27.11.08

தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்......


உலக தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் மிகவும் கவலையாக உற்று நோக்கப்படும் விடயம் எதுவெனில், ஸ்ரீ லங்கா படைகள் கிளிநோச்சியை வசப்படுத்தி விடுமா என்பதுதான்.தமிழன் என்றாலே அடிதான் வாங்குவான் என்று உலகமே நினைத்து நம்மை ஏளனப்படுத்திய போது, தமிழனுக்கு அடிக்கவும் தெரியும் என்று காட்டியது ஈழத்தமிழன்தான்.தங்கள் மீது திணிக்கப்பட்ட இனவெறி போக்கை, கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்காரவாதத்தை அகிம்சை முறையில் எதிர்த்து துவண்டு போன தமிழன்தான் ஈழத்தமிழன்.

துவண்டு போனவன் விழுந்து போய் விடவில்லை; எழுந்து நின்றான்!!

மாவீரர்கள்........

சிங்கள பேரினவாதத்தை ஆயுதமேந்தி எதிர்க்க துணிந்து, தமது இன்னுயிர்களை சுதந்திர வேட்கைக்காக துறந்த எமது மாவிரர்களை இவ்வேளையில் நினைத்து பார்க்கிறேன். காதல் தோல்வியில் உயிரை வெறுத்து, உயிர்விடும் ஜென்மங்களுக்கு மத்தியில், தாயக மண்ணின் சுதந்திரத்திற்காக,தனது நாளைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்று வேட்கையோடு உயிரை தியாகம் செய்யும் இவர்கள் மாவீரர்கள் மட்டுமல்ல,மாமனிதர்களும் கூட. ஈழத்தின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை நீத்த ஒவ்வொரு தமிழ் மறவனும் அந்த புண்ணிய பூமியில் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்!! அந்த விதையிலிருந்த தோன்றப்போகும் விருட்சங்கள்,சிங்கள் பேரினவாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!

பெண் புலிகள்......

எமது பண்டைய மறத்தமிழச்சிகள் சீறி வரும் புலியைக் கூட முறத்தால் விரட்டியடித்தனர் என்று தமிழர்கள் எப்பொழுதும் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. பண்டைய தமிழச்சிகளை நாம் பார்த்தது கிடையாது, ஆனால் கண்டிப்பாக அவ்வாறுதான் எமது பண்டைய தமிழ் பெண்கள் இருந்திருப்பார்கள் என்பதை இன்றைய தமிழ் மறவத்திகளைப் பார்க்கும் போது திண்ணமாகிறது. இன்றைய தமிழ் பெண்கள் புலியை முறத்தால் விரட்டவில்லை; தாங்களே புலியாகி,எதிரியை கொன்றொழிக்கின்றனர்.

எமது ஈழத்தமிழ் பெண்ணினம்,சிங்கள அரசின் பேரினவாத பிடியில் சிக்கி, தங்கள் உயிரை விட மேன்மையானதாக போற்றிக் காக்கும் கற்பைக் காப்பாற்ற கையில் எடுத்தது முறத்தையல்ல,நெருப்பைக் கக்கும் AK 47-ஐ.

நமது பண்பாட்டை ஆட்டம் 100 வகை, 200 வகை என்று சீரழிக்கும் பெண்களுக்கு மத்தியில்,சனிக்கிழமை வந்தால்,போதையிலும் கும்மாளத்திலும் கூடிக்கழிக்கும் பெண்களுக்கு மத்தியில், பண்பாட்டை காக்கும் தமிழச்சிகளையும், தாய்மண்ணின் சுதந்திரம் காக்க கையில் ஆயுதம் எந்திய புலிப்பெண்களையும் பார்க்கையில் எமது தமிழினத்தின் பண்பாடும்,மரபும் அவ்வளவு சீக்கிரத்தில் மறைந்து விடாது என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

தமிழினத்தலைவன்........

உலகத்தில் உள்ள தமிழருக்கெல்லாம், யார்தான் தலைவர் ??இராசேந்திர சோழனுக்குப் பிறகு அந்த தனித்தன்மை மிகுந்த தமிழன் ஒருவன் இருக்கிறானென்றால், அது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
ஒரு சாரார்,கலைஞரை உலகத் தமிழரின் தலைவர் என்று கூறினாலும், அதில் எமக்கு உடன்பாடில்லை. பக்கம் இருக்கும் தேசத்தில் தமிழரை இன அழிப்பிலிருந்து காப்பற்ற முடியாமல்,அரசியல் காரணங்களுக்காக சூழ்நிலை கைதியாகிக் கிடக்கும் கலைஞரை நினைத்து உலகத்தின் எந்த மூலையில் உள்ள தமிழனும் பொறுமுவானே தவிர, பெருமைக் கொள்ள மாட்டான்.

தமிழர் என்றால் அடிமைகள் என்றும் ஏமாளிகள் என்றும் வெள்ளையன் குறித்து விட்டு சென்றுள்ள கூற்றை,உலகில் வாழும் தமிழர்களெல்லாம் நிருபித்து,சாசனம் எழுதிக்கொடுக்காமல் பல விஷயங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் அடிமை விலங்கை உடைத்து, தன்மானத்தை காக்க, வந்த தமிழர் தலைவன் பிரபாகரன் மட்டுமே. தமிழன் எங்கு போனாலும் அடிதான் வாங்கினான், திரும்பக்கொடுத்தது தமிழீழத்தில் மட்டும்தான்.

இராசேந்திரன் காலத்தில்,முப்படைகளை திரட்டி கம்போஜம் வரை வெற்றிக் கொண்டான் என பெருமை மட்டும்தான் நமக்கு மிஞ்சும் என்றிருந்த வேளையில், தரைப்படை,கடற்படை,வான்பாடை என்று நவீன வளர்ச்சியின் தேவைக்கேற்ப முப்படைகள் கண்டு தமிழரின் பெருமையை நிலைநிறுத்தியது பிரபாகரன்தான். அந்த இராசேந்திரன் கொண்டு சென்றது புலிக்கொடிதான் ; இன்றைய தமிழீழ இராச்சியத்தின் சின்னமும் புலிக்கொடிதான்.

வேட்கை விடுவதில்லை.........

பூநகரியை பிடித்து விட்டோம், கிளிநோச்சியை நெருங்கி விட்டோம், புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் சிங்கள் படைகளின் ஆணவத்திற்கு என்றுமே தாம் அடிபணிய போவதில்லை என்பதை 2008 மாவீரர் உரையில் தலைவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். வலிந்து திணிக்கப்பட்ட போரை, துணிந்து எதிர்த்து, வெல்வதற்கு தயாராக உள்ளனர் தமிழ் புலிகள். மிகச்சிறந்த போர் வல்லுனரான பிரபாகரனின் ராணுவ நகர்வுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சிங்கள் இராணுவம் தவிக்கப்போகும் காலம்,மிக அண்மையில் என்று நமது உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளதை நானும் பிரதிபலிக்கிறேன்.

சுதந்திர ஈழம் மலரும்..........

தமிழீழ சுதந்திரத்தை முன்னிறுத்தி நடைபெறும் உரிமைப்போரில்,தமிழர் கரம் வலுப்பெறப்போகும் நாள் வெகு தூரமில்லை.

அந்நாளை எதிர்கொள்ள உலகத் தமிழர் அனைவரும் கட்சி,மத,சாதி வேறுபாடுகளை மறந்து, சுதந்திர தமிழீழத்தை உலக நாடுகள் அங்கிகரிக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் எழுப்பிடல் வேண்டும்.

கண்டனக்கூட்டத்திற்கு கூப்பிட்டால் மறுத்தளித்து விட்டு,ஈழத்தமிழர் ஆதரவு பேரணி என்ற பெயரில் கட்சி கோசங்கள் போன்ற கேவலமான அரசியலெல்லாம் இந்த மிக முக்கியமான காலக்கட்டத்தில் வேண்டாமென்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.

தந்தை செல்வாவின் ஜனநாயக போரட்டத்தில் தொடங்கி, தியாகி திலிபனின் மறைவில் கொழுந்து விட்டெறிந்து, மாவிரர்களின் ஈகத்தால் தொடர்ந்தும் அணையாமல் எறிந்து கொண்டிருக்கும் சுதந்திர தீ, சிங்கள பேரினவாதத்தை எரித்து விடும் நாள் தூரம் இல்லை.

உலக தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்.........

27.10.08

எதற்கய்யா தீபாவாளி கொண்டாடனும்??மானமுள்ள தமிழர்களிடத்தில் ஒரு கேள்வி.

ம்
எதற்காக தீபாவளியை நாம் கொண்டாட வேண்டும்??

ஈழத்தில் எமது மக்கள் சொல்லிலடங்கா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது தீபாவாளி என்ற பெயரில் ஓர் அனாவாசிய ஆர்ப்பாட்டங்கள் நமக்கு தேவைதானா??
ஒரு வேளை உணவு கூட இன்றி பசியிலே நமது குழந்தைகள் அங்கே வாடிக்கொண்டிருக்கும் போது,நாம் மட்டும் இங்கே கோழி,ஆடு என்று விழுங்குவதற்காகத்தான் இந்த தீபாவாளி ஒரு சாக்கா??
மழைக்குக்கூட ஒதுங்க இடமில்லாமல், மர நிழலிலும்,சாலை ஓரங்களிலும் பொழுதுகளை கழித்து,பாம்பு கடிக்கு ஆளாகி எமது தமிழன் அங்கே செத்துக் கொண்டிருக்கும் போது,நமது வீடுகளை சுற்றியும் வண்ண விளக்குகள் பொருத்தி ஒரு கொண்டாட்டம் தேவைதானா??

அங்கே எமது குழந்தைகள் விமான குண்டு வீச்சுக்கு அஞ்சி, பள்ளிக்கு செல்லாமல் பதுங்குக்குழிகளில் ஒழிந்துக் கொண்டிருக்கும் பொழுது,நாம் இங்கே வானவெடிகளையும் மத்தாப்புகளையும் சுழற்றி விளையாடுவது நியாயமா??

நமது தமிழர் மரபுப்படி,குடும்பத்தில் மரணம் சம்பவித்து விட்டால்,அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தவொரு பெருநாள்களையும் கொண்டாடாமல் துக்கம் அனுசரிப்பது முறை. ஈழத்தில் நமது சகோதரனும்,சகோதரியும், நமது தாய்மார்களும், நமது குழந்தைகளும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் செத்துகொண்டிருக்கும் பொழுது இங்கே எந்தவொரு சலனமுமில்லாமல் தீபாவாளி என்ற பெயரில் கண்டதையும் தின்று, கண்டபடி உடை அணிந்து, மது மயக்கத்தில் திளைத்திருக்கும் நாம் தமிழர் மரபுவழி வந்தவர்களா??

நாம் தீபாவளியை எப்படி கொண்டாடினாலும் சரி, ஈழத்தில் அழிந்துக்கொண்டிருக்கும் எமது தமிழர்களை இந்த வேளையில் சற்று நினைத்துப் பார்ப்போம்!!

23.10.08

ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.

கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.

இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க

தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!

நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவொர்த்.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்

இக்கண்,

சத்தீஸ் முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்

18.10.08

ஈழத்தமிழருக்காக ஒன்றிணைந்த தமிழ் நெஞங்களே....,நன்றி...நன்றி...நன்றி

கடந்த 17ஆம் தேதி,பிறை ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலய முன்புறம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான கண்டன கூட்டம்,தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது என்பது கவலைக்குரிய விடயம் என்றாலும்,அந்நிகழ்வின் விவரங்களை தத்தம் வலைப்பதிவுகளிலும்,அகப்பக்கங்களிலும் வெளியிட்டு மகத்தான ஆதரவை நல்கிய தமிழ் நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்.

எமது நிகழ்வின் விவரங்களை விளம்பரப்படுத்தியிருந்த ஒவ்வொரு தமிழருக்கும் இவ்வேளையில் நன்றி.

மலேசிய வலைப்பதிவாளர்கள்,அகப்பக்கங்கள் மட்டுமின்றி,சில அனைத்துலக தமிழ் அகப்பக்கங்களும் நமது நிகழ்வின் விவரங்களை வெளியிட்டிருந்ததைக் கண்டு நாம் பெரிதும் மனம் மகிழ்ந்தோம்.

பாவேந்தரின், "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு" என்ற வரிகள்தாம் எம் நினைவுக்கு வந்தன.கடல் நம்மை பிரித்தாலும்,உணர்வு நம்மிடையே வலுவாய் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

வலைப்பதிவுகள்,அகப்பக்கங்கள் மட்டுமின்றி,கனேடிய தமிழ் வானொலி ஒன்றும் எமது நிகழ்வைப் பற்றி தமது செய்தியறிக்கையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் உள்ள தமிழ் தலைவர் ஒருவரை தொடர்பு கொண்டு நிகழ்வைப் பற்றி வினவியதாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட அரசியல் தலைவரும்,நமது நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட தடையை விவரித்ததோடு மட்டுமல்லாமல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நிகழ்வைப் பற்றியும் கூறியுள்ளார்.

இன்று (18-10-2008) ஒன்றுகூடிய ஜசெக ஜாலான் பாரு,பிறை கிளையின் செயற்குழு ஈழத்தமிழர் ஆதரவு நிகழ்வை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதிகாரப்பூர்வ அறிவிப்பு,நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். பினாங்கில் உள்ள தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளும் இந்நிகழ்வுக்கு தங்கள் ஆதரவை வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் ஈழத்தமிழருக்காக ஒரே குரலில் ஒலித்த அனைத்து தமிழுள்ளங்களுக்கும் நன்றி.


*17ஆம் தேதி நிகழ்வை வெளியிட்ட வலைப்பதிவுகள்/அகப்பக்கங்கள் :

http://olaichuvadi.blogspot.com/2008/10/blog-post_16.html

http://olaichuvadi.blogspot.com/2008/10/blog-post_9323.html

http://www.malaysiaindru.com/?p=5693

http://www.puthinam.com/full.php?2e4ZTH6cb3bfbCR34d2WXvD2a02K6JBe4d47Qp8c00agtTRBde2dC0cn2cc0AfYU3e

http://www.paristamil.com/tamilnews/?p=16025

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=5820&Itemid=9

http://www.seithy.com/briefEventDetail.php?event_id=75&language=tamil

http://nanavuhal.wordpress.com/2008/10/11/indian-malaysian-politics/

http://tamiluyir.blogspot.com/2008/10/blog-post_16.html

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/f2bf628df266dc71/b3fe9e1554f87b11?show_docid=b3fe9e1554f87b11

(எவருடைய வலைப்பதிவோ/அகப்பக்கமோ விடுப்பட்டிருந்தால் தயைக்கூர்ந்து மன்னிக்கவும்.)

16.10.08

மிக முக்கிய அறிவிப்பு.....ஈழ தமிழர் ஆதரவு போராட்டம் - தள்ளிவைப்பு

அன்புடைய தமிழ் நெஞ்சங்களே,

இடம் : பிறை,சாலான் பாரு முனீசுவரன் ஆலயம் முன்புறம்
திகதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவ்வலைப்பதிவில் (மேலே காணப்படுவதைப்போல்) அறிவிக்கப்பட்டிருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டம்,தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று முதல் இந்த்ராஃப் எனப்படும் இந்து உரிமை பணிப்படையை அரசு தடை செய்துள்ளதை நாம் அறிவோம்.ஈழத்தமிழருக்கான ஆதரவு போரட்டத்தை இந்த்ராஃப் ஆதரவு போராட்டம் என்று ஆதரவு கூட்டத்தை சீர்குலைக்க ஒர் சில தரப்பினர் முயற்சிப்பதாக எமக்கு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்களை அடுத்தே,இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது.

மீண்டும் துரோகம்!!
தமிழனுக்கு எப்பொழுதுமே தமிழன்தான் துரோகம் புரிவான் என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.ஈழ தமிழரின் நலம் காக்க அப்பேற்பட்ட அரசியல் எதிரிகளான தமிழக அரசியல் கட்சிகளே ஒன்றிணைந்து விட்ட போதிலும்,இது வரையிலும் தங்களை மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று பிதற்றிக்கொண்டவர்கள் ஈழ தமிழருக்காதரவான போரட்டத்தைப் பற்றி காவல் துறைக்கு தவறான தகவல்களை தந்து,அவ்வற போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.(சில தமிழின துரோகிகள் தந்த தவறான தகவல்களால்,காவல்துறை என்னை 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியது,விசாரணையின் இறுதியில் ஈழ தமிழர் ஆதரவு போரட்டத்தை வேறோரு நாளுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்வை தள்ளி வைப்பதற்கு பயம் காரணமல்ல;கவனம்தான் காரணம்,தேவையில்லாத அசம்பாவிதங்களை தவிர்க்கவே நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது)

தடைகள் தற்காலிகமே;
ஈழத்தமிழருக்கு ஆதரவான கவனயீர்ப்பு கூட்டத்தை எப்படியேனும் நடத்தி விட வேண்டும் என்ற வேட்கை முன்பை விட இப்போதுதான் அதிகமாகியுள்ளது.எதிர்வரும் 24ஆம் தேதி,அதாவது இன்றிலிருந்து ஒரே வாரத்தில்,ஈழத்தமிழருக்கான ஆதரவு கூட்டம் பினாங்கு மாநிலத்தில் மையமிட்டுள்ள பல்வேறு தமிழ் சார்புடைய இயக்கங்களின் ஆதரவோடு மிகப்பெரிய அளவில்,பட்டவொர்த் நகரில் நடத்தப்படுமென்பதை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.நிகழ்வின் முழு விவரங்களும்,எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

எமது அறிக்கைக்கு மதிப்பளித்து தத்தம் வலைப்பதிவுகளில் வெளியிட்டிருந்த தமிழ் நெஞ்சங்களுக்கும்,மலேசியா இன்று இணயத்தளத்திற்கும் எமது தாழ்மையான நன்றிகள். அதேவேளையில்,இந்த தள்ளிவைப்பு அறிக்கையையும் தயைக்கூர்ந்து தாங்கள் வெளியிடுவீர்கள் என்று பெரிதும் நம்புகிறோம்.

எதிர்பாராவிதமாக நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதற்கு பெரிதும் வருந்துகிறோம்.துரோகங்களின் விளைவுதான் இந்த தள்ளி வைப்பு என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

அன்புடன்,

சத்தீஸ் முணியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி,
ஜாலான் பாரு,பிறை கிளை.