15.9.08

மே 13......ஒரு அறிமுகம்

“இஷாமுடின் உசேன் கிரிஸ் கத்தியை எடுத்து விட்டார்,உயர்த்தி விட்டார்,முத்தமிட்டு விட்டார்!எப்பொழுது அதை அவர் உபயோகிக்கப் போகிறார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்!”

“மலாய்க்காரர்களின் ஆளுமையையும்,உரிமையைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்புக்கூடாது;அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், மலாய்க்காரர்கள் சினம் கொள்வர்;அப்படி சினம் கொள்கையில், கோலாலம்பூரில் மீண்டும் “மே 13” அரங்கேறும்!!”


மே 13,நமது சுதந்திர மலேசியாவின் கரை படிந்த அத்தியாயம்.இந்த மே 13 இனக்கலவரத்தைப் பற்றி இதுவரை நாம் படித்து வந்த சரித்திர கோப்புகள் எல்லாம் பொய் என்பதை சுவாராம் இயக்குனர்,குவா கியா சுங் அவர்களின் "மே 13,1969 மலேசிய கலவரத்தைப் பற்றிய இரகசிய ஆவணங்கள்" ( May 13, Declassified documents on Malaysian Riots 1969" என்ற புத்தகத்தை படித்த பிறகு அறிய முடிகிறது.இந்த மே 13 புத்தகம்,மலாய் மொழியிலும், ம்ஆங்கில மொழியிலும் மட்டுமே உள்ளது. உண்மைகளைக் கூறும் இந்நூல் தமிழில் வெளிவர வேண்டும் என்பதுதான் என் அவா.அதற்கான முதல் முயற்சியாக இந்நூலின் அறிமுக பாகத்தை தமிழில் மொழி பெயர்த்து இவ்வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.மே 13 பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்......


அறிமுகம்
அதிகாரப்பூர்வ சரித்திர படிவங்கள் உண்மையா?
கடந்த 2006 ஆம் ஆண்டு மத்தியில்,சில மலேசியர்கள் எழுப்பிய அதிருப்தி குரலை நாம் கேட்க முடிந்தது.இந்த அதிருப்தி குரல்களுக்கு காரணம், மலேசிய ஆரம்ப பள்ளி பாடபுத்தகங்களில்,1969 இனக்கலவரத்தைப் பற்றியும், மலேசியர்களின் இனங்களுக்கிடையான உறவைப் பற்றியும் கூறப்பட்டிருந்த தகவல்கள்தான்.1969 பொதுத்தேர்தலில்,நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியின் பெரும்பான்மையை குறைத்ததனாலும்,சில மாநிலங்களின் ஆட்சியை கைப்பற்றியதாலும்தான் மே 13 இனக்கலவரம் நிகழ்ந்தது என்று ஒட்டுமொத்த பழியையும் எதிர்கட்சிகளின் மீது சுமத்தப்பட்டதை பெரும்பாலான மலேசியர்கள் நம்பவில்லையென்பதையே இந்த அதிருப்தி குரல்கள் நமக்கு உணர்த்தியது.
இந்த அதிகாரப்பூர்வ சரித்திரத்தின் படி,இது போன்ற கலவரங்கள் ஆளுங்கட்சியின் பெரும்பான்மை சரியுமானால் மீண்டும் சாத்தியம் என்பது போலவும் பாட புத்தகங்களில் கூறப்பட்டிருந்தது.1969 முதற்கொண்டு ஆளும் தரப்பு இதைக்கூறித்தான் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. மலேசிய சுதந்திரம் அடைந்த பொழுது வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 153வது பாகத்தின் படி,மலாய்க்காரர்களுக்கு நிலம்,அரசாங்க வேலை வாய்ப்புகள், ஒரு சில வணிகங்களுக்கான உரிமங்கள் (லைசென்ஸ்/பெர்மிட்), உபகாரச்சம்பளம்,கடனுதவி மற்றும் சில கல்வி உதவிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால்,1969க்குப் பின் உருவாக்கப்பட்ட தேசிய ஆளுமை மன்றம் (National Operational Council) மலாய் அதிகாரத்துவம்(Ketuanan Melayu) என்ற கொள்கையை வடிவமைத்தது.இதன் மூலம்,மற்ற இனங்களுக்கு அநீதியான அரசாங்க கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.மலேசிய அரசியலமைப்புக்கு முற்றும் புறம்பான இந்த மலாய அதிகாரத்துவ கொள்கையானது இனவாத கொள்கையாக மட்டுமின்றி, ஒரு அநியாயமான கொள்கையுமாகும்.
ஆகவே, மலேசிய சரித்திரத்தை திருத்தி எழுதுமாறு ஒர் சில தரப்பினர் எழுப்பும் கோரிக்கையின் நியாயம்,சுதந்திரமான அறிவுமயத்தின் கட்டாயமாகும். மலேசியாவின் சரித்திரத்தைப் பற்றி பேசுகையில்,பல பகுதிகளைப் பற்றி சந்தேகங்களும், எதிர் விவாதங்களும் நிலவுகின்றன. அவற்றில் குறிப்பாக, இரண்டாம் உலகப்போர், சுதந்திரப்போரட்டம், அவசரக்காலம், முக்கியமாக 1969 மே 13 இனக்கலவரம் ஆகியவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ சரித்திர பதிவுகள் பெரும் விவாதத்திற்குள்ளாகின்றன.
மே 13 நூலின் எழுத்தாளர், தனது முனைவர் நிலை பட்டப்படிப்புக்காக அவசரக்காலத்தைப் பற்றி ஆய்வொன்றை மேற்கொண்டார்.1983இல்,அவரின் ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது.இம்முறை, மே 13 1969 இனக்கலவரத்தை நூலாசிரியர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.மே 13 சம்பவத்தைப் பற்றி இதுவரை நமக்கு கூறப்பட்டு வந்த அனைத்துமே இட்டுக்கட்டப்பட்ட கதைகள் என்றே கூற வேண்டும்.மலேசியாவின் சரித்திரத்தில் மிக மோசமான இச்சமபவத்தைப் பற்றிய உண்மை தகவல்கள் இதுவரையில் மலேசியர்களுக்கு சொல்லப்படவில்லை. ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இதுவரை மே 13 சம்பவம் விவரிக்கப்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் இந்த அதிகாரப்பூர்வ சரித்திரத்தை சாமன்ய மக்கள் மறுக்கும் நிலை இப்பொழுது தோன்றியுள்ளது.
மே 13 இனக்கலவரம் நடந்து முடிந்த பிறகு, அச்சம்பவத்தைப் பற்றி விவாதிப்பதற்குக் கூட மக்களிடையே ஒரு வித அச்சம் நிலவியது. இவ்வாறான அச்சத்தை முன்னிறுத்தியே மக்களை தமது பிடிக்குள் வைத்திருப்பதையே ஆளும் தரப்பு விரும்பியது.ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும்,ஆளும் கூட்டணியின் பெரும்பான்மை குறையக்கூடும் என்ற நிலை ஏறபடும் பொழுதும் “மே 13” என்ற பேய்க்கதை கட்டவிழ்த்து விடப்படும்.ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை இழக்குமானால், மீண்டும் ஒரு இன்க்கலவரம் வெடிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்படுத்தப்படும். இந்த அச்ச உணர்வை முன்வைத்துதான்,எதிர்கட்சிகள் பலமான கூட்டணியை அமைத்திருந்த 1990 பொதுத்தேர்தலிலும்,1999இல் மலாய்க்காரர் அல்லாதோரின் பொது உரிமையைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போதும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி அரசு தனது வெற்றியை நிலை நிறுத்தியது.

மிக அண்மையில்,2006ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையும் இதற்கு விதிவிலக்கல்ல.மீண்டும் இன்வாதம் முன்னிறுத்தப்பட்ட காட்சிகள் இந்த அம்னோ பொதுப் பேரவையில் இடம்பெற்றன. அம்னோ இளைஞரணி தலைவர்,கிரிஸ் கத்தியை மேலே உயர்த்திக்காட்டி, அக்கத்திக்கு முத்தமிட்டார்.இச்செயலானது சமுக பொது உரிமைகளை பற்றிய கேள்விகளை எழுப்புபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என கூறப்பட்டது.அம்னோவின் ஆளுமையைப் பற்றி கேள்வி எழுப்பினால், மீண்டும் மே 13 நடக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படது.அதற்கு பிறகு பேசிய ஒவ்வொரு அம்னோ பேராளரும் இனவாதத்தை முன்னிறுத்தியும், மலாய்க்காரார் அல்லாதோருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியிலும் பேசினர்.அவர்களின் உரைகளின் சாரம்சம் கீழ்வருமாறு :-

மலாக்கா பேராளர்,ஹஸ்னோர் சிடாங் உசேன் பேசுகையில்,
“இன உரிமையையும்,மதத்தையும் காக்க,அம்னோ உயிர்களை அடமானம் வைக்கவும்,இரத்ததில் குளிக்கவும் ஒரு போதும் தயங்காது!” என்றார்.

பெர்லிஸ் பேராளர் ஹஷிம் சூபோ பேசுகையில், “இஷாமுடின் உசேன் கிரிஸ் கத்தியை எடுத்து விட்டார்,உயர்த்தி விட்டார்,முத்தமிட்டு விட்டார்!எப்பொழுது அதை அவர் உபயோகிக்கப் போகிறார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்!” என்றார்.

தெரங்கானு அம்னோ இளைஞர் பிரிவின் தகவல் பிரிவு தலைவர்,ரசாக் இட்ரீஸ் பேசுகையில், “மலாய்க்காரர்களின் ஆளுமையையும்,உரிமையைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்புக்கூடாது;அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், மலாய்க்காரர்கள் சினம் கொள்வர்;அப்படி சினம் கொள்கையில், கோலாலம்பூரில் மீண்டும் “மே 13” அரங்கேறும்!!” என்றார். (ஆதாரம் : மலேசியாக்கினி,22.11.2006)

- தொடரும் –

அடுத்த பாகத்தில் :

இன அரசியலும்,வர்க்கப் பிரிவினையும்

- இனக்கலவரத்தை தூண்டியது யார்?

- NEP இன் அறிமுகம்

- “ஹரோனும் அவர்களில் ஒருவர் – ஹரோன்,மகாதீர்,கசாலி ஷஃபி – இவர்களெல்லாம் இராசாக்கோடு சேர்ந்து என்னை வெளியேற்ற வேலை செய்தனர் – என் பதவியை அபகரிக்க.” - துங்கு

2 comments:

Anonymous said...

எல்லாம் சரி... ஆனால் உன்னுடைய வலை எழுத்தின் வண்ணம் கண்களை உறுத்துகிறது... நல்ல தகவலும் இதனால் மற்றவர்களை சென்றடைவதில்லை..வாசகர்களுக்கு எரிச்சலையும் அயர்வையும் தரும் இதுப் போன்ற வண்ணங்களை தவிர்ப்பது நல்லது...இது என் சொந்த விருப்பம் என்று இருமாப்பு கொண்டிருந்தால் நீ மற்றவர்களுக்கு கூற நினைக்கும் தகவல்கள் சரியாய் சென்றடையாது என்பது திண்ணம். இது பற்றி பல முறை கூறியாகிவிட்டது...ஆனால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனதுதான் மிச்சம். Please remove your verification!

VIKNESHWARAN ADAKKALAM said...

சிறப்பான முயற்ச்சி... சிரத்தை எடுத்து எழுதி இருக்கின்றீர்கள்...

நண்பரே கோபிக்க வேண்டாம் எழுத்துருக்களின் வண்ணத்தின் சரியின்மையால் சரியாக படிக்க இயலவில்லை. சற்றே சரி செய்வது நலம்...