தற்பொழுது வெளிப்படையாகவே உள்ளது.உலக தமிழர் புனர்வாழ்வு நிதியமைப்பு போன்ற அமைப்புகளின் உதயமானது, ஈழப்போராட்டத்துக்கு மலேசிய தமிழர்களிடம் உள்ள ஆதரவை வெளிப்படுத்துகிறது.
ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு தற்பொழுது பல வடிவங்களில் மலேசிய தமிழர்களின் மத்தியில் பிரபலமாகியுள்ளது. கருத்தரங்குகள்,நிதி சேகரிப்பு நிகழ்வுகள்,பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் மூலம் ஈழப்போராட்டம் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக பிரபலமாகியுள்ளது. மலேசியாவில் தமிழர்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பெருநாள்,தைப்பூசத்திருநாள் ஆகும்.ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருநாள் கொண்டாடப்படும்பொழுதும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடும் கோலாலம்பூரில் உள்ள பிரபல ஆலயத்தில் ஈழ அகதிகளுக்காக நிதி சேகரிப்புகள்,கையேடு வழங்குதல் போன்ற நிகழ்வுகளுக்கு ஆலய நிர்வாகம் தனியாக ஓர் இடத்தை ஒதுக்கித்தரும்.ஈழப்போரைப்பற்றிய குறுந்தகடுகளும் இவ்வேளையில் விற்கபடும்.
இவ்வாறான நிகழ்வுகளின் மூலம்,ஈழப்போராட்டம் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக முக்கிய இடமொன்றை பிடித்துள்ளது.இனவாத இலங்கை அரசின் பொய்யுரைகளை மலேசிய தமிழர்கள் பெரிதுப்படுத்துவதில்லை. அண்மையக்காலமாக ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு பெருகியுள்ளதே தவிர,குறையவில்லை.
மலேசிய தமிழர்கள் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதற்கு மிக முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.முதல் காரணம், ஈழத்தமிழர்களைப் போலவே மலேசிய தமிழர்களும் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தால் பிழிந்தெடுக்கப் பட்டவர்களே.இவர்களுக்கு,தங்களது ஈழ சகோதரர்கள் படும் இன்னல்கள் புரிகின்றது. தங்களைப்போலவே அநீதி இழைக்கப்பட்டவர்களாக பாட்டாளி மலேசிய தமிழர்கள்,ஈழத்தமிழர்களைப் பார்க்கிறார்கள். இதனால்தான்,நடுத்தர வர்க்கத்தைவிட இவர்கள் தமிழீழ போரட்டத்தை அதிகமாக ஆதரிக்கிறார்கள். மலேசிய தமிழ் இளையோர் மத்தியில்,புலிகளின் தலைமையின் மீது ஓர் அசைக்க முடியாத பற்று உள்ளது.அதிலும்,புலிகளின் தலைவர்,பிரபாகரன் அவர்களை ஓர் நாயகனாக பார்க்கிறார்கள். பிரபாகரனின் படத்தை பெரும்பாலான தமிழர்களின் வீட்டில் சர்வ சாதரணமாக பார்க்கமுடிகிறது.கடந்த காலங்களில்,ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈழ ஆதரவு போரட்டங்களின் போது,பிரபாகரனின் படத்தை இளையோர்கள் ஏந்தியிருந்தது, மலேசிய காவல் துறைக்கு கோபத்தை உண்டுப்பண்ணியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது காரணம்,மலேசிய தமிழர்கள் மத்தியில் நிலவும் அரசியல்,பொருளாதார,சமூக பின்னடவுகள்.இந்நாட்டை வளமாக்க உழைத்து உருகுலைந்து போன தமிழினத்தை மலேசிய அரசாங்கம் ஒரு பொருட்டாக கருதாது.மற்ற இனங்களைப்போல்,தமிழினம் எந்தவொரு துறையிலும் தலைத்தூக்க முடியவில்லை. பெரும்பானமை மலாய் இனத்தை அரசாங்கம்,தனது கொள்கைகளின் மூலம் மிக பாதுக்காப்பாக வைத்துள்ளது.சீனர்களோ,பொருளாதார வளத்தைக்கொண்டுள்ளனர். தமிழர்களோ,உழைத்து ஓடானதுதான் மிச்சம் என்ற நிலை நிலவுகிறது. பொருளாதரத்தில்தான் பின்னடைவு என்றால்,வேலை வாய்ப்புகளிலும் அப்படிதான்.அரசு துறைகளிலோ,தனியார் துறைகளிலோ தமிழர்களை மிக குறைவாகவே வேலைக்கு எடுக்கின்றனர்.
மலாய் இனத்துக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கும் கொள்கைகளை கொண்டுள்ளதுதான் மலேசிய அரசின் கொள்கைகள்.இந்த கொள்கைகளின் மூலம் அனைத்து துறைகளில் உள்ள தமிழர்களுக்கும் பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.கலாச்சாரத்திலும் அரசின் தலையீடு தலைத்தூக்கியுள்ளது.வழிபாட்டுத்தளங்களைக் கூட இழக்க வேண்டிய நிலையில் உள்ளது மலேசிய தமிழினம்.சமுதாய தலைவர்கள் என்று தங்களை பாறைசாற்றிக்கொண்டவர்களோ,தங்கள் சமுதாயத்திற்காக எந்தவொரு அநியாயத்தையும் தட்டிக் கேட்காமல அரசாங்கத்தின் அடிவருடிகளாகவே உள்ளனர்.பெரும்பானமை மலாய் இனத்தோரிடம் அனுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு தங்களது சுயநலத்தை மட்டுமே பேணி வந்துள்ளனர்;சமுதாய நலனை மறந்தே விட்டிருந்தனர் இந்த சமுதாயத்துரோகிகள்.இது போன்றதொரு சூழ்நிலையில்,உரிமைக்காக போராடும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பெரும்பாலான இளைய தமிழர்கள் தங்களுடைய மானசீக இயக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மூன்றாவது காரணம்,புலிகளின் தன்னலமற்ற போரட்டத்தின் மீது தமிழர்களுக்கு உள்ள ஈர்ப்பு.புலிகள் இயக்கத்தின் போராட்டம்,புலி உறுப்பினர்களின் கட்டுக்கோப்பு,அவர்களின் வெற்றிகள் மலேசிய தமிழர்களின் மத்தியில் புலிகள் இயக்கம் பிரபலமாக மிக முக்கிய காரணங்கள்.மலேசியத் தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறார்கள்,இதற்கு காரணம்,உலக அரங்கில்,தமிழர்கள் என்றாலே புலிகள் என்ற கருத்து நிலவுவதால்.
புலிகளின் தலைமைத்துவத்தின் மீது ஓர் அபரீதமான பற்றைக் கொண்டுள்ளனர் மலேசிய தமிழர்கள்.இதற்கு முக்கிய காரணம்,மலேசியாவில் நெடுங்காலமாக கோலேச்சி வரும் தமிழ் தலைவர்களின் சுயநல தன்மையும், முற்போக்கில்லா சிந்தனையும்தான்.மலேசிய தமிழர்களின் தலைவர்கள்,என்று தங்களை பாறைசாற்றிக்கொள்ளும் தலைவர்கள்,தங்களின் சுயநலத்தை முன்படுத்தி சிறுபான்மை தமிழர்களின் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்.ஆளும் பெரும்பான்மை மலாய் கட்சியோடு சேர்ந்து கொண்டு,சொந்த இனத்திற்கு சொந்தமான அனைத்தையும் தங்களின் பதவி சுகத்திற்காக விற்றே விட்டிருந்தனர்.ஒரு கசப்பான உண்மை என்னவென்றால்,காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டதிலிருந்து மலேசிய தமிழ் சமூகம் அடைந்ததை விட இழந்ததுதான் அதிகம்.மலேசிய தமிழர்களின் பொதுநலனை காக்க குறிப்பிட்டு சொல்லும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, எந்தவொரு இயக்கங்களோ செயல்படவில்லை.தங்களது சுயநலனுக்காக மொத்த இனத்தையும் கூறு போட்டனரே தவிர,உரிமைகளை மீட்டெடுக்க,அநீதியை எதிர்க்க யாருக்கும் விருப்பம் இல்லை.சொந்த இனத்தின் உரிமைகளை விட்டுகொடுத்து விட்டு மலேசியாவின் ஆளும் கட்சியின் இனவாத அரசியலுக்கு ஆதரவளித்தார்களே அன்றி,மலேசிய தமிழ் சமுதாயத்தின் அரசியல்,பொருளாதார,சமூக மேம்பாட்டைப் பற்றி யாரும் கேட்கவும் இல்லை,அதற்காக கவலைப்படவும் இல்லை.
மலேசியாவில் வாழும் தமிழர்களில் ஏறக்குறைய 75 சதவீதம் பேர்,குறைந்த அல்லது நடுத்தர வருமானத்தை பெருபவர்கள்.இவர்களில் பெரும்பாலோர், தோட்டப்புறங்களிலும் புறநகர் பகுதியிலும் வாழ்கிறார்கள்.மலேசிய தமிழர்களின் சொத்துடமை,வெறும் 1.5 சதவீதம் மட்டுமே;இதிலும் பெரும் பகுதி பாட்டாளி தமிழ் வர்க்கத்தைப் பற்றியோ,அவர்களின் போரட்டத்தைப் பற்றியோ கவலைப்படாத பணக்கார தமிழர்களையே சேரும்.
மொத்தத்தில்,ஏறக்குறைய 100 ஆண்டுகளாக தமிழர்கள் சுரண்டப்பட்டனர், ஏமாற்றப்பட்டனர்.இனிவரும் காலங்களில் இந்த சுரண்டல்களும் ஏமாற்று நாடகங்களும் தொடருமானால்,மலேசிய தமிழர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை வேறுவிதமாக அமையக்கூடும்.ஒரு முன்னாள் அரசியல்வாதி கூறியதைப் போல்,
"தமிழர்கள் நாங்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல",என்ற கூற்றுக்கேற்ப எதுவும் சாத்தியம்.அண்மையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ் கலாச்சார நிகழ்வின் போது ஒரு மாணவரின் உரையும் இதைத்தான் பிரதிபலிக்கிறது. அம்மாணவர் கூறினார்,
"இனியும் எங்களின் கல்வி,கலாச்சார சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்கம் கண்மூடித்தனமாக நடந்துக்கொள்ளுமானால்,எங்களுக்கு வேறு வழியில்லை, எங்களுக்கென்று தனிக்கொடி பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை."