20.5.09

வீரவணக்கமும், விளக்கக்கூட்டமும்...

வீரவணக்கமும், விளக்கக்கூட்டமும்...

தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப்போரளிகளுக்கும் வீர வணக்க நிகழ்வோடு, தமிழீழ தேசியத்தலைவர் தளபதி வே.பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக் கிடக்கும் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் விளக்கக்கூட்டம். நான்காம் கட்ட ஈழப்போரில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அதேவேளை, தளபதி பிரபாகரன் "இறப்பு" செய்தியில் உள்ள மர்மங்களையும் பற்றி நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள் விளக்கமளிப்பர்கள். நிகழ்வின் விவரம் பின்வருமாறு :

நாள் : 24-05-2009
கிழமை : ஞாயிற்றுக்கிழமை
இடம் : டேவான் ஸ்ரீ மாரியம்மன், பட்டவொர்த்.
நேரம் : மாலை 7.00 மணிக்கு மேல்

பேச்சாளர்கள் :
சமூக சேவகர் க.முருகையன்
எழுத்தாளர் சை பீர் முகம்மது
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி

தமிழ் நெஞ்சங்களே திரண்டு வாருங்கள்!!

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளார் : பிரபாகரன் இன்று இரவு பேட்டி!!



இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004 கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி? அந்த படத்தில் 35 தொடக்கம் 40 வயதான தோற்றத்தையே அளிக்கிறது.

முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லை. 2004ம் ஆண்டு புகைப்படத்தில் அவருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்திருக்கின்றன.

கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மற்றும் அந்த சூழநிலையில் இருந்து கனகச்சிதமாக முகச்சவரம் செய்தி இருப்பாரா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அம்புலன்ஸ் வண்டியில் தப்பி செல்லும் போது சூட்டுக்கு பலியாகியாத அறிவித்த இராணுவம் இன்று மதியம் 12 மணியளவில் முல்லைத்தீவு நந்திக்கடலுக்குள் இருந்து உடலை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தலைவர் பற்றிய காணொளிகள்.. சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப வெளியிடப்படுகின்றன. அவருடைய முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ்ரி சேர்ஜரிக் முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர்.

அதுமட்டுமன்றி நேற்று நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்றுதான் மீட்கப்பட்டதாம் என்பதும்.. நாணயக்கார நேற்று நாம் அப்படி ஒரு அறிக்கை விடவில்லை என்றதும்.. கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிரிகள் திட்டமிட்டு இதை செய்கின்றனர் என்பதற்கு இது நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.


1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........

2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......

3. இவர்கள்சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டுதான் செத்தவரோ?

4. இவர்கள் காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......

5. இவர்கள் காட்டும் உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............

6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....

7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....

9. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........

10.தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்து செல்வார் ????


அண்மைய உறுதிப்படுத்தப் படாத தகவல் :
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேரடியாக பேட்டி அளிக்கவிருப்பதாகவும் ஒரு எஸ்.எஸ்.எஸ். படு வேகமாக உலா வந்து கொண்டுள்ளது.
''மகிழ்ச்சிகரமான செய்தி. நமது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மரணமடையவில்லை. இது உண்மை. இன்று இரவு 10.30 மணிக்கு நமது தலைவர் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். பழ. நெடுமாறனும் அதுகுறித்துப் பேசவுள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இதை காணத் தவறாதீர்கள். இதை அனைத்து உண்மைத் தமிழர்களுக்கும் தெரிவியுங்கள்'' என்று அந்த எஸ்.எம்.எஸ். கூறுகிறது.

நன்றி : தமிழ்வின்.காம் (tamilwin.com)
: தட்ஸ்தமிழ்.காம் (thatstamil.com)

8.5.09

இலங்கை விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடம்


மலேசியாவின் இரட்டை வேட அரசாங்கத்தின் தலைவர்!!

உலக அரங்கில் எங்கே மனித அவலங்கள் நடந்தாலும், உடனே அதற்கு எதிராக குரல் எழுப்ப மலேசியா அரசாங்கம் தயங்கியதில்லை. தென்னாப்பிரிக்காவில் அப்பர்தேய்ட் எனப்படும் இனவெறி தலைவிரித்தாடிய போது பொதுநலவாய(காமென்வெல்ட்) அமைப்பிலிருந்து தென்னப்பிரிக்காவை நீக்குவதற்கு அழுத்தம் கொடுத்ததே மலேசியா என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். போஸ்னியா, கொசொவோ போன்ற பிராந்தியங்களில் இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, மலேசிய அரசு மிகக்கடுமையாக அவற்றை கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பாலஸ்தீன விவகாரத்தில் இன்னும் ஒரு படி மேல் போய், இஸ்ரேல் நாட்டுடன் எந்தவொரு தூதரக உறவுகளும் இல்லை என்ற அளவுக்கு மலேசியாவின் வெளியுறவு கொள்கை மனிதாபிமானத்தை முன்னிறுத்தியுள்ளது. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதனி நேரடியாகவே மலேசியா எதிர்த்தது. அதேபோல், பாலஸ்தீனம், போஸ்னியா, கொசொவோ, பிலிப்பின்ஸ், லெபனான் என்று உலகில் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டிக்கிறது மலேசிய அரசாங்கம். ஐரோப்பிய் கண்டத்தில் உள்ள நாடுகளில் நடக்கும் படுகொலைகள் மலேசிய அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியும் போது, நமது ஆசிய கண்டத்திலேயே உள்ள ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலைகள் மட்டும் தெரியவில்லை. இது மலேசிய தமிழர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், மனிதாபிமான விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றுகின்றது.

இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை கண்டும் காணாதது போல் இருக்கும் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை என்னவென்று சொல்வது??

அண்மையில் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, மலேசிய நாடாளுமன்றத்தின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, இஸ்ரேல் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற அவசரக்கூட்டத்தின் விவாதத்தில் கலந்துக்கொண்ட பினாங்கு மாநில துணை முதல்வர், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை நிறுத்துமாறு இலங்கை அரசையும் வற்புறுத்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது வெளியுறவு அமைச்சராக இருந்த இராய்ஸ் யாத்தீம், இலங்கையில் நிலைமைகளை தாங்கள் உற்று கவனிப்பதாகவும், ஈழத்தமிழர்களின் மீது மலேசிய தமிழார்களின் கரிசணையை கருத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார். இராய்ஸ் யாத்திம் வெளியுறவு அமைச்சிலிருந்து விலகும் வரை அதைப்பற்றி பேசவேயில்லை. தமிழர்கள், இன்று கேட்பார்கள் நாளை மறந்து விடுவார்கள் என்ற நினைப்புப்போல!!

மலேசிய அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்ளும் மஇகாவோ, ஏதோ இவர்கள் மனு கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்பதைப்போல் மனுக்கொடுத்து, பத்திரிகைகளுக்கு போஸ் கூட கொடுத்தனர். அமைச்சரவையில் மலேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருப்பார்களா என்ற கேள்வி எழும் வேலையில் அதனுடைய விடையும் நமக்கு தெரிந்தே உள்ளது. கடந்த காலங்களில் மலேசியாவில் உள்ள தமிழர்களின் நிலை பற்றியே இந்த "பிரதிநிதிகள்" என்ன செய்துக்கொண்டிருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இவர்கள் அழுத்தம் கொடுத்திருந்தால் மலேசிய அரசு கொலைவ்வெறியன் மகிந்தாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்திருக்குமா?? அடிக்கடி சிங்கள காடையர் அமைச்சர்கள் மலேசியாவிற்கு வந்து புலிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பதாகக் கூறுவார்களா?? ம இகா மலேசியத்தமிழர்களுக்கு மட்டும் தீங்கிழைக்கவ்வில்லை, ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது.

பாலஸ்தீனத்தில் நடக்கும் படுகொலைகளை நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி கண்டித்த மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் படுகொலைகளை ஒப்புக்குக்கூட கண்டிக்கவில்லை. பாலஸ்தீனர்களின் துன்பத்தை புரிந்து ௧0 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய மலேசிய அரசு, ஈழத்தில் பட்டினியால் சாகும் எம் தமிழர்களை நினைத்துக்கூட பார்க்கவில்லை. (பினாங்கு மாநில அரசு மட்டுமே, 15000 ரிங்கிட்டை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநில அரசு இன்னும் அதிகமாக தர விரும்பிய போதும், சட்ட சிக்கல் காராணமாகவே அதிக பட்சமாக 15000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
இதுவெல்லாம் மலேசிய அரசாங்கம், மனிதாபிமான விடயத்தில் இரட்டை வேடம் ஆடுவதை புலப்படுத்துகிறது.

கொசொவோவில் செத்தால் அவன் மனிதன்; போஸ்னியாவில் செத்தால் அவன் மனிதன், பாலஸ்தீனத்தில் செத்தாலும் மனிதன்; ஈழத்தில் சாவுபவன் மட்டும் மாடா?? கொசொவோ,போஸ்னியா,பாலஸ்தீனத்தில் துன்பப்பாடுவோரோடு மத அடிப்படையிலான தொடர்பு உள்ளதனால்தானே, மலேசியாவிற்கு அவர்களின் மீது அவ்வளவு அக்கறை??!! மலேசியாவில் வாழும தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களோடு இரத்த உறவே உள்ளதே, அதை புரிந்துக்கொள்ள இந்த முட்டாள் அரசாங்கத்தால் முடியவில்லையா?? அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முட்டாள் மலேசிய இந்திய காங்கிரஸ்காரனால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா??

காங்கிரஸ்க்காரன் எங்கிருந்தாலும் அவனை செருப்பால் அடிக்க வேண்டும்; அது இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், அல்லது மலேசிய இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், பொத்தம் பொதுவாக காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரித்தான்!!

இரட்டை வேடம் போடும் மலேசிய அரசே, உடனடியாக இலங்கை அரசாங்கத்தை போரை நிறுத்த வற்புறுத்து. மலேசிய வெளியுறவுத்துறையின் துணையமைச்சராக இருக்கும் தமிழனே, உனது சீன முதலாளிகளை திருப்தி படுத்துவதில் மட்டும் குறியாக இருக்காதே. உன்னைப்போல் ஒரு தமிழன்தான் அங்கு ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கிறான், முடிந்தால் அவனுக்கு உதவப்பார்!! எதற்கும் உருப்படாத சாதியைப் பிடித்துக்கொண்டு ஆடாதே!!!

தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா??

தமிழனின் உயிர் அவ்வளவு மலிவா??

தமிழனின் கோபம் தெரியுமா?? அவன் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா??
கடந்த மார்ச்8 தேர்தல் நினைவில் உள்ளதுதானே??

எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; எங்கள் ஈழத்தமிழர்களை உடனே காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்!!

8.3.09

ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக அலையென திரண்ட மலேசிய தமிழ் நெஞ்சங்கள்......நன்றி.....நன்றி.....நன்றி.....

கடந்த 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில நடைபெற்ற, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற நிகழ்வில் ஏறக்குறைய சுமார் 3000 தமிழ்ர்கள் கலந்துக்கொண்டு தமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர். மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர்கள், மூத்த , எதிர்கட்சி தலைவர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசினர்.


முதன்முதலாக பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும்,தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன ச்சோவ் கோன் இயோ (Chow Kon Yeow) , பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவ போக்கால் வரும் இன சிக்கல்களே பிற்காலத்தில் இன நெருக்கடிக்கு இட்டு சென்று பின்னாளில் உள்நாட்டு போருக்கு வழியமைப்பதாக கூறினார். இலங்கையில் நடக்கும் போர் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார். சிங்களவர்களின் இனவெறி போக்குதான் தமிழ்ர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை ஈழ வரலாறு காண்பிப்பதாக கூறினார். மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வோரால் செய்ய முடியாத ஒரு மாபெரும் காரியத்தை பினாங்கு மாநில ஜசெக செய்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம். பினாங்கு மாநில ஜசெக தலைவர் என்ற முறையில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவினரை இவ்வேளையில் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.


தொடர்ந்து பேசிய பாகான் டலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன் அவர்கள் ஜசெக ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவின் முயற்சியை பாராட்டியதோடு, தனது சட்டமன்ற சேவை மையம் சார்பாக 5,000 ரிங்கிட்டை நிதியாக வழங்கினார்.


மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் பேசுகையில் இலங்கை அரசின் இனவெறி போக்கை கடுமையாக சாடினார். இனவெறி என்பதை மனித சரித்திரத்தில் இருந்து விரட்டும் வரை உலக மக்கள் ஓயக்கூடாது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார். உலக நாடுகள் காசா பிரச்சனையில் காட்டிய முனைப்பை இலங்கை விவகாரத்தில் காட்டாததை சுட்டிக்காட்டிய லிம், உலக நாடுகள் மனிதாபிமான பிரச்சனைகளில் இரட்டை வேடம் போடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். மலேசியா அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் பினாங்கு மாநில அரசு செய்த பல சாதனைகளை பட்டியிலிட்ட லிம், அச்சாதனைகளில் மேலும் முத்தாய்ப்பு வைப்பதை போல் இந்த ஈழத்தமிழர்கள் ஆதரவு நிகழ்வு அமைகிறது என்றார். உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அது காசாவாகட்டும், ஈழமாகட்டும் பினாங்கு மாநில அரசு தயங்காமல் அம்மக்களுக்காக குரல் எழுப்பும் என்றார். அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா உலகில் நிலவும் போர்களுக்கு, குறிப்பாக பலஸ்தின, ஈழ்ப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை முன்வைப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூறினார். பினாங்கு மாநில அரசின் சார்பாக ஈழ்த்தமிழர் துயர்துடைப்பு நிதிக்கு 15,000 ரிங்கிட் வழங்குவதாகவும் லிம் அறிவித்தார். ஐநா சபை இப்பிரச்சனையில் தலையிட ஜசெக வலியுறுத்தும் என்றும் லிம் அறிவித்தார்.


தொடர்ந்து விதி சேகரிப்பு நிகழ்வு தொடங்கியது. அனித்தா சாரி சென்டர் உரிமையாளர் தமிழ் நெஞ்சர் திரு . அழகர்சாமி அவர்கள் 1500 ரிங்கிட் கொடுத்து நிதி சேகரிப்பை தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல தமிழுள்ளங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்காக வாரி கொடுத்தனர். பிரபல தொழிலதிபர் ஹென்றி பெனெடிக்ட் அவர்கள் 10000 ரிங்கிட்டை இந்நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.


தொடர்ந்து மூத்த எதிர்கட்சி தலைவர் கர்ப்பால் சிங் பேருரை ஆற்றினார். தமதுரையில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்காத உலக நாடுகளை குறிப்பாக இந்தியாவை கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார்? இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார்? இலங்கையில் நடக்கும் படுகொலையை தடுக்காத இவ்விருவரும் உலக தமிழிர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் நடக்கும் இனவெறியாட்டத்தை கண்டிக்கக்கூட தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக குறிப்பிட்டார். மலேசிய நாடாளுமன்றத்தில் பல முறை ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றாத மலேசிய அரசாங்கத்தையும் கர்ப்பால் சாடினார்.

மலேசிய இந்தியர்களின் மன ஓட்டத்தை மலேசிய நாடளுமன்றத்தில் பல முறை வெளியிட்டு தம்மோடு சிறைக்கு சென்ற அமரர் பி.பட்டுவையும், அமரர் வி.டேவிட்டையும் தமதுரையில் கர்ப்பால் நினைவு கூர்ந்தார். மேலும் பேசிய கர்ப்பால் இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

"இலங்கையில் விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த இரஜபக்ஷே அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவர். தமிழீழம் மலர்ந்தே தீரும். பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும், தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது. "


"இந்த வேளையில் மஇகா சேகரித்த ஈழத்தமிழ்ர்களின் சுனாமி நிதியில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அறிகிறோம். ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்காக சேகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாமிவேலு மீது புதிய குற்றசாட்டு எழுந்துள்ளது. ஈழத்தமிழரின் இன்னலில் கூட குளிர்காயும் சாமிவேலையும், மஇகாவையும் மலேசிய தமிழ்ர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். புக்கிட் செலாம்பாவில் மஇகாவிற்கு சரியான பாடம் காத்திருக்கிறது. நண்பர்களே, இன்று ஈழத்தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுங்கள். ஈழத்தமிழர் துயரை பற்றி நாம் அக்கறை கொள்கிறோம் என்று கூறிய வெளியுறவு அமைச்சர் இராயிஸ் யாத்திமின் வாக்குறுதி என்ன ஆனது? நிச்சயம் இந்த பிரச்சனையை ஜசெக நாடாளுமன்றத்தில் எழுப்பும் என்று கூறி தனது உரையை முடித்தார்.


தொடர்ந்து பேசிய துணை முதல்வர், பைருஸ் கைருடின், பாலஸ்தீன் பிரச்சனையைப் போல் தமிழீழ பிரச்சனையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று குறிப்பிட்டார். செஞ்சோலை சம்பவம் உட்பட இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தமதுரையில் சரித்திர பின்னணியோடு எடுத்துக்கூறிய, இலங்கை அதிபர் மகிந்த இரஜபக்ஷே ஒரு கொலை வெறியன் என்று தமதுரையில் குறிப்பிட்டார். காசாவில் நடந்த கொடுமைகளை கண்டித்ததைப் போல் இலங்கையில் நடக்கும் படுகொலைகளையும் மலேசியர்கள் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இறுதியாக உரையாற்றிய, ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதியின் ஆலோசகர், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், ஏற்பாட்டுக்குழுவின் முயற்சியை பெரிதும் பாராட்டியதோடு, இன்றைய நிகழ்வு மலேசிய தமிழ்ர்களின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் குறிப்பிட்டார். நமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் குழுமியிருக்கும் தமிழர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பிரபாகரன் என்ற தலைவன் உள்ள வரை தமிழீழ போராட்டம் ஓய்ந்து விடாது என்று குறிப்பிட்டார்.


இலங்கை அரசு, போரில் வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருப்பதுப்போல் பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையில் புலிகள் இன்னும் வலுவுடன் உள்ளனர். புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழ்ர்களை இலங்கை இராணுவம் கொன்று குவிக்கிறது. புலிகளுடன் நேருக்கு நேர் போரிட வக்கில்லாத இலங்கை இராணுவம், குழ்ந்தைகளையும், பெண்களையும் கொன்று குவிக்கிறது.


புலிகளை ஒரு வாரத்தில் அழித்து விடுவோம், ஒரு மாதத்தில் பிடித்துவிடுவோம் என்று பூச்சிக்கட்டுகிறது ஸ்ரீ லங்க. ஆகக்கடைசியாக, துரோகி கருணா சொல்லியுள்ளார் 18 மாதங்களில் புலிகளை அழித்துவிடலாம் என்று. தமிழன் இந்த பூமிப்பந்தில் உள்ள வரை புலிகளை அளிக்க முடியாது. தமிழீழம் மலர்ந்தே தீரும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்தியாவே நினைத்தாலும் அதை தடுக்க முடியாது.


அண்மைய எனது இந்திய பயணத்தில் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தேன், ஈழ பிரச்சனையை பற்றி பேசினேன். ஈழபிரச்சனையை விட வாரிசு பிரச்சனைதான் அவர்களுக்கு இப்பொழுது முக்கியமாக உள்ளது. இந்திய தலைவர்கள், குறிப்பாக தமிழக தலைவர்கள் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க் விரும்பவில்லை. அவர்களுக்கு அவரவர் பதவி, நாற்காலிதான் முக்கியம்.


அவர்களை விட மோசமான நிலையில் இருக்கிறது நமது முன்னாள் அமைச்சரின் நிலை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாகி விட்டது. மலேசிய தமிழ்ர்கள் ஏற்கனவே மைக்கா ஹோல்டிங்க்ஸ், கேபிஜெ, டேலிகோம்ஸ், தேனாகா பங்குகள் என்று ஏமாந்து விட்டனர். அண்மையில் வெளிவந்த எம்ஐஇடி கதையும் அப்படித்தான். அதிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி என்னவென்றால், இலங்ககையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியிலும் முறைகேடாம். மலேசிய தமிழர்களைத்தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால், பாவம் ஈழத்தமிழர்கள், போரோடு தினம்,தினம் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் வயிற்றிலும் அடிக்கலாமா?


இதைக்கேட்டால், இராமசாமி ஒரு ஜீரோ என்று என் மேல் பாய்கிறார். ஆம், நான் ஜீரோதான், ஊழலில் நான் ஜீரோ; நீர் எதில் ஹீரோ என்பதை மக்கள் அறிவார்கள். ஒரு வருடத்தில் என்ன சாதித்தாய் என்று கேள்வி கேட்கும் நண்பரே, என்னோடு நேரடி விவாதத்திற்கு தயாரா? நீர் தந்த சோதனையையும், நான் செய்த சாதனையையும் பட்டியலிடுகிறேன். ஈழத்தமிழரின் சுனாமி நிதி முறைகேடுக்கு பதில் சொல்லும் வரை உம்மை விடப்போவதில்லை. புக்கிட் செலம்பாவிற்கு நான் வேட்டையாட செல்கிறேன். உம்மை எங்கும சந்திக்க நான் தயார், நீர் தயாரா?? ஆப்ரிக்கா சென்றாலும் சரி, அர்ஜென்டினா சென்றாலும் சரி எமக்கு பதில் சொல்லும் வரையில் உம்மை விடப்போவதில்லை.


மலேசிய தமிழ்ர்களின் மீது, ஈழத்தமிழர்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். தளபதி பிரபாகரனே பல முறை இதை கூறியுள்ளார். எங்களை யார் மறந்தாலும் மலேசிய தமிழர்கள் எங்களை மறக்க மாட்டார்கள் என்று அடிக்கடி அவர் கூறுவார். அந்த கூற்றை இன்று மீண்டும் நாம் நீருபித்துள்ளோம். ஈழத்தமிழரின் துயர் துடைக்க ஒன்றிணைந்த தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.


இறுதியாக, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்" கண்டன, நிதி சேகரிப்பு ஒன்று கூடலில் சேகரிக்கப்பட்ட நிதி 73,960 ரிங்கிட் 40 சென் என்ற அறிவிப்போடு நிகழ்வு முடிவடைந்தது.

மு.satees.
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி.

3.3.09

மலேசிய தமிழர்களே.... ஈழத்தமிழரை காக்க பட்டவொர்த்தில் நாம் ஒன்றிணைவோம்


எதிர்வரும் 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில் நடைபெறவுள்ள, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற நிகழ்வில் தமிழர் என்ற அடையாளத்தில் நாம் ஒன்றிணைவோம். எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் சந்திக்கும் இன்னல்களை போக்க நம்மால் இயன்ற காரியத்தை செய்வோம்.

இதுவரை மலேசிய அரசாங்கமோ, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்திய பிரதிநிதிகளோ, செய்யாத ஒரு அரும்பெரும் காரியத்தை பினாங்கு மாநில அரசு செய்ய முன்வந்திருக்கின்றது. "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" நிதி சேகரிப்பு மற்றும் கண்டன ஒன்றுகூடலின் அன்று பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் ஒரு மிக முக்கிய அறிவிப்பை செய்யவுள்ளார். தென்கிழக்காசிய பிராந்தியத்தில், தமிழீழ மக்களின் துன்பங்களை துடைக்க குரல் கொடுக்கும் முதல் அரசு, பினாங்கு மாநில அரசு என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டத்தை பினாங்கு மாநில அரசின் இம்முயற்சி பிரதிபலிக்கிறது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இராஜபக்சேவின் இனவெறியாட்டத்தை கண்டிக்கும் வண்ணம் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு, ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்க குரல் எழுப்ப வேண்டும் என்பதே எமது அவா. நிகழ்வின் விவரங்கள் :-

தேதி : 07-03-2009 (சனிக்கிழமை)
இடம் : ஹஜி அகமாட் படாவி மண்டப திடல்,பட்டவொர்த்
நேரம் : மாலை 7.45க்கு மேல்

மேல் விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எம்மை தொடர்பு கொள்ளவும்.

நன்றி,
மு.சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி