26.8.09

அழிக்கப்படும் சரித்திர சுவடுகள் - ஆய்வுக்கட்டுரை!

சரித்திரத்தை மறைக்கத் (மறக்க) துடிக்கும் கூட்டம். அண்மைய காலமாக மலேசியாவில், வெகு அதிகமாக விவாதிக்கப்படும் விடயம் ஒன்று உண்டு என்றால் அது கம்போங் புவா பாலா விவகாரமாகத்தான் இருக்கும். கம்போங் புவா பாலா, எதோ ஒரு சரித்திர சுவடு என்பது போன்ற வாதங்களை முன்னிறுத்தி தங்களது காரியத்தை சாதித்துக் கொள்ள துடிக்கின்றனர் சிலர். அந்த சிலருக்கு தங்களது ஆதரவை வழங்குவது போல நடித்து தங்களது அரசியல் காய்களை நகர்த்துகின்றனர் சிலர். கம்போங் புவா பாலா உண்மையில் ஒரு சரித்திர சுவடா? பாரம்பரிய குடியிருப்பா?என்பதுதான் இப்போது பெரும்பான்மையோரின் கேள்வியாக இருக்கின்றது. கம்போங் புவா பாலாவிற்கு உண்மையில் சென்று வந்தவர்களுக்கே அது தெரியும். பாரம்பரியம், சரித்தியாம் எனப்படும் இடத்தில், பாரம்பரியத்தின் அடிப்படையான வழிப்பாட்டுத்தளம் (ஆலயம்) ஒன்று கூட இல்லையே? (இப்பொழுது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த சிறு கோவில்தான், பாரம்பரிய சுவடு என்று சொல்லாதிர்கள்!) எண்பது வருடம் மரம் இருக்கிறதாம்; அதுதான் பாரம்பரியமாம், சரித்திரமாம்! கம்போங் புவா பாலா குடியிருப்பில் சரித்திரம், பாரம்பரியம் என்ற பேச்சுகள் எல்லாம், தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்ள குறிப்பிட்ட தரப்பினர் எடுத்துக்கொண்ட ஆயுதம் என்பதுதான் உண்மை. கம்போங் புவா பாலா பிரச்சனையில் முன்னிறுத்தப்படுவது "புனையப்பட்ட சரித்திரம்". இதுபோன்ற புனையப்பட்ட சரித்திரத்தை தற்காக்க நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தையை, உண்மை சரித்திர சுவடுகள் அழிக்கப்படும்போதும், மறைக்கப்படும்போதும், மறக்கப்படும்போதும் நாம் வெளிப்படுத்தினால் உண்மை சரித்திரமாவது தர்க்காக்கப்படும் என்பது உண்மை.

மலாயாவின் சுதந்திரத்தில் நம் தமிழ் பிரதிநிதிகளின் பங்கு; மலேசியாவின் உருவாக்க சரித்திரத்தில் நம்மவர்களின் (இது மஇகா "நம்மவர்" களை குறிக்கவில்லைங்க!) பங்கு, மலாயாவை செல்வம் கொழிக்க செய்த நம்மினத்தானின் உழைப்பு போன்ற பல விடயங்கள், சரித்திர பாடத்திலிருந்தும், பாடப்புத்தகங்களிலிருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்படுவதும், பின்னொரு நாளில், இந்த நாட்டின் சுதந்திரத்திலும், வளர்ச்சியிலும் நம் இனத்திற்கு அறவே பங்கில்லை எண்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க ஆளும் தரப்பு முனைப்பாக செயல்படுகின்றது. ஆளும் கூட்டணியில் அதிகாரப்பதுமைகளாக அமர்ந்துக்கொண்டுள்ள நமது "இனத்தின் பிரதிநிதிகளோ", தங்களின் நாற்காலி சுகத்தை பேணிக்காப்பதில் குறியாக இருப்பதால், இதையெல்லாம் அவர்கள் கண்டுக் கொள்ளப்போவதில்லை. இந்த சரித்திர "அழிப்பு/பதுக்கல்", சுதந்திர மலேசிய உருவாகத்தைத்தாண்டி, வெள்ளையர் ஆளுமைக்குட்பட்ட மலாயா சரித்திரத்தைத்தாண்டி, மலாக்கா மலாய் இராச்சியத்தின் சரித்திரத்தையும் மிஞ்சிய சரித்திரத்தை அளிக்க, மறைக்க, மறுக்க இந்த ஆளும் வர்க்கம் முனைந்து விட்டது என்பது, இந்த ஆய்வுக் கட்டுரையின் முன்னோட்டமாக இருக்கட்டும்.

இந்த சரித்திர பதுக்கல்/அழிப்பு இன எல்லை வரையறைகளைத் தாண்டி செல்கின்றதுதான் இன்னும் கொடுமையான விவரம். ஆளும் வர்க்கமானது ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைக்காமல், இலாபத்தை மட்டுமே முன்னிறுத்தி, இந்த மலையக மண்ணில் நிறைந்துக்கிடைக்கும் சரித்திரசுவடுகளை அளிப்பதிலும், பதுக்குவதிலும் குறியாக இருக்கின்றது என்பதுதான் வேதனையான விடயம். இதன் முதல் எடுத்துக்காட்டாக, பினாங்கு தீவிற்கு அருகில் இருக்கும் மற்றொரு குட்டித்தீவான ஜெரஜாக் தீவின் (Pulau Jerejak) சரித்திரத்தைப்பார்ப்போம்.
- தொடரும்-

8.7.09

புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் பத்திரிகை செய்தி.

கம்போங் புவா பாலா பிரச்சனையை இந்தியர் பிரச்சனையென்று எடுத்துக்கொள்ள முடியாது. இப்பிரச்சனையானது, நீதி, பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரச்சனையாகும்.

ஆகவே, இப்பிரச்சனையில் திடீரென்று குரல் எழுப்பும் இந்த்ராப் தலைவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த இந்த்ராப் தலைவர்கள் உண்மையிலேயே எதற்காக இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர் என்று கேள்வியும் எழுகிறது.

பினாங்கு மாநிலத்தை கடுமையாக விமர்சித்து வரும் சில இந்த்ராப் தலைவர்கள் உண்மையான நோக்கம்தான் என்ன? இந்த கம்போங் புவா பாலா இருக்கும் இடத்திலேயே இந்தியர்களின் பாரம்பரிய கிராமமாக இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கையா? அல்லது முந்தைய தேசிய முன்னணி அரசு செய்த தவறால் விலைபேசபட்டுள்ள இந்த கிராம மக்களுக்கு சரியான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமா?

இந்த்ராப் இந்த கம்போங் புவ பாலா கிராமம் இந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்று குரல் எழுப்புமானால், இந்த நில மேம்பட்டு நிறுவனம் எதுவுமே செய்யாமல் கோடிக்கணக்கில் இலாபம் அடைய வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்களா என்பதுதான் இங்கெ எழும் கேள்வியாக உள்ளது.

இந்த்ராப் சட்ட ஆலோசகர் உதயக்குமார் சொல்வதைப் போல் 'ஒரு கையெழுத்தில்' இந்த கம்போங் புவா பாலா நிலத்தை கையகப்படுத்தினால் பினாங்கு மாநில அரசானது ஏறக்குறைய சுமார் 150 மில்லியன் ரிங்கிட்டை நட்ட ஈடாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இந்த 150 மில்லியன் ரிங்கிட்டானது 1.5 மில்லியன் பினாங்கு மாநில மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சில இந்த்ராப் தலைவர்கள் உணர வேண்டும். கம்போங் புவா பாலா நிலத்தில் எந்தவொரு மேம்பாட்டையும் செய்யாமலே பெரும் இலாபத்தை நில மேம்பாட்டாளர் அடையக்கூடும். இந்த்ராப் தலைவர்கள் தொடர்ந்து ' ஒரு கையெழுத்தில் தீர்வு ' என்பதில் உறுதியாக இருந்தால், குறிப்பிட்ட நில மேம்பாட்டளரும் அதையே சாதகமாக பயன்படுத்தி பெரும் இலாபத்தை அள்ளி செல்ல தயாராகவே இருப்பார்.

ஆனால், கம்போங் புவா பாலா நில மேம்பாட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் சில இந்த்ராப் தலைவர்களின் கோரிக்கையாக இருக்குமெனில், ஒரு வெளிப்படையான கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள மக்களுக்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும். அதன் வழி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு தீர்வை நாம் எட்ட முடியும். கிராம மக்களும், மாநில அரசாங்கமும் தெளிவான முறையில், முன்றாம் தரப்பின் தலையீடு இன்றி, கலந்துரையாடுவதற்கு இந்த்ராப் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை.

நியாயமான இழப்பீடு தரப்படவில்லை என்று கூறும் அதேவேளையில், ' ஒரு கையெழுத்தில்' நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றும் சில இந்த்ராபினர் கோரிக்கை விடுக்கின்றனர். உண்மையில் எந்த தீர்வைத்தான் இவர்கள் எதிர்ப்பர்கின்றனர் என்பது அவர்களுக்கே புரியவில்லை போலும்.

' ஒரு கையெழுத்தில் தீர்வு ' எனும் கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தால், அது அந்த நில மேம்பாட்டு நிறுவனத்தை இலாபம் பெற வைப்பதற்கும், அந்த மக்கள் எந்தவொரு இழப்பீடும் பெறாமல் போவதற்கும் வழி அமைத்து விடும்.

உண்மையான இந்த்ராப் தோழர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க நேரம் வந்துள்ளது. இந்த்ராப் இயக்கம் நடத்திய நவம்பர் 25 பேரணியில், உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு போராடிய ஒவ்வொரு தோழருக்கும் அந்த இயக்கத்தின் வளர்ச்சியில் பங்குள்ளது. தேசிய முன்னணி அரசாங்கம் செய்த தவறுக்கு மக்கள் கூட்டணி அரசாங்கத்தை குறை கூறும் சில தரப்பினரின் கூற்றுகள் எந்த அளவுக்கு சரியானது என்பது உங்களுக்கும் தெரியும்.ஆகவே, உண்மைக்காக குரல் கொடுக்க உண்மையான இந்த்ராப் தோழர்கள் முன்வர வேண்டும். நில மேம்பட்டலரை இலாபபடுத்தும் வண்ணம் கருத்துகளை வெளியிடும் சில தரப்பினரின் கருத்துகள் எந்த அளவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

லியு சின் டொங், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர், பினாங்கு.

9.6.09

இரு போராளிகளின் காதல்....


அன்றொரு நாள்,
வளர்ந்து நின்ற பனை மரத்தின் கீழ்,- நாம்
காதல் வசனம் பேசி நின்றோம்!!

இன்றைய நாள்,
அடர்ந்து கிடக்கும் வனத்திற்குள்,- நாம்
கையில் ஆயுதமேந்தி நிற்கின்றோம்!!

அன்றொரு நாள்,
இரு கரம்கூப்பி கும்பிட்டோம், - அந்த
ஊரோரம் ஆலயத்துத் தெய்வத்தை!!

இன்றைய நாள்,
இரு கைவலிக்க தூக்கி நிற்கின்றோம்,- ஏகே 47
தானியங்கி துப்பாக்கியை!!

அன்றொரு நாள்,
வானத்தை உற்று நோக்கி - சிதறிக்கிடக்கும்
நட்சத்திரம் எண்ணினோம்!!

இன்றைய நாள்,
வானத்தை உற்று நோக்குகிறோம், - விமானம்
குண்டு வீச வருதா என்று!!

அன்றொரு நாள்,
சொன்னேன் நான் உன்னிடம் - மணமுடித்தபின்
என் தாய்தான் உனக்கு எல்லாம் என்று!!

இன்றைய நாள்,
சொல்கிறேன் நான் உன்னிடம் - உயிர்விட்டாலும்
தாய் மண்ணின் விடுதலைதான் நோக்கம் என்று!!

நான் உன்னைக் காதலித்தேன்!!
நீ என்னைக் காதலித்தாய்!!
நாம் நம்மை காதலித்தோம்!!

என் காதல் தோற்று நின்றது,
உன் காதல் தோற்று நின்றது,
நம் காதல் தோற்று நின்றது,
நம் உயிர் தாய் மண்மீது கொண்ட காதல் முன்!!

உனக்காக நான் உயிர்விடவும் மாட்டேன்,
எனக்காக நீ உயிர்விடவும் வேண்டாம்!!
இருக்கும் ஒரு உயிரும், - நம்
தமிழ் தேசத்திற்கென்றே போய்விடட்டும்!!

நாம் காதலர்தாம்,
உனக்கு நானும், எனக்கு நீயும் மட்டுமல்ல!!
நாம் இந்த தேசத்தின் காதலர்கள்!!
நம் காதல் இந்த தேசத்தின் விடிவை நோக்கிய காதல்!!

30.5.09

தலைவர் பிரபாகரன் நிச்சயம் 5ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார்....

தமிழீழ தேசிய போராட்டத்தின் நெடுகிலும், தலைவர் பிரபாகரன் பல இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றிகளை குவித்துள்ளார். தமிழீழ தேசிய போராட்டத்தை உற்று கவனித்து வருபவர்கள் இதனை வெகுவாக அறிவார்கள். உலகத்தில் உள்ள நாடுகள் எல்லாம், நாடில்லா தமிழினத்தை அழிக்கத்துடிக்கும் இலங்கை இனவெறி அரசூக்கு தோள்கொடுத்து உதவிய நான்காம் கட்ட ஈழப்போரில், புலிகளுக்கு ஏற்பட்டது பின்னடைவுதான் என்ற பொழுதிலும், புலி பதுங்குவது பாய்வதற்கு என்பதுதான் நமக்கு நன்றாக தெரியும்.

பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என்று அறிவிப்பதன் மூலம், உளவியல் பலவீனத்தை புலிப்போராளிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களை சரணடைய வைத்து விடலாம் என்று நம்புகிறது இலங்கை இனவெறி அரசு. இதற்கிடையில், புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனும் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பிற்கும், இந்திய உளவுத்துறையான (RAW)ராவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. அனைத்துலக காவல்துறையான இண்டர்போலால் தேடப்படுபவர்களின் பட்டியலில் க.பத்மநாபன் சேர்க்கப்பட்டிருப்பதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் வலுக்கிறது.

எது எப்படியிருப்பினும், தலைவர் உயிரோடுதான் உள்ளார்,5ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பர் என்று உலகம் முழுவதும் பரந்துக்கிடக்கும் தமிழர்களும் நம்புகிறார்கள். முன்பு, தமிழீழ-இலங்கை அரசுகளுக்கான அமைதிப்பேச்சுகளில் பங்குபெற்றவரும், இன்று மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ள பேராசிரியர் இராமசாமி அவர்களும் அவ்வாறே கூறுகிறார். அவரின் அறிக்கை...(
இங்கே சொடுக்கவும்)

பேராசிரியர் அவர்களைப் போலவே, ஈழப்போராட்டத்தின் ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், வைகோ, தொல்.திருமாவளவன் ஆகிய தமிழ்நாட்டு தலைவர்களும் தலைவர் பிரபாகரன் ஐந்தாம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர். ஆகவே,ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் முன்னெடுக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. உலகத்தமிழர்களான நாம், தலைவரின் கரத்தை பலப்படுத்தி, நான்காம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இழப்புகளை கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போர் தமிழ் தேசியத்திற்கு வழி ஏற்படுத்த உறுதுணையாக இருப்போமாக.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்...

25.5.09

மரணத்தை வென்ற மாவீரன்......பிரபாகரன்


இன்று முற்பகல், புலிகளின் அனைத்துலக பிரிவுகளுக்கான செயலாளர் கா.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியானதை, நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

உலக தமிழர்களுக்கெல்லாம், ஒரே தலைவனாக இருந்த பிரபாகரன், அவரது கடைசி நிமிடங்களில் கூட தனது தாய் மண்ணான ஈழத்தையும், மக்களையும் தனியே விட்டு செல்ல மாட்டேன் என்று மறுத்து விட்டதாக பத்மநாபனின் அறிக்கை கூறுகிறது. தனது கடைசி மூச்சு வரை தனது மக்களுக்காகவே வழ்ந்த மாமனிதன் பிரபாகரன் மட்டுமே.

நேற்றுதான், பட்டவொர்த் நகரில், பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக்கிடக்கும் மர்ம முடிச்சுகள் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடத்தினோம். நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு சில மணித்துளிகள் இருக்கும்பொழுது, பத்மநாபன் அவர்களின் மூலமாக தலைவரின் மரண செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. நெஞ்சம் வெடித்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வு. எந்த தலைவனின் மரண செய்தி பொய்யென்று நாம் அறிவிக்கப்போகின்றோமோ,அந்த செய்தி உண்மையென்று உறுதிப்படுத்தப்படும்பொழுது எப்படியிருக்கும்?!

நிகழ்வில் முன்னதாக பேசிய இரண்டு பேச்சாளர்களும், பிரபாகரன் மரண செய்தியில் தெரியும் முரண்பாடுகளை விவரமாக விவாதித்தனர். அடுத்து பேச வந்த பேராசிரியர் இராமசாமி அவர்களோ, பிரபாகரனின் அண்மைய தகவல்கள் எதையும் நேரடியாக கூறாமல், விடுதலைப்புலிகளின் அறிவிப்பிற்கு காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். தலைவரின் மரண செய்தியானது, பேராசிரியர் அவர்களை பெரிதும் பாதித்திருந்தது என்பதை அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே அறிவர். கண்கள் கலங்கிய பேராசிரியரை பார்ப்பது அதுவே முதல் முறை என்று பலர் என்னிடம் கூறினர்.

தோழி பவனேஸ்வரியின் எழுச்சிமிகு கவிதை, பிரபாகரன் என்ற மாவீரன் கண்ட பெண்ணியம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தியது. தமிழ் பெண்களென்றாலே, சினிமா மாயையிலும், தொலைகாட்சி தொடர்களிலும் மூழ்கிக்கிடப்பவர்கள் என்ற கூற்றையெல்லாம், அறவே பொய்ப்பித்தது தோழி பவனேஸ்வரியின் தைரியம். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நிறைய பெண்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபாகரனின் கனவான, கௌரவமான தமிழின உணர்ச்சி இன்னும் மறையவில்லை என்ற ஆறுதல் எனக்குள் ஏற்பட்டது.

எனக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது, எனது நெஞ்சம் எவ்வாறு விம்மிக்கொண்டிருந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழினத்தின் கேவலமான சாபக்கேடு, கொலைஞன் கருணாநிதியை கண்டித்தேன். கலைஞர் கருணாநிதியை நான் "கொலைஞர்" என்று கூறியதில் சிலருக்கு வருத்தம். யார் என்ன சொன்ன போதிலும், என்னுடைய கருத்தில் நான் உறுதியாகவே உள்ளேன். கருணாநிதி என்ற கொலைஞன், தமிழினத்தின் துரோகி; எட்டப்பனின் வாரிசு!!!

எனது எண்ணக்குமுறல்களில் நான் கூறியவற்றில் மிக முக்கியமான கருத்து.
பிரபாகரன் மரணத்தை வென்ற மாவீரன் என்பதுதான்.

இந்த பூமிப்பந்தில் கடைசித்தமிழன் உள்ள வரை, ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் பிரபாகரன் வாழ்ந்துக்கொண்டிருப்பாரே அன்றி, ஒரு பொழுதும் அவருக்கு மறைவு கிடையாது. மரணத்தையெல்லாம் வென்று, மக்கள் மனதில் என்றும் வாழும் காவல் தெய்வமாக பிரபாகரன் இருப்பார் என்பதே உண்மை.

ஆகவே, பிரபாகரன் மறைவு, வீரமரணம் என்ற செய்தியெல்லாம் கண்டு தமிழர்கள் கலங்கக்கூடாது. பிரபாகரன் என்ற மாவீரன் கண்ட கனவை எப்படி நனவாக்குவது என்பதே நமது ஒட்டு மொத்த குறிக்கோளாக இருக்க வேண்டும். மீண்டும் தலையெடுக்கப்போகும் ஐந்தாம் கட்ட ஈழப்போரில், நம்மால் ஆன உதவிகளையெல்லாம் செய்து, தமிழர் படையை வெற்றிக்கொள்ள செய்ய வேண்டும்.

தமிழர்தமை காக்க வந்த தமிழ்புலியே,
தமிழர் நெஞ்சமெல்லாம் நீ தந்த உரமிருக்கும்!!

கண்ட தேசம் கனவாகிப் போவதில்லை,
மலர்ந்துவிடும் வெகு விரைவில் தமிழீழம்!!

தமிழர் மனமெல்லாம் நிறைந்திருக்கும் தலைமகனே,
ஓர்பொழுதும் மரணம் என்பது உமக்கில்லை!!

பூமிதனில் கடைசி தமிழன் உள்ளவரை,- அவர்தம்
நெஞ்சில் நீ வாழ்வாய் எப்பொழுதுமிறவாமல்!!

வாழ்க தமிழினம்!! வாழ்க பிரபாகரன்!!
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்!!