25.5.09

மரணத்தை வென்ற மாவீரன்......பிரபாகரன்


இன்று முற்பகல், புலிகளின் அனைத்துலக பிரிவுகளுக்கான செயலாளர் கா.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியானதை, நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

உலக தமிழர்களுக்கெல்லாம், ஒரே தலைவனாக இருந்த பிரபாகரன், அவரது கடைசி நிமிடங்களில் கூட தனது தாய் மண்ணான ஈழத்தையும், மக்களையும் தனியே விட்டு செல்ல மாட்டேன் என்று மறுத்து விட்டதாக பத்மநாபனின் அறிக்கை கூறுகிறது. தனது கடைசி மூச்சு வரை தனது மக்களுக்காகவே வழ்ந்த மாமனிதன் பிரபாகரன் மட்டுமே.

நேற்றுதான், பட்டவொர்த் நகரில், பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக்கிடக்கும் மர்ம முடிச்சுகள் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடத்தினோம். நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு சில மணித்துளிகள் இருக்கும்பொழுது, பத்மநாபன் அவர்களின் மூலமாக தலைவரின் மரண செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. நெஞ்சம் வெடித்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வு. எந்த தலைவனின் மரண செய்தி பொய்யென்று நாம் அறிவிக்கப்போகின்றோமோ,அந்த செய்தி உண்மையென்று உறுதிப்படுத்தப்படும்பொழுது எப்படியிருக்கும்?!

நிகழ்வில் முன்னதாக பேசிய இரண்டு பேச்சாளர்களும், பிரபாகரன் மரண செய்தியில் தெரியும் முரண்பாடுகளை விவரமாக விவாதித்தனர். அடுத்து பேச வந்த பேராசிரியர் இராமசாமி அவர்களோ, பிரபாகரனின் அண்மைய தகவல்கள் எதையும் நேரடியாக கூறாமல், விடுதலைப்புலிகளின் அறிவிப்பிற்கு காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். தலைவரின் மரண செய்தியானது, பேராசிரியர் அவர்களை பெரிதும் பாதித்திருந்தது என்பதை அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே அறிவர். கண்கள் கலங்கிய பேராசிரியரை பார்ப்பது அதுவே முதல் முறை என்று பலர் என்னிடம் கூறினர்.

தோழி பவனேஸ்வரியின் எழுச்சிமிகு கவிதை, பிரபாகரன் என்ற மாவீரன் கண்ட பெண்ணியம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தியது. தமிழ் பெண்களென்றாலே, சினிமா மாயையிலும், தொலைகாட்சி தொடர்களிலும் மூழ்கிக்கிடப்பவர்கள் என்ற கூற்றையெல்லாம், அறவே பொய்ப்பித்தது தோழி பவனேஸ்வரியின் தைரியம். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நிறைய பெண்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபாகரனின் கனவான, கௌரவமான தமிழின உணர்ச்சி இன்னும் மறையவில்லை என்ற ஆறுதல் எனக்குள் ஏற்பட்டது.

எனக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது, எனது நெஞ்சம் எவ்வாறு விம்மிக்கொண்டிருந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழினத்தின் கேவலமான சாபக்கேடு, கொலைஞன் கருணாநிதியை கண்டித்தேன். கலைஞர் கருணாநிதியை நான் "கொலைஞர்" என்று கூறியதில் சிலருக்கு வருத்தம். யார் என்ன சொன்ன போதிலும், என்னுடைய கருத்தில் நான் உறுதியாகவே உள்ளேன். கருணாநிதி என்ற கொலைஞன், தமிழினத்தின் துரோகி; எட்டப்பனின் வாரிசு!!!

எனது எண்ணக்குமுறல்களில் நான் கூறியவற்றில் மிக முக்கியமான கருத்து.
பிரபாகரன் மரணத்தை வென்ற மாவீரன் என்பதுதான்.

இந்த பூமிப்பந்தில் கடைசித்தமிழன் உள்ள வரை, ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் பிரபாகரன் வாழ்ந்துக்கொண்டிருப்பாரே அன்றி, ஒரு பொழுதும் அவருக்கு மறைவு கிடையாது. மரணத்தையெல்லாம் வென்று, மக்கள் மனதில் என்றும் வாழும் காவல் தெய்வமாக பிரபாகரன் இருப்பார் என்பதே உண்மை.

ஆகவே, பிரபாகரன் மறைவு, வீரமரணம் என்ற செய்தியெல்லாம் கண்டு தமிழர்கள் கலங்கக்கூடாது. பிரபாகரன் என்ற மாவீரன் கண்ட கனவை எப்படி நனவாக்குவது என்பதே நமது ஒட்டு மொத்த குறிக்கோளாக இருக்க வேண்டும். மீண்டும் தலையெடுக்கப்போகும் ஐந்தாம் கட்ட ஈழப்போரில், நம்மால் ஆன உதவிகளையெல்லாம் செய்து, தமிழர் படையை வெற்றிக்கொள்ள செய்ய வேண்டும்.

தமிழர்தமை காக்க வந்த தமிழ்புலியே,
தமிழர் நெஞ்சமெல்லாம் நீ தந்த உரமிருக்கும்!!

கண்ட தேசம் கனவாகிப் போவதில்லை,
மலர்ந்துவிடும் வெகு விரைவில் தமிழீழம்!!

தமிழர் மனமெல்லாம் நிறைந்திருக்கும் தலைமகனே,
ஓர்பொழுதும் மரணம் என்பது உமக்கில்லை!!

பூமிதனில் கடைசி தமிழன் உள்ளவரை,- அவர்தம்
நெஞ்சில் நீ வாழ்வாய் எப்பொழுதுமிறவாமல்!!

வாழ்க தமிழினம்!! வாழ்க பிரபாகரன்!!
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்!!

1 comment:

malaysia tamilan said...

Mr prabakaran is great man..is legand..is great ledear of all tamil people in this world.. We still belive he`s live.. valka thalaiva..ongukuka un namam..you allway`s with us..god allway`s with you..