2.2.08

லண்டன் வாழ் மலேசியத் தமிழர்களின் அடையாள போராட்டம் இனிதே நடைப்பெற்று முடிவுற்றது....



நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி,திட்டமிட்டபடி லண்டன் வாழ் மலேசியத் தமிழர்கள் லண்டன்,10,டவ்னிங் சாலையில் அமைந்துள்ள பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்களின் இல்லத்திற்கு முன்பு கூடி,அமைதிப் போராட்டம் நடத்தினர்.

இந்து உரிமைப் பணிப்படையின் தோற்றுனரும்,தலைவரும் ஆன திரு.வேதமூர்த்தி அவர்களின் தலைமையில் இவ்வடையாள போராட்டம் நடைப்பெற்றது.சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்று சற்று நேரத்திற்கு முன்பு நாம் தொடர்பு கொண்ட லண்டனில் உள்ள மலேசியத் தமிழரின் மூலமாக அறிய வருகின்றது.

இவ்வடையாள போரட்டத்தின் முடிவில்,நாம் பெரிதும் எதிர்ப்பார்த்ததைப் போல் பிரிட்டன் பிரதமர் அவர்கள் நேரில் வந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொள்ளாத போதிலும்,அவரின் பிரதிநிதி மனுவைப் பெற்றுக் கொண்டாரென அறிய வருகிறது.இவ்வடையாள போரட்டத்திற்கு பிரிட்டன் காவல் துறை அனுமதி அளித்தது மட்டுமல்லாமல்,போராட்டத்தின் இறுதி வரையிலும் பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.(மலேசிய காவல் துறை இவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்)

பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து மாலை 3 மணி அளவில் மலேசியத் தமிழர்கள்,திரு.வேதமூர்த்தி அவர்களின் தலைமையில் பிரிட்டனுக்கான இந்திய தூதரகத்தில் ஒன்று கூடி,பிரிட்டனுக்கான இந்திய தூதர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.பிரிட்டனுக்கான இந்திய தூதர் அவர்கள்,மலேசியத் தமிழர்களை இன்முகத்தோடு வரவேற்று,அவர்களின் கோரிக்கைகளை மிக கரிசணையாக கேட்டுக் கொணடார் எனவும் தெரிய வருகிறது.

மலேசியாவின் அம்னோ தலைமையிலான இனவாத அரசினால் நடத்தப்படும் உரிமை மீறல்களையும்,மலேசியத் தமிழர்களுக்கு எதிராக கையாளப்படும் மறைமுக இன அழிப்பையும் தடுத்த நிறுத்த பிரிட்டன் மற்றும் இந்திய அரசாங்கங்களின் தலையீட்டை கோரி இம்மனு அளிக்கப் பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல்,காட்டுச்சட்டமான இசா(ISA)வின் கீழ் விசாரனை இன்றி சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்து உரிமை பணிப்படையின் தலைவர்களை விடுதலை செய்வதற்கு பிரிட்டன் மற்றும் இந்திய அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2007 ,நவம்பர் 25ஆம் தேதி, நடைப்பெற்ற மாபெரும் போரட்டத்திற்கு பின்பு,உலக நாடுகள் மலேசிய தமிழர்களின் போரட்ட நியாயத்தை ஓரளவேனும் புரிந்து கொண்டுள்ளன என தெரியவருகிறது.பிரிட்டன் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுப்பட்ட பின்பு,இன மோதல்கள் முற்றி,இன்று உள்நாட்டு போரில் சிக்கியிருக்கும் இலங்கையைப் போல் மலேசியாவும் ஆகாமல் இருக்க,பிரிட்டன்,இந்திய அரசாங்கங்களின் தலையீடு மிக அவசியமாகிறது.

இலங்கையில் எப்படி உரிமைகள் மறுக்கப்பட்டு,ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் ஆயுதத்தை தூக்கினார்களோ,அதே நிலை மலேசியாவிலும் எற்படலாம்.அகிம்சை போரட்டத்தை உதாசினப்படுத்தி திலிபனைக் கொன்றது கொலைவெறி இலங்கை அரசு;அதன் பின்புதான் சுதந்திர வேட்கை அதிகமாகி விடுதலைப் போர் உக்கிரமானது.அதேப்போல் இன்று நடக்கும் அகிம்சை வழியிலான் எமது உரிமைப் போரை ஒடுக்க நினைத்து மலேசிய அரசு பின் விளைவுகளை மோசமாக்கிக் கொள்ளாது என நம்புவோம்.

உரிமைப்போர் தொடங்கி விட்டது,
அடைவதற்கு உலகளவு உரிமை உள்ளது,
விடுவதற்கு உயிரைத்தவிர வேறொன்றும் இல்லை!!

மக்கள் சக்தி வெல்லும்!!!

No comments: