8.3.09

ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக அலையென திரண்ட மலேசிய தமிழ் நெஞ்சங்கள்......நன்றி.....நன்றி.....நன்றி.....

கடந்த 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில நடைபெற்ற, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற நிகழ்வில் ஏறக்குறைய சுமார் 3000 தமிழ்ர்கள் கலந்துக்கொண்டு தமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர். மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர்கள், மூத்த , எதிர்கட்சி தலைவர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசினர்.


முதன்முதலாக பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும்,தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன ச்சோவ் கோன் இயோ (Chow Kon Yeow) , பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவ போக்கால் வரும் இன சிக்கல்களே பிற்காலத்தில் இன நெருக்கடிக்கு இட்டு சென்று பின்னாளில் உள்நாட்டு போருக்கு வழியமைப்பதாக கூறினார். இலங்கையில் நடக்கும் போர் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார். சிங்களவர்களின் இனவெறி போக்குதான் தமிழ்ர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை ஈழ வரலாறு காண்பிப்பதாக கூறினார். மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வோரால் செய்ய முடியாத ஒரு மாபெரும் காரியத்தை பினாங்கு மாநில ஜசெக செய்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம். பினாங்கு மாநில ஜசெக தலைவர் என்ற முறையில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவினரை இவ்வேளையில் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.


தொடர்ந்து பேசிய பாகான் டலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன் அவர்கள் ஜசெக ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவின் முயற்சியை பாராட்டியதோடு, தனது சட்டமன்ற சேவை மையம் சார்பாக 5,000 ரிங்கிட்டை நிதியாக வழங்கினார்.


மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் பேசுகையில் இலங்கை அரசின் இனவெறி போக்கை கடுமையாக சாடினார். இனவெறி என்பதை மனித சரித்திரத்தில் இருந்து விரட்டும் வரை உலக மக்கள் ஓயக்கூடாது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார். உலக நாடுகள் காசா பிரச்சனையில் காட்டிய முனைப்பை இலங்கை விவகாரத்தில் காட்டாததை சுட்டிக்காட்டிய லிம், உலக நாடுகள் மனிதாபிமான பிரச்சனைகளில் இரட்டை வேடம் போடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். மலேசியா அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் பினாங்கு மாநில அரசு செய்த பல சாதனைகளை பட்டியிலிட்ட லிம், அச்சாதனைகளில் மேலும் முத்தாய்ப்பு வைப்பதை போல் இந்த ஈழத்தமிழர்கள் ஆதரவு நிகழ்வு அமைகிறது என்றார். உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அது காசாவாகட்டும், ஈழமாகட்டும் பினாங்கு மாநில அரசு தயங்காமல் அம்மக்களுக்காக குரல் எழுப்பும் என்றார். அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா உலகில் நிலவும் போர்களுக்கு, குறிப்பாக பலஸ்தின, ஈழ்ப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை முன்வைப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூறினார். பினாங்கு மாநில அரசின் சார்பாக ஈழ்த்தமிழர் துயர்துடைப்பு நிதிக்கு 15,000 ரிங்கிட் வழங்குவதாகவும் லிம் அறிவித்தார். ஐநா சபை இப்பிரச்சனையில் தலையிட ஜசெக வலியுறுத்தும் என்றும் லிம் அறிவித்தார்.


தொடர்ந்து விதி சேகரிப்பு நிகழ்வு தொடங்கியது. அனித்தா சாரி சென்டர் உரிமையாளர் தமிழ் நெஞ்சர் திரு . அழகர்சாமி அவர்கள் 1500 ரிங்கிட் கொடுத்து நிதி சேகரிப்பை தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல தமிழுள்ளங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்காக வாரி கொடுத்தனர். பிரபல தொழிலதிபர் ஹென்றி பெனெடிக்ட் அவர்கள் 10000 ரிங்கிட்டை இந்நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.


தொடர்ந்து மூத்த எதிர்கட்சி தலைவர் கர்ப்பால் சிங் பேருரை ஆற்றினார். தமதுரையில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்காத உலக நாடுகளை குறிப்பாக இந்தியாவை கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார்? இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார்? இலங்கையில் நடக்கும் படுகொலையை தடுக்காத இவ்விருவரும் உலக தமிழிர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் நடக்கும் இனவெறியாட்டத்தை கண்டிக்கக்கூட தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக குறிப்பிட்டார். மலேசிய நாடாளுமன்றத்தில் பல முறை ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றாத மலேசிய அரசாங்கத்தையும் கர்ப்பால் சாடினார்.

மலேசிய இந்தியர்களின் மன ஓட்டத்தை மலேசிய நாடளுமன்றத்தில் பல முறை வெளியிட்டு தம்மோடு சிறைக்கு சென்ற அமரர் பி.பட்டுவையும், அமரர் வி.டேவிட்டையும் தமதுரையில் கர்ப்பால் நினைவு கூர்ந்தார். மேலும் பேசிய கர்ப்பால் இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

"இலங்கையில் விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த இரஜபக்ஷே அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவர். தமிழீழம் மலர்ந்தே தீரும். பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும், தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது. "


"இந்த வேளையில் மஇகா சேகரித்த ஈழத்தமிழ்ர்களின் சுனாமி நிதியில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அறிகிறோம். ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்காக சேகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாமிவேலு மீது புதிய குற்றசாட்டு எழுந்துள்ளது. ஈழத்தமிழரின் இன்னலில் கூட குளிர்காயும் சாமிவேலையும், மஇகாவையும் மலேசிய தமிழ்ர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். புக்கிட் செலாம்பாவில் மஇகாவிற்கு சரியான பாடம் காத்திருக்கிறது. நண்பர்களே, இன்று ஈழத்தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுங்கள். ஈழத்தமிழர் துயரை பற்றி நாம் அக்கறை கொள்கிறோம் என்று கூறிய வெளியுறவு அமைச்சர் இராயிஸ் யாத்திமின் வாக்குறுதி என்ன ஆனது? நிச்சயம் இந்த பிரச்சனையை ஜசெக நாடாளுமன்றத்தில் எழுப்பும் என்று கூறி தனது உரையை முடித்தார்.


தொடர்ந்து பேசிய துணை முதல்வர், பைருஸ் கைருடின், பாலஸ்தீன் பிரச்சனையைப் போல் தமிழீழ பிரச்சனையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று குறிப்பிட்டார். செஞ்சோலை சம்பவம் உட்பட இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தமதுரையில் சரித்திர பின்னணியோடு எடுத்துக்கூறிய, இலங்கை அதிபர் மகிந்த இரஜபக்ஷே ஒரு கொலை வெறியன் என்று தமதுரையில் குறிப்பிட்டார். காசாவில் நடந்த கொடுமைகளை கண்டித்ததைப் போல் இலங்கையில் நடக்கும் படுகொலைகளையும் மலேசியர்கள் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இறுதியாக உரையாற்றிய, ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதியின் ஆலோசகர், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், ஏற்பாட்டுக்குழுவின் முயற்சியை பெரிதும் பாராட்டியதோடு, இன்றைய நிகழ்வு மலேசிய தமிழ்ர்களின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் குறிப்பிட்டார். நமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் குழுமியிருக்கும் தமிழர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பிரபாகரன் என்ற தலைவன் உள்ள வரை தமிழீழ போராட்டம் ஓய்ந்து விடாது என்று குறிப்பிட்டார்.


இலங்கை அரசு, போரில் வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருப்பதுப்போல் பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையில் புலிகள் இன்னும் வலுவுடன் உள்ளனர். புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழ்ர்களை இலங்கை இராணுவம் கொன்று குவிக்கிறது. புலிகளுடன் நேருக்கு நேர் போரிட வக்கில்லாத இலங்கை இராணுவம், குழ்ந்தைகளையும், பெண்களையும் கொன்று குவிக்கிறது.


புலிகளை ஒரு வாரத்தில் அழித்து விடுவோம், ஒரு மாதத்தில் பிடித்துவிடுவோம் என்று பூச்சிக்கட்டுகிறது ஸ்ரீ லங்க. ஆகக்கடைசியாக, துரோகி கருணா சொல்லியுள்ளார் 18 மாதங்களில் புலிகளை அழித்துவிடலாம் என்று. தமிழன் இந்த பூமிப்பந்தில் உள்ள வரை புலிகளை அளிக்க முடியாது. தமிழீழம் மலர்ந்தே தீரும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்தியாவே நினைத்தாலும் அதை தடுக்க முடியாது.


அண்மைய எனது இந்திய பயணத்தில் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தேன், ஈழ பிரச்சனையை பற்றி பேசினேன். ஈழபிரச்சனையை விட வாரிசு பிரச்சனைதான் அவர்களுக்கு இப்பொழுது முக்கியமாக உள்ளது. இந்திய தலைவர்கள், குறிப்பாக தமிழக தலைவர்கள் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க் விரும்பவில்லை. அவர்களுக்கு அவரவர் பதவி, நாற்காலிதான் முக்கியம்.


அவர்களை விட மோசமான நிலையில் இருக்கிறது நமது முன்னாள் அமைச்சரின் நிலை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாகி விட்டது. மலேசிய தமிழ்ர்கள் ஏற்கனவே மைக்கா ஹோல்டிங்க்ஸ், கேபிஜெ, டேலிகோம்ஸ், தேனாகா பங்குகள் என்று ஏமாந்து விட்டனர். அண்மையில் வெளிவந்த எம்ஐஇடி கதையும் அப்படித்தான். அதிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி என்னவென்றால், இலங்ககையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியிலும் முறைகேடாம். மலேசிய தமிழர்களைத்தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால், பாவம் ஈழத்தமிழர்கள், போரோடு தினம்,தினம் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் வயிற்றிலும் அடிக்கலாமா?


இதைக்கேட்டால், இராமசாமி ஒரு ஜீரோ என்று என் மேல் பாய்கிறார். ஆம், நான் ஜீரோதான், ஊழலில் நான் ஜீரோ; நீர் எதில் ஹீரோ என்பதை மக்கள் அறிவார்கள். ஒரு வருடத்தில் என்ன சாதித்தாய் என்று கேள்வி கேட்கும் நண்பரே, என்னோடு நேரடி விவாதத்திற்கு தயாரா? நீர் தந்த சோதனையையும், நான் செய்த சாதனையையும் பட்டியலிடுகிறேன். ஈழத்தமிழரின் சுனாமி நிதி முறைகேடுக்கு பதில் சொல்லும் வரை உம்மை விடப்போவதில்லை. புக்கிட் செலம்பாவிற்கு நான் வேட்டையாட செல்கிறேன். உம்மை எங்கும சந்திக்க நான் தயார், நீர் தயாரா?? ஆப்ரிக்கா சென்றாலும் சரி, அர்ஜென்டினா சென்றாலும் சரி எமக்கு பதில் சொல்லும் வரையில் உம்மை விடப்போவதில்லை.


மலேசிய தமிழ்ர்களின் மீது, ஈழத்தமிழர்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். தளபதி பிரபாகரனே பல முறை இதை கூறியுள்ளார். எங்களை யார் மறந்தாலும் மலேசிய தமிழர்கள் எங்களை மறக்க மாட்டார்கள் என்று அடிக்கடி அவர் கூறுவார். அந்த கூற்றை இன்று மீண்டும் நாம் நீருபித்துள்ளோம். ஈழத்தமிழரின் துயர் துடைக்க ஒன்றிணைந்த தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.


இறுதியாக, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்" கண்டன, நிதி சேகரிப்பு ஒன்று கூடலில் சேகரிக்கப்பட்ட நிதி 73,960 ரிங்கிட் 40 சென் என்ற அறிவிப்போடு நிகழ்வு முடிவடைந்தது.

மு.satees.
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி.

3.3.09

மலேசிய தமிழர்களே.... ஈழத்தமிழரை காக்க பட்டவொர்த்தில் நாம் ஒன்றிணைவோம்


எதிர்வரும் 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில் நடைபெறவுள்ள, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற நிகழ்வில் தமிழர் என்ற அடையாளத்தில் நாம் ஒன்றிணைவோம். எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் சந்திக்கும் இன்னல்களை போக்க நம்மால் இயன்ற காரியத்தை செய்வோம்.

இதுவரை மலேசிய அரசாங்கமோ, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்திய பிரதிநிதிகளோ, செய்யாத ஒரு அரும்பெரும் காரியத்தை பினாங்கு மாநில அரசு செய்ய முன்வந்திருக்கின்றது. "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" நிதி சேகரிப்பு மற்றும் கண்டன ஒன்றுகூடலின் அன்று பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் ஒரு மிக முக்கிய அறிவிப்பை செய்யவுள்ளார். தென்கிழக்காசிய பிராந்தியத்தில், தமிழீழ மக்களின் துன்பங்களை துடைக்க குரல் கொடுக்கும் முதல் அரசு, பினாங்கு மாநில அரசு என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டத்தை பினாங்கு மாநில அரசின் இம்முயற்சி பிரதிபலிக்கிறது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இராஜபக்சேவின் இனவெறியாட்டத்தை கண்டிக்கும் வண்ணம் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு, ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்க குரல் எழுப்ப வேண்டும் என்பதே எமது அவா. நிகழ்வின் விவரங்கள் :-

தேதி : 07-03-2009 (சனிக்கிழமை)
இடம் : ஹஜி அகமாட் படாவி மண்டப திடல்,பட்டவொர்த்
நேரம் : மாலை 7.45க்கு மேல்

மேல் விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எம்மை தொடர்பு கொள்ளவும்.

நன்றி,
மு.சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி

25.2.09

தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.....





எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்களே.....

எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி, பட்டவொர்த் டேவான் ஹாஜி அகமட் படாவி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தைப் பற்றிய விவரங்களை தங்களது வலைப்பதிவுகளில் பதிவிட்டு, இந்நிகழ்வை வெற்றிப் பெற செய்திட வேண்டுகிறோம்.

மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற எதிரணி தலைவர், மூத்த எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசவுள்ளனர். மலேசிய தமிழர் வரலாற்றில், இதுநாள் வரையிலும் இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட பொழுதிலும், இம்முறை நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தின் வழி மலேசிய மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.


இக்கூட்டமானது, வெறும் நிதி சேகரிப்பு கூட்டமாக மட்டும் முடிந்து விடாமல், இலங்கை அரசாங்கத்தின் இன்வெறி போரை வெளிப்படுத்தும் பிராச்சார கூட்டமாகவும் அமையும். இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை, தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் நடத்தும் இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போலி முகத்திரையையும் கிழிக்கும் கூட்டமாக இது அமையும். தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு இலங்கையில் நடைபெறும் கொலைவெறி ஆட்டத்தை படம்பிடித்துக் காட்டி, மலேசிய மக்களிடத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு கோரப்படும்.


இந்நிகழ்வு சம்பந்தமான விவரங்களை தத்தம் வலிப்பதிவுகளில் வெளியிட்டு, ஈழத்தமிழர் இன்னல் துடைக்க நம்மால் இயன்றதை செய்வோம். நிகழ்வு சம்பந்தமான படங்களை இவ்வலைப்பதிவில் தங்கள் உபயோகத்திற்காக பதிவிடுகிறேன். மேல் விவரங்கள், கீழ்காணும் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்க.

நன்றியுடன்,

மு. சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி.

16.2.09

ஈழத்தமிழர் உயிர் காக்க, திரண்டு வாரீர்.....


எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி அன்று, பட்டவொர்த், டேவன் ஹாஜி அஹ்மாட் படாவி (Padang Dewan Haji Ahmad Badawi) மண்டப திடலில், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக் நிதி சேகரிக்கவும், இலங்கை அரசாங்கத்தின் தமிழின அழிப்பு போரை கண்டிக்கும் வகையிலும் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சியினரின் முயற்சியில், அண்மையில் அமைக்கப்பட்ட "ஜசெக - ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி" (DAP - SRI LANKAN TAMILS RELIEF FUND) செயற்குழுவினரின் ஒழுங்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினரான, மாண்புமிகு R.S.நேதாஜி இராயர் தலைமையில் அமையப்பெற்ற இக்குழுவானது, ஈழத்தமிழரின் இன்னலை துடைக்க வெறும் நிதியுதவி மட்டும் போதாது என்பதையும், ஈழத்தமிழரின் வாழ்வில் நிரந்தர வசந்தம் வீச தமிழீழம் மட்டுமே நிரந்தர தீர்வென்பதையும் பிராச்சர இயக்கத்தின் மூலம் மலேசியர்கள் மத்தியில் தெளிவுப்படுத்த விரும்புகிறது. இலங்கையில் முன்னர் நடைப்பெற்ற அமைதி பேச்சுகளில் நேரடி பங்காற்றிய, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர், மாண்புமிகு பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி அவர்களின் வழிகாட்டலோடு இந்த செயற்குழுவின் நடவடிக்கைகள் அமையும்.

பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நடத்தும் கொலை வெறியாட்டத்தை விட, மிகக்கொடுரமான இன அழிப்புப்போரை நடத்தும் இலங்கை அரசை கண்டிக்காத சர்வதேசத்தின் இரட்டை நாடகத்தைக் கண்டு உலக தமிழர்கள் வெதும்பி போயிருக்கும் இவ்வேளையில், இலங்கை அரசாங்கத்தின் இனவெறி அட்டூழியத்தை தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு விளக்கும் முயற்சியே இந்த மாபெரும் பொதுக்கூட்டமாகும். இந்த பொதுக்கூட்டத்தில், முக்கிய பேச்சாளர்களாக கலந்த்க்கொள்ளவிருப்பவர்கள்,

  1. மாண்புமிகு லிம் குவான் எங், பினாங்கு மாநில முதல்வர்;
  2. மாண்புமிகு பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி, பினாங்கு மாநில துணை முதல்வர்;
  3. மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலேசிய நாடாளுமன்ற எதிரணி தலைவர்;
  4. மாண்புமிகு திரு.கர்ப்பால் சிங், மலேசிய நாடாளுமன்ற மூத்த எதிர்கட்சி உறுப்பினர்;
  5. மற்றும் பலர்.


இந்நிகழ்வை பற்றிய மேல் விவரங்கள், மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

நன்றி,

சத்தீஸ் முனியாண்டி,
செயலாளர், ஜசெக - ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி

(மேல் விவரங்களுக்கு, 016-4384767 அல்லது 013-4853128 என்ற எண்களில் எங்களை தொடர்பு கொள்க)

5.1.09

கணைகள் வீசும் பெண்......

ஈழத்தமிழர் தினம் இனவெறி போரால் படும் இன்னல்களை இங்குள்ள தமிழர் அறியாமல், தினமொரு கனவில் திளைத்திருப்பதை கண்டு பலமுறை எனது நெஞ்சம் வெம்பியிருக்கின்றது. அதிலும் பண்பாட்டை காக்க வேண்டிய பெண்களை பற்றிதான் எனக்கு மிக அதிகக்கவலை எனலாம்.

அங்கே ஆயுதம் கையிலெடுத்து போராடும் எமது பெண் புலிகளையும், இங்கே குடி,கும்மாளம் என பொழுதை கழிக்கும் ஒரு சில தமிழ் பெண்களையும் ஒப்பிட்டு பார்த்து பல முறை வருந்தியிருக்கிறேன்.

பண்பாடு, பாரம்பரியம் என்று இன்றும் நமது பெண்கள் பலர் வாழ்கிறார்கள் என்பதிலும் ஓரளவு திருப்தி. நமது தமிழ் பெண்களின் அபரீத வளர்ச்சி, சிந்தனை முதிர்ச்சியைக் கண்டு பெரிதும் உவகைக் கொண்டதெல்லாம் உண்டு.

பாரதி கண்ட புதுமைப்பெண் வெறும் கனவு அல்ல, இன்று நிரந்தர நிஜமாகியுள்ளது. அதிலும், பாரதியின் புதுமைப்பெண் என்று கூறிக்கொண்டு, தவறான பாதையில் செல்லும் சிலரும் உண்டு. அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம்.

பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற காலக்கட்டத்தை கடந்து, இன்று பிரபாகரன் கண்ட புலிப்பெண் என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஈழத்தில் மட்டும்தான் "பிரபாகரன் கண்ட புலிப்பெண்கள்" இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு, எனது அருமை அக்காவின் மூலம் அறிமுகமானவள் இந்த கணைகள் வீசும் பெண். எனது தமக்கையின் வழி அறிமுகமான ஒரு பெண் வலைப்பதிவரைப் பற்றிதான் மேற்கூறிய நீண்ட நெடிய விளக்கம்.

கணைகள்.... என்ற வலைப்பதிவை காண நேரிட்டப்பொழுது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தன்னை
அடைத்துக்கொள்ளாமல், இலக்கியம், அரசியல், தகவல் பரிமாற்றம் என்று புகுந்து விளையாடும் இந்த பதிவரின் ஈழத்தைப் பற்றிய கவிதைகள், உரைவீச்சுகள்தான் எனது ஆச்சரியத்திற்கு காரணம். நமது தாய் திருநாட்டில் ஈழப்போராட்டத்தை அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், உரிமையைக் கேட்டு போராடும் எமது தமிழ் புலிகளை மானசீகமாக ஆதரிக்கும் இந்த பெண் பதிவரைக் கண்டதில் உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

போர்... என்றாலே "நாங்கள் அதை வெறுக்கிறோம்" எனும் பெண்களுக்கு மத்தியில், தேவியில்லாப் போரையும் உரிமைப்போரையும் வித்தியாசப்படுத்தத் தெரிந்தவர் இந்த பதிவர் என்பதுதான் சிறப்பு.
இவரின் படைப்பில் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பிட்ட பதிவு பின்வருமாறு...

"இலங்கை இராணுவமே! மனதில் தைரியம் என்ற ஒன்று உண்டென்றால் புலிகளிடம் நேரடியாக மோது! அதைவிடுத்து அப்பாவி மக்களைச் சித்திரவதைச் செய்யாதே! மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டல்லவா? மன்னிக்கவும்! தவறான கேள்வி...மனிதர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை வெறி நாய்களிடம் கேட்டால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?!"

"என்ன பாவம் செய்தது அந்த பிஞ்சுக் குழந்தை? உனது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அந்தச் சிசு தானா பலியாக வேண்டும்? இலங்கை இராணுவ மிருகங்களே, உங்களுக்கு ஈவிறக்கமே கிடையாதா? இதயமில்லா ஜந்துக்களே, கேளுங்கள்! என்னருமை தமிழீழச் சகோதரர்கள் உங்களை வெற்றிக்கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை! விரைவில் தனிநாடு உருவாகும்!"


"நீங்கள் சிதைத்து சுடுகாடாய் ஆக்கிவிட்டப் போன இடங்கள் தமிழ் சுவாசம் பெற்று நந்தவனமாய் குலுங்கும்! விடிவு வெகுதூரம் இல்லை; அதனை அடைவதற்கு வெகுநாட்களும் இல்லை! புலிகள் புத்தாடை உடுத்தி புல்லாங்குழல் வாசிக்கும் நாள் விரைவில் வரும். குழலின் இசைக்கேற்ப ஆடுவதற்கு, ஓநாய்களே, நீங்கள் தயாராக இருங்கள்!!!"

இதே கோபத்தோடுதான் ஈழ்த்தில் எமது பெண்கள் கைகளில் ஆயுதம் ஏந்துகின்றார்கள். இந்த பெண் கையில் கணினியின் தட்டச்சு கிடைத்து விட்டது. கோபம் கொப்பளித்தாலும், அது நியாயமான கோபம் என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து கிடையாது.

இந்த கோபமெல்லாம் இதேப்போல் படைப்புகளாக வந்தால் மிக சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. இந்த பெண் வலைப்பதிவரின் படைப்புகளை கவனிக்க கீழ்காணும், இணைய முகவரியை சுட்டுங்கள் :-



கணைகள் என்ற வலைப்பதிவில் வெறும் பூவிலான கணைகளை மட்டும் வீசாமல், அடிக்கடி இதுபோன்ற ஏவுகணைகளையும் வீச வேண்டும் என்பது எனது ஆவல்.
வலைப்பதிவர் நண்பர்கள், இந்த் பிரபாகரன் கண்ட புலிப்பெண்ணின் கணைகளை தொடர்ந்து ஆதரிக்க வேண்டுமென்றும் முன்மொழிகிறேன்.